தெளிவு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 8 in the series 29 நவம்பர் 2020

குணா

குறுந்தொகை

யாரும் இல்லைத் தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு,தான் மணந்த ஞான்றே.

தெளிவு

“சாவு கிராக்கி. கார்ல வந்தா பறக்ரா மாதிரி நெனப்பா. சைடுல பாக்க மாட்ட” − காரின் வெளியிலிருந்து கேட்ட குரல். தவறு தம்மீதும் என்று தெரிந்தும் தெள்ளத்தெளிவாய் அடுத்தவர் மீது திருப்புதலும் ஒரு சாமர்த்தியம்.

காரில் அருகில் அமர்ந்திருந்த அருந்ததி உணர்ந்தாள்,  காரை ஓட்டும் பார்கவி ஒரு நிலையில் இல்லையென்று.

“ஏய் என்னாச்சு. அலைகழிக்கிற மனசோட கார் ஓட்றது நல்லதில்லை.
ஓரங்கட்டு” – அருந்ததி பார்கவியிடம் சொன்னாள்.

பார்கவி அருகில் காரை ஓரங்கட்ட,  இறங்கினார்கள். காரிலிருந்து சாவி எடுக்காமல் இறங்கியதில் அந்த அமைதியின்மை தெரிந்தது. காரின் சாவியை எடுத்துக்கொண்டு அருந்ததி இறங்கினாள்.

பழமுதிர்ச்சோலையில் பழச்சாறு வாங்கி கொண்டு அருகிலிருந்த பூங்காவினுள் நுழைந்தார்கள்.

“என்னாச்சு” – கையிலிருந்ததை சிப்பியபடி அருந்ததி கேட்டாள்.

“நாள் தள்ளிப்போச்சு” – பார்கவி கையிலிருந்த பழச்சாற்றை அளவளாவியபடி சொன்னாள்.

“அதுக்கு?” – பார்கவியைப் பார்த்தபடி கேட்டாள்.

 “எப்போ நடந்துச்சு”

“ரெண்டு மாசம் முன்னாடி. அந்த வீக்கெண்ட் பார்ட்டிக்கப்புறம்.”

“தெரிஞ்சா தெரியாமலா? குடிச்சிருந்தியா?”

“கொஞ்சமா… ரெண்டு பேரும்”

“பேசினயா? ஏதாவது குடும்ப சூழ்நிலையா இருக்கும்”

“ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறான். பேசணும்னு கிட்ட போனா ஒதுங்கி ஒதுங்கி போறான்… எதுவுமே நடக்காதது மாதிரி… எங்களுக்குள்ள எதுவுமே இல்லாதது மாதிரி…”

“உனக்காக வந்தானா… இல்லை… உன்னை நினைத்து வந்தானா? சொல்றத பார்த்தா உனக்குன்னு வந்தா மாதிரி இருக்கு. உன்னை நினைச்சு வந்திருந்தா உட்கார்ந்து பேசுவான். ஒதுங்கி போக மாட்டான். எனக்கென்னவோ அவன் பூனைன்னு தோணுது. போன வாரம் மஞ்சு கூட வெளியில பார்த்தேன். தப்புன்னு சொல்லலை… ஆனா சரியா படலை. அடுத்த வேலைய பாரு. அவன் கூட வாழ்க்கை நடத்த முடியாது.”

பார்கவியின் கண்களில் சிறு கலக்கம்.

“முன்னாடி நாள் பட பேசிருக்கியா…இல்ல பழகிருக்கியா? காதல் அது இதுன்னு”

“ப்ச்…ப்ச்”. பார்கவியின் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

“அப்புறம் எப்படிடி”

“தெரியல. பக்கத்துல தானேன்னு ஒன்னா டாக்சியில போனோம். அவன் வீடு முதல்ல… நடக்குற தூரம் என் வீடு. வந்துட்டு போயேன்னான்… எப்போதும் போல தானேன்னு நானும் போனேன். என்னைக்கும் இல்லாத அப்படி ஒரு க்ரஷ் அன்னைக்கு. யாருக்கும் தெரியலை தானேன்னு ஒரு உந்துதல். மறுக்க தோணல… தப்புன்னு தோணல. அவசரம் மட்டும் தான் இருந்தது. அவனுக்கும் அப்படித்தான்னு தோன்றிற்று. அடுத்த கட்டம் பற்றி நினைப்பே இல்லை. எல்லாம் முடிஞ்சதும் எப்போதும் போல எதுவும் நடக்காததாய் போய்விட்டேன். அப்புறம் சாதாரணமாத்தான் பேசிட்டிருந்தோம். எந்த ஒரு பேச்சும் இதைப்பத்தி இல்லை. நாள் தள்ளிப்போனதும் சுருக்குன்னுச்சு.”

அவளையே பார்த்தேன்… பார்த்துக்கொண்டிருந்தேன்… என்ன சொல்வதென்று எனக்கும் தோன்றவில்லை. அவள் அப்படிப்பட்டவளில்லை. பாரதிப்பெண். வாய்ச்சொல் வீரம் மட்டும் போதாதோ… எனக்குள்ளும் ஓர் அமைதி.

எனக்குள்ளே ஒரு சுழல். ஏதேனும் சொல்ல தோன்றிற்று.

“இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் பாகுபாடின்றி பேசி பழகும் போது எதுவும் தோன்றுவதில்லை… உள்ளுக்குள் எந்த உணர்வும் இல்லையென்று சொல்லிக்கொள்கிறோமோ? உண்மை அதுவல்லவோ? உள்ளுறங்கும் உணர்ச்சிப்பிரளயம் காத்திருக்கிறதோ? இது யார் குற்றம்? குற்றமா… இல்லையா? செய்தவற்றிற்கு சான்று இல்லையெனில் இங்கு எதுவும் குற்றமில்லை. அந்நி(ன்னி)ய தேசத்தில் இது ஒரு அங்கம். வேண்டும் பொழுது தெரிந்தே செய்கிறார்கள்… தடயமில்லாமல்… உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதில்லை. கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கட்டுக்கடங்காது வெளிப்படுவதில்லை. நியாயப்படுத்தவில்லை. இது தான் நிதர்சனம்.”

பார்கவி என்னையே உறுத்துப்பார்த்தாள். உன்னிடம் சொல்லியிருக்ககூடாதோ என்று நினைப்பதுவாய் உணர்ந்தேன்.

நான் தவறு செய்தேனோ சகியே…உன்னைக் காயப்படுத்தல் என் நோக்கமில்லை. என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை. தொடர்ந்தேன்.

“தோலும் தோலும் உரசுவது குற்றமில்லை. அதனால் உருவாகும் பரிணாமம் இங்கு குற்றமாக்கப்பட்டுள்ளது. சமாதானப்படுத்த சொல்லவில்லை. செய்யக்கூடாது என்பதில் எந்த மறுப்பும் இல்லை. அதன் புனிதத்தை கொச்சைப்படுத்த விருப்பமில்லை. விபத்தென்று வந்துவிட்டால்…?“

கர்ம சிரத்தையோடு நடந்து கொண்டிருந்த பெரியவர் எங்களையே உறுத்துப்பார்த்து நடந்தது போல பிரம்மை. குற்றமுள்ள நெஞ்சா…என்ன குற்றம் செய்திட்டாய் மனமே? – எனக்குள் எழுந்த கேள்வி சமாதானப்படுத்திற்று.

பார்கவிக்கும் தோன்றியிருக்க வேண்டும். எழுந்து கொண்டாள்.

பூங்காவை விட்டுச்செல்ல இது நேரமில்லை என்று தோன்றிற்று. நடக்கலாமே என்றேன். ஆமோதித்தது போல் நடக்கத் தொடங்கினாள்.

சில்லென்று தொட்டுச்சென்ற காற்று இதமாயிருந்தது. நேற்று பெய்த மழை இன்றும் தொடரும் போலிருந்தது. உள்ளும் புறமும் இதம் கண்ட உணர்வு.

பார்கவி ஏன் என்னிடம் சொல்ல வேண்டும்…இது யதர்த்தமா…இல்லை எனக்கும் ஒரு எச்சரிக்கையா…? – எனக்குள் எழுந்த கேள்விகளுக்கு பதில் என்ன?

உனக்கொரு நேரம் வந்தால் விழித்திரு என தட்டிச்சொல்வதாய் உணர்ந்தேன். யோசித்துப்பார்க்கிறேன். எனக்கும் இது நடந்துள்ளது. இந்த அளவிற்கில்லை. முன் கூட்டியே விழித்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணிற்கும் இந்த தருணம் வந்து தான் போகுமோ? இருந்தும் சமுதாய கட்டமைப்பை அலசிப்பார்க்கத் தோன்றியது.

பிறந்தது முதல் பொக்கிஷமாய் உணர்த்தி… ஒரு பாலினருக்கு இழப்பாய்… அடுத்தவர்க்கு அடைவதாய்… ஒரு சலனத்தை உருவாக்கியிருப்பது சரியா? இதைச் சிந்திப்பதும் தருக்கப்பிழையென்பர். இலக்கணம் சரிவரத்தான் உள்ளது. காலம் தொட்டு நடக்கும் ஒரு நிகழ்வு. வெவ்வேறு மட்டங்களில்… வெவ்வேறு கோணங்களில். ஒவ்வொரு தருணத்திலும் வெவ்வேறு விதமாய் பார்க்கப்பட்டு… மறைந்து பின் தருணம் பார்த்து விழித்தெழுகிறது அடுத்த கட்டம் நோக்கி…

காலக்கண்ணோட்டத்தில் யோசிக்கிறேன். எனக்கு உணரும் காலம் முன்னே கிராமத்து மரத்தடியில் கட்டி வைத்து பின் இருவரையும் கட்டி வைத்தது ஞாபகத்தில் வருகிறது. யாரென்று ஞாபகம் வரவில்லை. உணர்ந்த காலத்து பள்ளிப்பருவத்தில் படிப்பினும் பெரிது காதலென்று படிப்பினை உதறி சம்சாரியாகி நான் ஊர் செல்லும் போது நலம் விசாரிக்கும் நளினி வந்து சென்றாள். நிர்பயா.. கூட்டுச்சிதைப்பு… வன்புணர் நிகழ்வு… தற்கொலை… ஒவ்வொன்றாய் வந்து சென்ற இதற்கெல்லாம் காரணம்… நமக்குள் விதைக்கப்பட்ட சமுதாய கோட்பாடு. அது மட்டும் தானா… நாமும் தானே காரணம். நம்மை ஒதுக்கித்தள்ளி இதைப் பார்க்க முடியாது.

“இது மாதிரி நேரங்களில் மவுனம் ஒரு நல்ல கருவி. அனேகத்தை சொல்லிச்செல்லும்.” – மவுனம் கலைத்தாள் பார்கவி.

சற்றே நோக்கினேன். அவளுக்குள் தெளிவின் கீற்று தெரிந்தது. முழுவதும் தெளிந்ததாய் தெரியவில்லை. இதற்குள் அந்த பெரியவர் மூன்று முறை சுற்றி வந்து விட்டார். நல்ல கொள்முதல் கண்ட தெளிவு அவர் முகத்தில். வியர்வையை துடைத்துக் கொண்டு நடந்தார்.

“நடப்பது தான் நடக்கும். நடப்பது எதுவும் பாதிப்பை உண்டாக்க கூடாது.” – நான் தொடர்ந்தேன்.

“என்ன சொல்ல வர்ற… இது தப்பில்லைங்கறயா… நான் தப்பு பண்ணலைங்கறயா… “ – பார்கவியின் பேச்சில் தெளிவை நோக்கி ஒரு பயணம்.

“ப்ச்…ப்ச்..”

“ இது நான் மட்டும் பண்ண தப்பில்லை. விபத்துன்னும் ஒதுக்க முடியல… தெரியாத ஒருத்தன் கூட செய்யற காரியமா இது. அவன பார்த்தா பத்திகிட்டு வருது… எதுவுமே தெரியாத மாதிரி… என்ன ஒரு ஜென்மம்..?. இப்படிபட்டவன் கூட இவ்வளவு நாள் பழகியிருக்கமேன்னு சின்ன உறுத்தல். ஒரு நாள் கூட நெனச்சதே இல்லை… இதச்செய்யணும்னு… நீ சொன்ன மாதிரி அவன் பாலுக்காக காத்திருந்த பூனை தான்… இருக்கற அறிவியல் காலத்துல இதை சாசுவத படுத்த முடியும். அப்படி தருக்கம் பண்ணி அவன் கூட ஒரு வாழ்க்கையும் அவசியமில்லை. அதுவும் முடியாது. இது மட்டும் தெளிவா தெரியுது. என்ன… ஒரு சின்ன உறுத்தல்… தெரிந்தோ தெரியாமலோ என்னோட சேர்ந்துட்டதோங்கற ஓர் அங்கம்… இன்னும் தெரியக்கூட இல்லை. வேண்டுமா இல்லையாங்கறது தான் இப்போ… எடுத்து வளர்க்கலாம். ஆனா வாழ்நாள் பூரா அது பட வேண்டிய கஷ்டம்… அந்நிய தேசம்னா இதுவே அவனுக்கு தண்டணை. வாழ்நாள் பூரா… தெரிந்தே தெளிவு படுத்திய சட்டம். யாரும் பெற்றவர் பெயர் தெரியாதவரில்லை. நமக்குன்னும் ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கலாம். என்ன… திவாரி கேசு மாதிரி நின்னு நிலை நிறுத்தணும். நம்ம கால ஓட்டத்துல அவசியமான்னு யோசிக்கறேன். அப்படி ஒரு அங்கீகாரம் அந்த ஜென்மத்துக்கு கொடுக்கணுமான்னு தோணுது. இப்படி பட்டவனுக்கு இதுவே கூட தண்டனையா மாறும். நான் சபிக்கும் நிலையிலும் இல்லை. எனக்கும் இதில் பங்குண்டு. அப்படியென்றால் எனக்கென்ன தண்டணை. எடுத்து வளர்ப்பதா? எத்தனை பார்வைகள்… ஏளன பேச்சுகள்… நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்… வாழ்ந்து விடலாம். அந்த சிசு…?” – அவளுக்குள் பிறந்த தெளிவை உணர்ந்தேன்.

விட்டேனா தொட்டேனா என்றிருந்த மழை வரும் போலிருந்தது.

“குடிச்சு முடி. போகலாம்.”

குடித்து முடித்து என்னுடையதையும் வாங்கி குப்பைத்தொட்டியில் போட்டாள்.

நடந்தோம்… காரை நோக்கி… கையை நீட்டினாள்… சாவிக்காக…

“வேண்டாம்… நான் ஓட்டறேன்.” – சொன்ன என்னை புன் முறுவலுடன் பார்த்தாள். ஆமோதித்தது போல் அடுத்த பக்கம் போய் அமர்ந்தாள்.

காரை ஓட்டும் போது ‘கூகில் மேப்பினாள்’ மருத்துவ மனைக்கு… ”இந்த முகவரிக்கு போ” என்றாள்.

பக்கத்தில் பார்த்தேன். தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு… சிறிதாய் மூச்சு விட்டாள்.

“என்னுள்ளே தரித்தாயோ… ஊகத்தின் பிம்பமோ… என்னை மன்னித்து விடு. இருந்தால்… சிறு வலியோடு என்னை விட்டுச்செல். உனக்கு விடை கொடுத்தல் தான் உத்தமம் இருவருக்கும்.

எங்கிருக்கிறாய் கலாபக் காதலா? உனக்காக காத்திருந்தேன் தெளிந்த நீராய். சற்றே கலக்கம். கலங்கிப்போனேன். காத்திருக்கிறேன்… தெளிபட்ட நீராய்…” – எண்ண ஓட்டத்துடன் அவள் கண்ணின் ஓரம் நீர் முட்டி நின்றது.

*** *** ***

  • (எ) குணசேகரன்
Series Navigationசீனாபெண்கள் அசடுகள் !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *