தூமணி மாடம்

This entry is part 1 of 20 in the series 23 பெப்ருவரி 2014

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்
தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையில் இது ஒன்பதாம் பாசுரமாகும். மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று எழுப்பும் பெண்கள் இப்போது உடைமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உரிமை என்று கிடக்கின்ற ஒருத்தியை எழுப்புகிறார்கள்.
உள்ளே ஒருத்தி படுத்துக் கொண்டிருக்கிறாள். எந்தக் கவலையுமின்றி உறங்குகிறாள். ஏன் தெரியுமா? அவள் தன்னைச் சொத்தாகவும் தனக்கு உரிமை உடையவனாக பெருமாளையும் கருதுகிறாள். அதனால் தன்னைக் கொண்டு போவது அவன் கடமை என்று அவள் கவலையின்றி உறங்குகிறாள்.
ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பகவானுக்கும் பாகவதர்களுக்கும் இடையே 9 சம்பந்தங்களைக் கூறுவார்கள்.
அவையாவன:
1. தந்தை—தனயன்
2. இரட்சிப்பவன் —இரட்சிக்கப்படும் பொருள்
3. சேஷன் —சேஷி
4. நாயகன்—நாயகி
5. அறிபவன்—அறியப்படும் பொருள்
6. சொத்துக்குரியவன்—சொத்து
7. சரீரி—சரீரம்
8. தாங்குகின்றவன்—தாங்கப்படும் பொருள்
9. போகத்தை அனுபவிப்பவன்—போகப் பொருள்
10. இவற்றில் இது ஆறாவது சம்பந்தமாகும்.
”என்னை ஸ்ரீ இராமபிரான் வந்து அழைத்துச் செல்வானாகில் அது அவனுக்குப் பெருமை”
என எண்ணி சீதாபிராட்டி இருந்தது போல அவள் உள்ளேகிடக்கிறாள்.
சீதை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறாள். அச் சிறையிலிருந்து மீள, அரக்கரை வதம் செய்வதும், இலங்கையைத் தாண்டி இராமன் இருக்குமிடம் செல்வதும் அவளுக்கு ஒன்றும் அரிதான செயலன்று. அவளே அனுமனிடம் சொல்கிறாள்
”அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
எல்லை நீத்த உலகங்கள் யாவையுமென்
சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன்”.
எனவே அது இராமனுக்குக் கௌரவம் அன்று என எண்ணி
அவள் வாளாவிருக்கிறாள். உடைமையைக் கொண்டு போவது உடையவனின் கடமையன்றோ? அதேபோல இவளும் கண்ணன் வந்து தன்னைக் கொண்டு போவான் எனக் கிடக்கிறாள்.
அவள் உறங்கிக் கொண்டு இருப்பது தூமணி மாடமாகும். எந்த உயரமான இடத்திலிருந்து பார்த்தால் எல்லாம் தெரியுமோ அதை மாடம் என்பார்கள்.
அவள் இருப்பது மணி என்னும் இரத்தினங்களான மாடமாகும். அதுவும் தூய்மையான இரத்தினங்களால் அமைக்கப்பெற்றதாகும்.
இரத்தினங்களில் இருவகை உண்டு. அவை த்ராஸம், என்றும் அத்ராஸம் எனவும் வழங்கப்படும். இரத்தினத்தில் இருக்கும் குற்றமான தன்மைக்கு த்ராஸம் எனப் பெயர் அதை நீக்கிப் பிறகு நகை செய்வார்கள்.
அவள் இருப்பது தூமணி மாடம் என்பதால் அது குற்றம் சிறிதும் இலாத இரத்தினங்களால் அமைக்கப்பட்டது என்பதும் விளங்கும். கண்ணன் போரில் பல அரசர்களை வென்றான். அப்போது பொன். இரத்தினம், வைரம் போன்றவை நிறைய கிடைத்தன. அவற்றில் தோஷமில்லாத இரத்தினங்களைத் தன் அடியவர்களுக்குக் கொடுத்தான். அவன் எப்போதும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கு உயர்ந்த பொருள்களைத்தானே கொடுப்பான்.அப்படிப்பட்ட இரத்தினங்களால் ஆன மாடம் அது.
நம்மாழ்வார் பெருமானின் தொலைவில்லி மங்கல மாளிகையைத் ’துவளில் மாமணி மாடம்’ என்று [6-5-1] அருளிச் செய்வார்.
துவளில் மாமணி மாட மோங்கு
தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர் உமக்கு
ஆசையில்லை விடுமினோ
உள்ளே அவள் உறங்குவதை வெளியில் இருந்து பார்க்கிறார்கள். அந்த மாடத்தைச் சுற்றித்தீபங்கள் பிரகாசமாய் எரிந்துகொண்டிருக்கிறதாம். ’சுற்றும் விளக்கெரிய’ என்று பாடுகிறார்கள். இரத்தினங்களின் ஒளியாலே எங்கும் ஒளி வெள்ளம் பாய்ந்திருக்க தீபங்களின் வெளிச்சத்தாலும் அம்மாடம் பிரகாசமாய் இருக்கிறதைப் பார்க்கிறார்கள்.
’வெளியே கண்ணனைக் காணாததால் எங்கள் மன விளக்குகள் எல்லாம் இருண்டிருக்க உள்ளே மட்டும் பார்க்குமிடமெங்கும் தீபங்கள் ஒளி வீசுகின்றனவே” என நினைக்கிறார்கள்.
திருச்சித்திர கூடத்தில் இராமன் சீதையின் கரம் பற்றி உலாவி வருகையில் அந்த இடம் பிரகாசமாய் இருந்தது போல மாடத்தின் உள்ளே ஒளி வீசுகிறது என எண்ணுகிறார்கள்.
உள்ளிருந்து மணமும் இப்போது வீசுகிறது. புகை காணவொண்ணாதே பரிமளம் வீசுகிறதாம். அவள் அம்மணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். நாங்களெல்லாம் இங்கே விரக தாபத்தால் வெந்து கொண்டிருக்கிறோம். நீ அகில் சந்தனம் வாசனையை அனுபவிக்கிறாயே, வந்து கதவைத் திற என்கிறார்கள்.
கண்ணனையே தலைவனாக எண்ணிய ஒரு தலைவி மாலைப் பொழுதில் தனியே இரங்குகிறாள். நம்மாழ்வார் நாயகி பாவத்தில் பாடுகிறார்.
ஆருக்கென் சொல்லுகேன் அன்னைமீர்காள்
ஆருயிர் அளவன்றிக் கூர்தண்வாடை
காரொக்கும் மேனிநம் கண்ணன் கள்வன்
கவர்ந்த அத்தனி நெஞ்சம் அவன்கண் அஃதே
சீருற்ற அகிற்புகை யாழ்நரம்பு
பஞ்சமம் தண் பசுஞ்சாந்தணைந்து
போருற்ற வாடை தன்மல்லிகைப்பூ
புதுமணம் முகந்து கொண்டு எறியுமாலோ
[9-9-7]
இப்படிச் சுற்றிலும் விடிந்தபின்னும் ஏன் விளக்கை ஏற்றி வைத்திருக்கிறாள் தெரியுமா? அவன் வந்தால் ஏற்ற முடியாதாம்.
அப்படித் தீபங்களை ஏற்றி வைத்து மணம் கமழும் படுக்கையில் அவள் கண் வளர்கிறாள். தூங்குதல் என்பதைவிடக் ‘கண் வளர்தல்’ என மொழிவது மங்கலச் சொல்லாகும். அந்தப் படுக்கையும் துயிலணையாம். அதாவது படுத்தவர்களைத் துயிலப் பண்ணும் படுக்கையாகும்.
