தேவி – விமர்சனம்

devi

நீண்ட இடைவெளிக்கு பிறகு “ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி” என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் ‘தேவி’ படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது.

விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை குறித்துக்கொள்ளுங்கள். ட்ரண்ட் என்றுதான் சொல்கிறேன். அதனால் அதையொத்த கதைகளை சொல்லும் படங்கள் வெகு ஜன மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுவிடுகின்றன என்பதால் தகுதியற்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது போகும் காலகட்டம் இது என்பதை சொல்ல‌ கமல்ஹாசன் படங்கள், பிரபுதேவாவின் இந்தப் படம்  தேவைப்படுகிறது. ஏனெனில் பிரபுதேவா வெறும் நடனப்புயல் தான் என்றால் அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால், அவர் நடனம் மட்டுமல்ல, தன்னால் ஒரு முழுப்படத்தை இயக்கவும் முடியும் என்று நிரூபித்தவர்.

பிரபு தேவா, கமல் ஹாசன் போன்றவர்களின் இருப்பே ஏனைய இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் விடும் கடும் சவால் என்றே நினைக்கிறேன். ஒரு ஹிட் தந்தாலே இயக்குனர் உச்சம் என்றும் , நடிகர் உச்சம் என்றும் பீற்றிக்கொண்டு இன்டஸ்ட்ரியே தன்னால் தான் இயங்குகிறது என்கிற ரீதியில் பேட்டி தருபவர்கள் கன்னத்தில் சப்பென்று அறைய பிரபுதேவா, கமல்ஹாசன் போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள்.

தனக்கும், தேவிக்கும் இடைய நிகழ இருக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்த பிரபுதேவா, பாலாஜி செய்யும் தகிடுதத்தங்கள் அனைத்தும் பிரபுவுக்கே எதிராக முடியும் காட்சிகள் செம காமெடி.. பாடல் காட்சிகளில் பிரபுவின் ட்ரேட்மார்க் டான்ஸ் அட்டகாசம். பிரபுதேவா தன்னை வெல்ல மிக மிக மிக அதிகமான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

இவர் போன்ற ஆட்களை வைத்துக்கொண்டே தமிழ் சினிமா உலகில் வேறு பலர் இவர்களது இருப்பை கள்ள மெளனத்துடனும், கண்டும் காணாமலும்  ரசிகனை ஏமாற்றி செல்லரித்து வளர்வதும், அதை வெகு ஜன ரசிகனே பாலின பேதமின்றி கைதட்டி ரசித்து ஆதரவு நல்குவதும் சமூக அவலம். ஜன நாயகம் என்கிற வார்த்தையை மிக மிக தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சொல்லி குற்றமில்லை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்.

தமிழில் எடுக்கப்படும் ஏனைய பேய் கதைகள் போலில்லாமல், இதில் கொடூரமான ஒப்பனை இல்லை.. இருட்டிலேயே காட்சிகள் இல்லை.

இதற்குமுன் இப்படி ஒரு கதை வந்ததில்லை. அந்த வகையில் பிரபுதேவாவுக்கு அந்த சர்ப்ரைஸ் எலிமென்ட் தரத்தெரிகிறது.   ஆனால் இதுவும் ஒரு பொழுதுபோக்கு படமே. பிரபுதேவா போல் குழந்தை பிராயத்திலிருந்தே சினிமாவிலேயே வளர நேர்பவர்கள் கூட இலக்கிய தரமான படம் என்று போகாமல் வெறும் பொழுதுபோக்கிலேயே நிற்பதை நியாயப்படுத்தவே முடியவில்லை. கரன் ஜொஹர், ரோஷன்ஸ், ரன்பீர் கபூர்,  பிரபுதேவா என்று ஒரு பட்டாளமே இப்படி இயங்குகிறது.

இறுதியில் தேவி கர்ப்பமாக இருப்பது குறித்து தெரியவருகையில் கிருஷ்ணாவின் அடையாளம் வெளிப்படுகிறது. ஆனால் ஒரு காட்சியில் தேவி கிருஷ்ணாவிடன் “என்னை உங்களுக்கு பிடிக்கவில்லை” என்று சொல்லும் காட்சிக்கு பிறகே பேய் அவளை பீடிப்பதாக காட்டுகிறார்கள். கிருஷ்ணாவும் தன்னை பேச்சிலர் என்றே கூறிக்கொள்கிறார். அப்படியிருக்கையில் அவர்களுக்கிடையில் எப்போது காதலித்தார்கள் , எப்போது இணைந்தார்கள் என்பது குறித்து ஏதும் காட்சிகள் இல்லை. ஒரு கதையின் ட்விஸ்ட் குறித்து கதையில் சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது விதி. நான் பார்த்த பிரின்டில் அந்த காட்சி இல்லையோ என்னமோ..

இந்த வருடத்தில் சமகாலத்தில் வெளிவந்த படங்களுடன் பொறுத்திப்பார்க்கையில் தேவி எத்தனைக்கோ பரவாயில்லை. பார்க்கலாம்.

– ஸ்ரீராம்

Series Navigationகவிதைகள்வெண்சிறகுகள் …….