தூரிகையின் முத்தம்.

Spread the love

எல்லா ஓவியங்களும்

அழகாகவே இருக்கின்றன.

வரைந்த தூரிகையின்

வலிமையும் பலஹீனமும்

நகைப்பும் திகைப்பும்

ஓவியமெங்கும்

பரவிக் கிடக்கின்றன.

 

பல இடங்களில்

தூரிகை தொட்டுச்

சென்றிருக்கிறது.

சில இடங்களில்

தூரிகை துள்ளிக்

குதித்திருக்கிறது.

 

சில இடங்களில்

தூரிகை எல்லை தாண்டி

நடந்திருக்கிறது.

 

இன்னும் சில இடங்களில்

தூரிகையின் கண்ணீர்

அது விழுந்த

இடத்தைச் சுற்றிலும்

கரைந்த மேகமாய்

மிதந்து நிற்கிறது.

 

தூரிகையின்

ஆயிரம் விரல்களின்

பேரிசை முழக்கம்

விழுந்த ஓவியத்தில்

எழுந்து கேட்கிறது.

எல்லா ஓவியங்களும்

அழகாகவே இருக்கின்றன.

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4)விழிப்பு