’வனம் சென்ற இலக்குவன் போல் நாங்கள் உறங்காமைக்குச் சாட்சியாக இருக்க நீ உறங்குவதற்குச் சாட்சியாக இருக்கிறாய். உன் படுக்கையான மென்மலர்ப் பள்ளி எங்களுக்கு வெம்பள்ளியாகவன்றோ இருக்கிறது’ என்கிறார்கள்.
திருவாய்மொழியில் ஒரு பாசுரம் [9-9-4].
தலைவனைப் பிரிந்த தலைவிக்கு குளிர்ந்த காற்றும் சுடுகிறது. நிலவும் வெம்மையாக இருக்கிறது. மென்மையான படுக்கையும் வெம்மையான படுக்கையாகத் துன்புறுத்துகிறது.
வாடை தண்வாடை வெவ்வாடையாலோ
மேவு தண்மதியம் வெம்மதியமாலோ
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளியாலோ
தந்தையார் பெரியாழ்வார் “படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டான்” என்று பகவான் பள்ளி கொண்ட அழகை அனுபவித்தாற்போல அவர் மகளான ஆண்டாள் பாகவதர் பள்ளிகொண்ட அழகைக் ‘கண் வளரும்’ என்று அனுபவிக்கிறாள்.
அடுத்து உள்ளே உறங்குபவளை ஓர் உறவு முறை வைத்து மாமான் மகளே என அழைக்கிறார்கள். தலைவியாகவும் தோழியாகவும் இதுவரை எண்ணியவர்கள் விடமுடியாத உறவாகக் கூப்பிடுகிறார்கள். இச்சொல் இப்பாசுரத்தின் உயிர்நாடியான வார்த்தை என்பார்கள்.
ஆண்டாள்
“திருவாய்ப்பாடியிலே ஒரு ப்ராக்ருத சம்பந்தம் தனக்கு உஜ்ஜீவனமென்றிருக்கிறாள்”
என்பது பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியானம். ஆயர்களுடன் தேக சம்பந்தமான உறவை அவள் விரும்புகிறாள்.
கூரத்தாழ்வானுக்கு ஒரு வருத்தம் உண்டாம். முதலியாண்டான், எம்பார் எனும் ஆச்சாரியார்களுக்கு உடையவர் இராமானுசரிடம் தேக சம்பந்தம் உண்டு. ஆனால் கூரத்திற்கு இல்லை. அதற்காக அவர் வருந்துவாராம்.
”ஸ்வாமியோடு ஒரு குடல் துவக்கு இல்லையே அடியேனுக்கு” என்று அவர் கூறுவாராம்.
’தாயே தந்தையென்றும் தாரமே கிளை மக்களென்று
நோயே பட்டொழிந்தேன்”
என ஆழ்வார் அருளினாலும் விடத்தக்க உறவுகளும் அன்புடையவர்களாக இருக்கையில் விரும்பத் தக்கன என்பது புரிகிறது.
மாமான் என்பது மாலாகாரர் என்பவரைக் குறிக்கும் என்றும் சொல்வதுண்டு. மதுராவுக்குக் கண்ணனும் பலராமனும் வந்தபோது மாலாகாரர் அவர்களைத் தன் மாளிகையில் எழுந்தருளப் பண்ணி அன்போடு ஆராதித்தார். அவரும் பெரியாழ்வார் போல கிருஷ்ணனிடம் பேரன்பு கொண்டவர். அதனால் அவரையும் ஆண்டாள் மாமான் என்கிறாளாம்.
உறவு முறை சொல்லி அழைத்தும் உள்ளே இருப்பவள், “கதவின் தாளை வெளியில் இருந்தே திறக்கலாம்; நீங்களே திறந்து கொள்ளுங்கள்” என்று கிடக்கிறாள்.
ஆனால் இவர்களோ ’மணிக்கதவம் தாள் திறவாய்’ என்று கேட்கிறார்கள். ஏனெனில் அதுவோ தூமணி மாடமாகும். இவர்களுக்கு இரத்தினங்களின் ஒளியில் கதவும் தெரியவில்லை; தாளும் தெரிய வில்லை.ஆகையால் ’நீயே வந்து திறவாய்’ என்கிறார்கள்.
இவர்கள் கதவு திறந்திருந்தாலும் தாங்களாக உள்ளே புகாதவர்கள். பிற பாகவதர்களை முன்னிட்டுக் கொண்டே உட்புகக் கூடியவர்கள்.
’செய்யாதன செய்யோம்’ என்று முன்னமே சொல்லி விட்டார்கள். மேலும் இவர்கள் வேதம் வல்லார்களைக் கொண்டு வின்ணோர் திருப்பாதம் பணிபவர்கள் அல்லவா?
. தங்கள் இல்ல வாசலிலே வந்து இப்படி எழுப்பியும் நெஞ்சிலே இரக்கமில்லாமல் இவள் இப்படிக்கிடக்கிறாளே என்று எண்ணிக் கொண்டே அவளுடைய தாயார் பக்கத்தில் நிற்கிறாள். அதை வெளியில் இருப்பவர்கள் பார்க்கிறார்கள். தாயைப் பார்த்து ‘மாமீர் அவளை எழுப்பீரோ’ என்கிறார்கள்.
உறங்குபவளிடத்தில் கொண்ட அன்பு தாயிடத்தும் பாய்கிறது. இவர்கள்
“அடியாரடியார் தம் அடியாரடியார் தமக்கு அடியாரடியார் தமதடியாரடியோங்களே’
என்றிருப்பவர்கள். எனவே மாமீர் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவளும் எழுப்பவில்லை. இவர்களுக்குக் கோபம் வருகிறது.
எனவே உன்மகள்தான்
“ஊமையோ, அன்றிச் செவிடோ, அனந்தலோ,
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
என்று கேட்கிறார்கள்.
இராம காதையில் கூனி முதலில் வந்து சொல்லும் போது
“இராமனைப் பெற்ற எனக்கு இடர் உண்டோ” என்பாள் கைகேயி. இராமனைத் தன் மகன் எனச் சொன்ன அதே வாய் கூனியின் போதனையால் மனந்திரிந்த பின்னர் இராமனை அந்நியனாக்கி ’சீதை கேள்வன்’ எனச் சொல்லும்.
அதுபோல இவர்களும் இப்போது உன் மகள் என்று சொல்கிறார்கள்.
’நாங்கள் இவ்வளவு சொல்லியும் உன்மகள் பதில் ஏதுமே சொல்லவில்லையே; அவள் ஒருவேளை ஊமையோ?
அல்லது நாங்கள் இவ்வளவு கூப்பிடுகிறோமே; அது அவள் காதில் விழவில்லையோ? அவள் ஒருவேளை செவிடோ?
அல்லது வாய் பேசக் கூடியவளாக இருந்தும் காது கேட்கக் கூடியவளாக இருந்தும் சோம்பலால் சும்மா இருக்கிறாளா’

”இல்லை; பெருந்துயிலிலே அவள் ஆழ்ந்து கிடக்குமாறு யாரேனும் மந்திரம் போட்டு விட்டார்களா”
என்றெல்லாம் கேட்கிறார்கள். ஓர் ஐயம் எழலாம். உறங்குவதற்கு மந்திரம் உண்டா?
அசோக வனத்தில் காவலிருக்கும் அரக்கியர்கள் உறங்கினால்தானே ஆஞ்சநேயன் சீதையிடம் பேச முடியும். எனவே அவர்களைத் தூங்க வைக்க அனுமன் ஒரு மந்திரம் செய்ததாகக் கம்பன் பாடல் எழுதுவான்.
காண்டற்கு ஒத்த காலமும் ஈதே; தெறுகாவல்
தூண்டற்கு ஒத்த சிந்தனையினாரும் துயில்கில்லார்
வேண்டத் துஞ்சாரென ஒரு விஞ்சை வினை செய்தான்
மாண்டு அற்றாராம் என்றிட எல்லாம் அயர்வுற்றார்.
இப்படி இவர்கள் சினத்துடன் சில வார்த்தைகள் பேசியவுடன் உள்ளே இருப்பவளின் தாயார்,
“உங்களுக்கு இவளைப் பற்றித் தெரிய வில்லையா? இவள் கண்ணன் மீது மயக்கமாகக் கிடக்கிறாள். இவளது மயக்கம் தீர நீங்கள் எல்லாரும் நாராயணனின் திரு நாமங்களைச் சொல்லுங்கள்.”
என்று பேசுகிகிறாள்.
ஏனெனில் உறக்க மந்திரத்திற்கு எதிர் மந்திரம் திருமந்திரம் அன்றோ?
உடனே இவர்கள் ‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்று பாடுகிறார்கள்.
மாமாயன் என்பது அவனின் ஆச்சரியமான குணத்தைக் காட்டும் திருப்பெயராகும்.
திருப்பாவையில் ‘மாயனை மன்னு’ ‘மாமாயன் மாதவன்’ மாயனைப் பாடேலோரெம்பாவாய்’ அறைபறை மாயன்’ என நான்கு இடங்களில் ஆண்டாள் நாச்சியார் பாடுகிறார். நான்கு வேதங்களை மனத்தில் எண்ணியதால் அவ்வாறு அருளியதாக ஆன்றோர் கூறுவார்கள்.
அவனுடைய ஆச்சரியமான குணங்களையும் அதனால் அவன் செய்த விளையாட்டுச் செயல்களையும் சொல்லி மாளாது.
கிருஷ்ணாவதாரம் எடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. ஆனால் பரமபதத்தில் இருக்கும் நித்ய சூரிகள் ’வேண்டாம், வேண்டாம், நாங்கள் உன்னை பிரிய மாட்டோம்” என்கிறார்கள். பகவனோ மற்றும் ஒரு அவதாரம் எடுத்தாக வேண்டும். என்ன செய்தான் தெரியுமா? அவர்களையும் திருப்திப் படுத்தி அவதாரம் செய்தான். அங்கேயே இருப்பதுபோல் செய்து அவதாரச் செயலையும் முடித்தானாம்.
அதாவது பரமபதத்தில் கொலுவீற்றிருக்கும் பெருமானை மாலைகளால் அலங்கரித்து தீப தூபங்கள் காட்டுகிறார்கள். நறுமணப் புகை எங்கும் கமழ்ந்து கன்ணை மறைக்கிறது. அது அடங்கிக் காட்சி தெரிவதற்குள், பூவுலகு வந்து, வெண்ணெய் தின்று, குடக் கூத்து ஆடி எருதுகளை அடக்கி நப்பின்னையை மணந்து, கிருஷ்ணாவதாரத்தையே எம்ப்பெருமான் முடித்து விடுகிறார் அப்படிப் பட்ட மாயங்கள் செய்யும் மாமாயன் அவன்.
இதோ நம்மாழ்வார் அருளும் பாசுரம் :
’சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டியந்தூபம் தரா நிற்கவே அங்கோர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே’
இன்னும்.
”பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்தவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்றுருக்கி உண்கின்றஇச்
சிறந்த வான் சுடரே! உன்னை என்றுகொல் சேர்வதுவே”
என்று ஆழ்வார்களையும் மனமுருகச் செய்யும் மாமாமாயன் அல்லவா அவன். மாமாயன் என்பது சௌலப்யமான எளிய குணத்தைக் காட்டுகிறது. அக்குணம் குருகுலவாசம் பண்ணின இடம் மகாலட்சுமியாகும். அதை மாதவன் எனும் பெயர் காட்டுகிறது.
மா என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். தவன் எனும் சொல் அவரது நாதனைக் குறிக்கும். எனவே அவன் மாதவன்.
இப்படி மாமாமயன் என்பது எளிமையையும், வைகுந்தன் என்பது மேன்மையையும் குறிக்கின்றன. இரண்டுக்கும் இடையிலே திருமகளைக் குறிக்கும் மாதவன் எனும் திருநாமம் வந்து இணைத்து வைக்கிறது.
”அவன் அவதாரகாலத்தில் எப்பொழுதும் மாயைகளுடன் இருப்பவன். திருமகளோடு சம்பந்தமுடையவன். நமக்கெல்லாம் ஸ்ரீவைகுந்தத்தைக் கொடுப்பவன். இவற்றையெல்லாம் சொல்லி
விட்டோம். இன்னும் “பேருமோராயிரம் பிற பல உடைய எம்பெருமான்” எனப்படும் எல்லாத் திரு நாமங்களையும் சொல்லி விட்டோம். உன் மகள் எழுந்திருக்காததுதான் இங்கே குறை. மற்றபடி நாங்கள் சொல்லாத குறையில்லை’ என்கிறார்கள்.
’நாமம் பலவும் நவின்று மாமீர் அவளை எழுப்பீரோ’ என்று கூட்டியும் பொருள் கொள்ளலாம்.
இப்பாசுரம் திருமழிசை ஆழ்வாரை எழுப்பும் பாசுரமாகும். அவர் அவருக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்க்கலாம்.
மாமான் மகளே என்று ஆண்டாள் ஆயர்குடியில் ஒரு தேக சம்பந்தம் வேண்டுகிறாள். ஆண்டாளுக்கும் திருமழிசை ஆழ்வாருக்கும் தேக சம்[பந்தம் உண்டு. ஆண்டாளாகிய இலட்சுமி ப்ருகு குலத்தைச் சேர்ந்தவர். ஆழ்வாரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்.
தூமணி மாடம் என்பது உள்ளே இருப்பதை வெளியில் காட்டும் தன்மை கொண்டதாகும். ஆழ்வாரும் திருப்பெரும்புலியூரில் தம் உள்ளிருந்த திருமாலை வெளியில் காட்டினார்.
சுற்றும் விளக்கெரிய என்பதற்கேற்ப இவர் தன்னைச் சுற்றிலும் இருந்த சாக்கியம், சமணம், சைவம் என்று எல்லா மதங்களும் சென்று ஞான விளக்கைப் பெற்றார். பெருமாள் துயிலணை மேல் பள்ளி கொண்டிருக்கும் திவ்யதேசங்களான கச்சி. குடந்தை ஆகியவற்றின் மீது சயனப் பதிகங்கள் பாடினார்.
ஊமையோ————பெரும்புலியூரில் வேதம் ஓதிக் கொண்டிருந்த அந்தணர்கள் மறந்ததை ஊமைபோல் வாயினால் பேசாமல் ஒரு கறுப்பு நெல்லைப் போட்டுக் காட்டினார்.
செவிடோ ———அதே பெரும்புலியூரில் அந்தணர்கள் இவரை ஏச இவர் செவிடு போல காதில் வாங்காமல் வாளாவிருந்தார்.
அனந்தலோ——–சோம்பலாய் இருத்தல். பிற விஷயங்களில் நெஞ்சம் செல்லாமல் சோம்பியிருந்தார்.
“தொழில் எனக்கு தொல்லைமால் தன் நாமம் ஏத்தப் பொழுது எனக்கு மற்றவை போதும்” எனப் பாடியவர்.
எனவே இது திருமழிசை ஆழ்வாரை எழுப்பும் பாசுரம் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

.

Series Navigationபூர்வீகச் செவ்வாய்க் கோளில் மூன்றிலோர் பகுதியை மாபெரும் கடல் சூழ்ந்திருந்ததுமருமகளின் மர்மம் – 17தமிழ்த்தாத்தா உ.வே.சா.: கற்றலும் கற்பித்தலும் -1நீங்காத நினைவுகள் – 35 ஜோதிர்லதா கிரிஜாபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​- 47ஹாங்காங் தமிழ் மலர்திண்ணையின் இலக்கியத் தடம் – 23குலப்பெருமை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *