தேடல்

             –  பத்மநாபபுரம் அரவிந்தன் –

பிஞ்சு மழலையைக்  கொஞ்ச எடுக்கையில் 

தானாய் வழிகிறது கனிவு, மனம் வழி ஊறி

தூக்கும் கை வழி பரவி வியாபிக்கும் அன்பு

கண்கள் பார்க்கையில் நெஞ்சம் நிறைந்து

கசிந்துருகும் காதல் …   என்  காய்த்த கைதனில்

பூத்த மலரென படுத்திருக்கும் குழந்தை…

சின்னச் சிணுங்கலில் என் மனச் சிறகுகள்

வானோக்கி எம்ப எத்தனிக்கும் …

விட்டுப் பிரிந்திருந்தும் மனதுள் 

அவள் மேல் வீசும் சோழ தேசத்து

பால் நிறை நெற்பயிர் வயல்வெளி  மணம்.

மழை  பெய்து பிற்பாடு ஒளி பட்ட மலை போல மின்னும்

அப்பிஞ்சு முகத்தின் கன்னக் கதப்பு

மனக் கண்ணில் மறையாது

எண்ண எண்ண சலிக்காது ..வந்து நின்று போகாது

மனைவி, மகன் மேலிருந்த தேடல் மெல்ல

மகளின் மேல் நகரும் காலம்

தொலைதூரம்   இருந்தாலும்  தொடர்ந்தேதான்  ஆகும் …

கொடுத்து வந்த முத்தத்தின் மணம் இன்னும் மாறவில்லை

கையசைத்து ,காலசைத்து மெல்லியப் புன்னகையை

எனை நோக்கி வீசியதை மனமுழுக்க சேமித்து

யோசித்து செலவிட்டு கழிக்க வேண்டும் சில நாட்கள்

சேமிப்பு தீருமுன்பு மீண்டுமங்கு போகவேண்டும் பல

முத்தங்கள் வாங்கவேண்டும் ….

 

Series Navigationஅடைமழை!ஒரு கடலோடியின் வாழ்வு