தெலுங்குச்சிறுகதைகள்—-ஓர் அறிமுகம்

mukujagan

’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து’ என்று பாடினார் மகாகவி பாரதியார். தெலுங்கு ஓர் அருமையான இனிமையான மொழி. எல்லா மொழிச் சிறுகதைகளுக்கும் உள்ள சிறப்புத் தன்மைகளைத் தெலுங்குச் சிறுகதைகளிலும் காண முடிகிறது.

’தெலுங்குச் சிறுகதை பிறந்து 75 ஆண்டுகள் ஆகின்றன” என்று டி. ராமலிங்கம் குறிப்பிடுகிறார். 1910—இல் ‘திருத்தம்’ எனும் பெயரில் முதல் சிறுகதை வெளியானது. அதை எழுதியவர் குரஜாடா அப்பாராவ் என்பவர் ஆவார்.

(மு. கு. ஜகன்னாதராஜா)

அவரை இன்றைய தெலுங்குச் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் எனக்கூறலாம்.

palakummi

பாலகும்மி பத்மராஜு என்பவரின் கதையில் பல நவீனப் போக்குகளையும், புதிய சித்தரிப்புகளையும் பார்க்க முடிகிறது. ஒரு பெண்ணின் மனநிலையை முழுக்க முழுக்கச் சொல்லும் கதைதான் ‘எதிர்பார்க்கும் முகூர்த்தம்’. இக்க்கதையில் சாந்தா எனும் பெண்ணின் உணர்வுகள் நன்கு பிரதிபலிப்பதைக் காணலாம்.

சாந்தா சாதாரணமான ஓர் அழகி. அவள் தன் வாழ்வில் ஒரு முக்கியமான சம்பவம் நடக்கும்; அதனால் அவளின் வாழ்வே பெரும் மாற்றமடையும் என்று நம்பிக் கொண்டிருந்தாள். அந்த முகூர்த்தத்திற்காகக் காத்திருந்தாள். லட்சுமிகாந்தராவ் என்பவனுக்கும் அவளுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணத்தை அவள் அந்தச் சம்பவமாகக் கருதவில்லை. எனவே திருமணத்திற்குப் பிறகும் அவள் அந்த முகூர்த்தத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

திருமணத்தின் போதே காந்தராவின் தம்பி வெங்கடம் என்பவன் அனைவரிடமும் கலகலப்பாக பழகிக் கொண்டிருந்தான். அவன் தன்னைக் கவர்வதற்காகத்தான் அப்படிச் செய்வதாக சாந்தா நினைத்தாள். சாந்தா சென்னைக்கு கணவனுடன் தனிக் குடித்தனம் போனாள்.

ஒருநாள் வெங்கடம் எழுதிய கதைகளைக் கொண்டுவந்த காந்தராவ் சாந்தாவிடம் அவற்றைப் படிக்கச் சொல்ல அவள் மறுக்கிறாள். ‘நீ படிக்கமாட்டாய்’ என்றுதான் வெங்கடமும் எழுதி உள்ளான் என்று அவள் கணவன் பதில் கூறுகிறான். கணவன் போனபிறகு அவள் அவற்றைப் படிக்கிறாள். எல்லாமே காதல் கதைகள். ஒவ்வொரு கதையும் படிக்கும்போது வெங்கடத்துக்குப் பல பெண்களின் பழக்கம் இருக்கும் என அவள் எண்ணுகிறாள்.

ஒருநாள் வெங்கடம் வருகிறான். சாந்தாவின் கணவன் தன் நண்பனுக்காக அன்றிரவு மருத்துவமனையில் சென்று தங்க வேண்டியதாகிறது. இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது

’அந்தக் கதைகளெல்லாம் படிச்சேன்’ என்கிறாள். பதிலுக்கு அவன்

‘என் கதைகளெல்லாம் ஒழுக்கக் கேட்டைப் போதிக்கும். ஆகையால் குலமகளிர் படிக்கக் கூடாது’ என்கிறான்

.      அவளோ பதிலுக்கு”மனசைக் கட்டுப்படுத்த முடியாதவர்களெல்லாம் ஒழுக்கக் கேட்டை நீதி என்பார்கள்” என்கிறாள். அவனும் விடாமல்,

”மனசைக் கட்டுப்படுத்தமுடியும் என்கிறவர்கள். அப்படி இல்லாதவர்களைப் பார்த்துப் பொறாமைப் பாடுகிறார்கள்” என்கிறான்.

”உன் சிநேகிதிகளைப் பார்த்து நான் பொறாமைப் படவில்லை” என்று சாந்தா பதிலுக்குக் கூறுகிறாள். அவன் மறுபக்கம் திரும்பிச் சொல்கிறான்

“என்னோடு கூடரயிலில் வந்த ஒரு குலமகள் உயிரிருக்கும்வரை என்னை விடமாட்டேன்.”

என்று பிடித்துக் கொள்ள எல்லோரும் எங்களையே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்”

சாந்தா எழுந்து அவன் பின்னால் சென்று முதுகில் கை வைக்கப் போகும்போது அவன் சட்டென்று திரும்ப அவள் மயக்கமாகிறாள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துப் படுக்க வைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்கிறான். அவள் அழுகிறாள்.

’உன்கதையில் வரும் பெண் போல ஆகிவிடுவேனோ என்ற பயம் வந்துவிட்டது. ஏதோஒரு தப்புச் செய்தால் அந்த அடிபட்டு மனம் திரும்பும் என்று நினைத்தேன். ஆனால் துணிவு இல்லாமல் போயிற்று’. என்கிறாள்.

அவனோ ”தப்புச் செயல் என்று நினைக்கும் வரைக்கும் நீ அப்படிப்பட்ட எந்த செயலும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. நான் போகிறேன். இந்த விஷயத்தைக் குறித்து எதுவும் சிந்திக்காதே.”என்று கூறிவிட்டுச் சென்று விடுகிறான்.

ஏதோ பிரம்மாண்டாமாக நடக்கப் போகிறதென்று கனவு காணும் பெண்ணின் மனநிலை பற்றிய அருமையான கதை இது. பெண்ணின் மன நிலைகளை நன்கு உணர்பவனாக வெங்கடம் பாத்திரம் நன்கு படைக்கப் பட்டிருக்கிறது. எந்தப் பாத்திரமும் காயப் பட்டுவிடாமல் கதாசிரியர் புதுவிதமாகக் கதை சொல்லி உள்ளார்.

இதுபோலப் பல கதைகள் சொல்லிக் கொண்டே போகலாம். புர்ரா வெங்கட சுப்பிரமணியம் எழுதிய “பாரீஸ்” என்றொரு கதை. வெளி நாட்டுக் கலாசாரத்தில் ஊறிப் போய் உடன் படுத்த காதலனை விட்டு விட்டுத் தவறு செய்ய இருக்கையில் வேறொருவானால் இன்னும் சொல்லப் போனால் அவள் விரும்பியவானாலேயே திருத்தப்படும் கதை.

ராஜ்யலட்சுமி புதிதாக ஒரு வீட்டுக்கு வாடகைக்குக் குடி போகிறாள். இவளுக்கு முன் அவ்வீட்டில் குடியிருந்த இவள் பெயரையே உடையவளுக்கு ஒர் காதல் கடிதம் வருகிறது. பிரித்துப் படித்துப் பார்த்த ராஜ்யலட்சுமி எழுதியவனை போய்ப் பார்க்கிறாள். அவனுடைய காதலி அவனுக்குத் துரோகம் செய்துவிட்டுத் திருமணம் செய்ததைச் சொல்ல அவனோ இவளையே மணம் செய்து கொள்கிறான். இது “சாகசம்” என்னும் பெயரில் ’கொடவடிகண்டி குடும்பராவ்’ என்பவர் எழுதியது. இதில் ராஜ்யலட்சுமியின் மன உணர்வுகள் சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளன.

buchi-baabu-kathalu-2-500x500

புச்சிபாபுவின் ‘என்னைப் பற்றிக் கதை எழுத மாட்டாயா?” எனும் பெயரில் உள்ள கதை ஒரு கதாசிரியனின் உணர்வோட்டங்களைப் பிரிதிபலிக்கிறது. குமுதம் எனும் பெண் ’என்னைப் பற்றிக் கதை எழுத மாட்டாயா’ என்று கேட்டுக் கொண்டே இருக்கிறாள். கதாசிரியனுக்கு அவள் மீது ஈடுபாடு ஏற்படுகிறது. அவளுக்குத் திருமணமாகி விடுகிறது. அவள் வீட்டுக்கு அடிக்கடிப் போகும் அவன் தன்னை அவள் அழைக்க மாட்டாளா என ஒவ்வொரு தடவையும் எண்ணுகிறான். அவளோ அவனிடம் அவன் எதிர்பார்க்கும் மறுவினையைக் காட்டவில்லை. அவள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கும் போதும் கதை பற்றியே கேட்கிறாள்.

’ஆறு மணி அறிமுகத்துடன், அறு நூறு சொற்களில், என் உலகத்தையே தலைகீழாக்கி, என் வாழ்க்கையின் குறிக்கோளையே தாறுமாறாக்கி விட்ட குமுத்தைப் பற்றி என்ன எழுதுவது?’ என்று அவன் யோசிப்பதாக்க் கதை முடிகிறது. கதாசிரியன் அவளை எண்ணுவதும் மருத்துவ மனையில் அவளைத் தொடப் போகும்போது கூட அவள் கையை உள்ளே இழுத்துக் கொள்வதும் இயல்பாய் உள்ளன. பெரும்பாலான கதைகள் வாழ்வின் எல்லையைக் கடக்காமல் அதன் போக்கிலேயே செல்ல வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகின்றன.

வயதானவர்களின் மனப்போக்கைக் காட்டும் கதைதான் கோபிசந்த் எழுதி உள்ள ‘தந்தையரும்—மக்களும்’ எனும் கதை. மகனும் மருமகளும் எவ்வளவுதான் நன்றாய்க் கவனித்துக் கொண்டாலும் வெளியில் அவர்களைப் பற்றிக் குறை சொல்லும் ஒருவரைப் பற்றிய கதை இது. இதில் அவரின் மக்களின் உளவியல் சூழல் இக்கால நடைமுறைக்கு ஏற்ப உள்ளது.

பல கதைகளில் அழகுணர்வையும் உவமைகளையும் பார்க்க முடிகிறது. ஒரு தையல்காரன் பேசும் போது ‘ நீ பேசுறது என் உள்ளத்துல ஊசி கொண்டு தைச்சமாதிரி இருக்கு என்று பாலசந்தர் எழுதியிருப்பார். அவன் தொழிலுக்குத் தகுந்த உவமை அது.

அதே போல ஒரு பரிசலோட்டியைப் பற்றிய ஒரு கதையில், ’அக்கரையில் யாரோ மூங்கில் கழி போல உள்ள உருவம் அவசரப்பட்டுக் கத்திக்கொண்டிருந்தது” என்ற உவமையை மாதவபெத்தி கோகலே பயன் பயடுத்தி உள்ளார்.

”கையிலிருந்து நழுவிய நீர்த் துளி வாஷ் செய்த பக்கத்திலோடி நின்று அப்சரசின் மூக்குத்தியிலுள்ள அற்புத வைரம் போல, மின்சார விளக்கின் ஒள்யில் மின்னியது”

’பேசின் ஓரத்திலிருந்த நீர்த்துளி வைரம், தவம் செய்து பெற்ற ஒரே மகனை போக்கடித்துக் கொண்ட தாயின் கண்ணீர்த் துளி போல தரையில் உதிர்ந்து உடைந்தது”

’மனைவி கழுத்தில் தாலிப் பொட்டு போல அந்த இரண்டு பூட்டுகளுக்கும் சர்க்கார் சீல் போடப் படுகிறது’

’நூறு பச்சிளங் குழந்தைகள் ஒரே தடவையில் அழுதாற் போல கதவுகளுள் தொங்கிய மணிகள் முழுங்கத் தொடங்கின’

என்றெல்லாம் உவமைச் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சில கதைகளில் ஆங்காங்கே நகைச் சுவைகள் மின்னுவதையும் பார்க்க முடிகிறது. அவை கதை ஓட்டத்தைத் தடுக்காமல் கதையின் மையத்துக்கு வலு சேர்ப்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.

விசுவநாத சாஸ்திரியின் ‘லட்சுமி’ கதையில் அக்கிரமாகவும் அநியாயமாகவும் சம்பாதித்த ஒருவர் மாண்டு போகிறார். ”அதனாலென்ன? போகும்போது அவர் ஒரு பல் குச்சியோ, ஒரு பித்தளைச் செம்போ, ஒரு பலாப்பழச்சுளை, எதையும் எடுத்துக் கொண்டு போகாமல், சுயநலமில்லாமல், யாரையும் தனக்கு துணைக்கு அழைக்காமல் கண்களை மூடிக்கொண்டு, எப்படியிருந்தவர் கட்டிய வேட்டியைக் கூட வண்ணானுக்குக் கொடுத்துவிட்டு இகலோக யாத்திரையை முடித்துக் கொண்டார்” என்று வரும்போது நமக்கு சிரிப்புத் தானாக வருகிறது. அதே நேரத்தில் அப்பாத்திரத்தின் பண்பு நலன்களும் நமக்கு விளங்கி விடுகின்றன.

பல வேறு வைரக்கற்களாக மின்னும் தெலுங்குச் சிறுகதைகளில் ஓரிரண்டு கற்கள் மட்டுமே இடச் சுருக்கம் கருதி இங்கே காட்டப் பட்டுள்ளன. தெலுங்கு ஆழ்கடலில் மூழ்கினால் பல முத்துகளைக் காணலாம்.

{     கட்டுரைக்கு உதவிய நூல் : சாகித்திய அக்காதெமி வெளியிட்ட ‘தெலுங்குச் சிறுகதைகள்’ ; தொகுப்பு : டி. ராமலிங்கம், தமிழாக்கம் : மு. கு. ஜகன்னாதராஜா ]

Series Navigation