தொடுவானம் 207. போதை

 

          மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். எப்படியும் ஊர் திரும்ப இன்னும் ஓராண்டு ஆகலாம். மகனைத் தூக்கிக் கொஞ்ச ஆவல் அதிகம்தான். அவன் வரும்போது நடக்கும் பருவத்தில் இருப்பான். அவன் தவழும் பருவத்தில் பார்க்கமுடியாமல் போய்விட்டது.
          நான் மருத்துவப் பணியுடன், மருத்துவமனையின் ஊழியர்களின் நலனுக்காகவும் நேரத்தைச்  செலவிட்டிட்டேன். மருத்துவ நூல்களைப் படித்ததோடு ” மனைமலர் ” என்னும் மாத இதழில் மருத்துவக் கட்டுரைகள் எழுதிவந்தேன் அதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொண்டேன். அந்த இதழை சி.எல்.எஸ். புத்தகக் கடைகளில் வாங்கலாம். அது தமிழகமெங்கும் கிறிஸ்த்துவர்கள் மத்தியில் பிரபலமான இதழ்.நான் அதில் எழுதுவதால்  மாதச்  சந்தா காட்டினேன். எனக்கு தபாலில் அனுப்பினர்.
          மாலை வேளைகளில் பால்ராஜ், கிறிஸ்டோபருடன் வளாகத்தைச் சுற்றிப் பார்ப்பேன். அப்போது செல்லும் வழியில் காணும் ஊழியர்களிடம் நலன்  விசாரிப்பேன். அவ்வாறு செய்வதின்மூலம் இன்னும் நிறைய பேர்களை எங்கள் பக்கம் சேர்த்தோம்.நாங்கள் செய்வது அவர்களின் நன்மைக்கே என்பதை வலியுறுத்தினோம். இப்படி தினந்தோறும் செய்து எங்களுடைய அணிக்கு பலம் சேர்த்தோம்.
          இனி மனமகிழ் மன்றத்தின் அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் வெற்றி பெற அது வழி வகுத்தது.
           அந்த தேர்தலுக்குப் பின்பு நான் டாக்டர் ஜானை காலையில் சிற்றாலயத்திலும்  அதன்பின்பு எக்ஸ்ரே அறையிலும் காண்பேன்.இருவரும் பார்த்து சிரித்துக்கொள்வோம். அதிகம் பேசமாட்டோம். ஆனால் நான் அரசியல் செய்கிறேன் என்று திடமாக நம்பினார். அவருக்கு எதிராக ஊழியர்களைத் தூண்டிவிடுவதாகவும் அவர் எண்ணியிருக்கலாம்.
          ஒரு நாள் என்னை அலுவலகத்தில் அவரைப் பார்க்க வருமாறு கூறினார். நான் என்னவாக இருக்கும் என்று அவரைக் காணச் சென்றேன். அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார். என்னை மருத்துவ வேலையில் மட்டுமே கவனம் செலுத்தச் சொன்னார். மருத்துவமனையில் அரசியல் உண்டாக்கவேண்டாம் என்றார். ஒரு சாதாரண மனமகிழ் மன்றத் தேர்தலில் போட்டியிட்டது அரசியலா என்று அவரிடம் கேட்டேன்.அதிக வாக்குகள் பெற்று வென்ற என்னை செயல்படவிடாமல் தேர்தல் செல்லாது என்று சொன்னதுதானே அரசியல் என்று கேட்டேன். அன்று நடந்ததை மற்ற டாக்டர்களும் விரும்பவில்லை என்றும் கூறினேன். அதற்கு அவர் சமாதானம் கூறும் வகையில் மீண்டும் தேர்தல் நடக்கும். அப்போது உன் விருப்பம் நிறைவேறும் என்றார். தேர்தல் நடந்தால் நான்தான் வெல்வேன் என்றேன். ஊழியர்கள் அதிகமானோர் என் பக்கம் என்று கூறினேன். அதனால்தான் அவர்களை உன் பக்கம் வைத்துக்கொண்டு எனக்கு எதிராகத்   தூண்டிவிடுகிறாயா என்று கேட்டார். தூண்டிவிட்டு என்ன செய்யப்போகிறேன், உங்களை அனுப்பிவிட்டு நான் தலைமை மருத்துவ அதிகாரியாக வரவும் முடியுமா என்று கேட்டேன். என் மீது அப்படி உங்களுக்கு என்ன பயம் என்று இறுதியில் கேட்டேன். நீ ஊழியர்களை உன் பக்கம் திருப்புகிறாயே என்றார். அதனால் உங்களுக்கு என்ன வந்தது, நான் அவர்களிடம் அன்பாகப் பழகுவது தவறா என்றேன். ஒரு மிஷன் மருத்துவமனையில் ஊழியர்களிடம் அன்பாக இருந்தாலதானே மருத்துவப் பணி சிறப்பான ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் சொன்னேன். அவர்களைத் தூண்டி விட்டு கலகம்  செய்ய நினைத்தால் மிஷன் மருத்துவமனை பாதிப்புக்கு உள்ளாகுமே என்றார். அப்படியெல்லாம் நடக்க நான் விட மாட்டேன் என்று  உறுதியளித்தேன். அதே வேளையில் தேர்தலில் நிற்பது என்னுடைய தனி சுதந்திரம். அப்படி நான் செயலர் பதவி பெற்றால் அதனால் என்னுடைய மருத்துவப் பணியோ, தொழுநோய்ப் பணியோ எந்த விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகாது என்றும் உறுதியளித்தேன்.
           நாட்கள் நகர்ந்தன என்னுடன் மருத்துவ வார்டில் பணியாற்றிய டாக்டர் மூர்த்தியின் மனைவி ரோகினி நல்ல அழகு. ரோஜா நிறம். நல்ல உயரம். கனிவாகப் பேசுபவர்.  ஆனால் அத்தகைய அழகியின் முகத்தில்  எப்போதும் ஒருவித சோகமே குடிகொண்டிருக்கும். அது என்னவாக இருக்கும் என்று அறிய முயன்றேன். மூர்த்தியிடம் அது பற்றி எப்படி  கேட்க முடியும்? அவர் வார்டிலும் வெளி நோயாளிப் பிரிவிலும் மிகவும் சுறுசுறுப்புடன்தான் இயங்கினார். சில வேளைகளில் ஊழியர்களிடம் அதிக உற்சாகத்துடன்தான்  பேசுவார். அனால் அவ்வப்போது கோபம் வந்தால் கொடூரமாக மாறுவார்! சில வேளைகளில் அத்தகைய கோபத்தை  நோயாளிகளிடமும் காட்டுவார். அப்போது  எதிரே அமர்ந்திருக்கும் எனக்கு ஒரு மாதிரி இருக்கும். நான் அவரை எப்படி கண்டிப்பது? அவர் எனக்கு இளையவர்தான். மற்ற நேரங்களில் இனிமையாகப் பழகுவார்.   கோபம் வந்துவிட்டால் மட்டுமே வேறு மனிதராகிவிடுகிறார்! எனக்கு அவர் பற்றிய குழப்பம் அதிகமானது! அது ” பைபோலார் டிஸார்டர் ” ( Bipolar Disorder ) மன நோய் மாதிரியும் இல்லை. அதில் அதிக உற்சாகமும் அதன் பின் அதிக கவலையும் கொண்ட மனநிலையால் பாதிக்கப்படுவர்.ஆனால் இவரோ அதிக உற்சாகமும் அதிக கோபமும் அல்லாவா கொள்கிறார்.
          அந்த மர்மம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒரு நாள் இரவு எட்டு மணிக்கு எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. ரோகினி பேசினார். உடன் வீட்டுக்கு வரச் சொன்னார். எதோ விபரீதம் என்பதை  அவரின் குரல் உணர்த்தியது. நான் உடன் விரைந்து சென்றேன்.
          ரோகினிதான் கதவைத் திறந்தார்.ஹாலில் மூர்த்தி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.அவர் கண்கள் மூடியிருந்தன. அவர் தூங்கவில்லை. விழித்திருந்தார். நான் வந்ததை அவர் கவனிக்கவில்லை. அவரை  அழைத்தேன்.  தடுமாற்றத்துடன் கண் விழித்தார். என்னைக் கண்டு வியக்கவில்லை.. கனவு உலகில்  இருப்பவர் போல் காணப்பட்டார்.
        ” என்ன ஆயிற்று? மூர்த்திக்கு என்ன? ” பதற்றத்துடன் ரோகினியைக் கேட்டேன்..
        ” ட்ரக் ஓவர்டோஸ் . ” என்றார் .
         ” என்ன ட்ரக்? “
         ” கஞ்சா. ” . நான் அதிர்ச்சியுற்றேன்! அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
         ” இந்த பழக்கம் உள்ளதா? “
         ” ஆம். ” அவர் தலையாட்டினார்.
         ” எவ்வளவு காலமாக? “
         ” கொஞ்ச காலமாக . “
         எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. அவர் கஞ்சா பயன்படுத்துவதால்தான் சில நேரங்களில் வேறு மனிதராகக் காட்சி அளிக்கிறார்.அதிகம் கோபம் கொள்கிறார். இதனால்தான் ரோகினியின் முகத்தில் அந்த சோகம்!
          அவரை அந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இயலாது. வீட்டிலேயே முதல் உதவி செய்வதே நல்லது. பி. வார்டு சென்று சில கருவிகளை எடுத்துவந்து அவரைப் பரிசோதனை செய்தேன். இரத்த அழுத்தம் சரியாகவே இருந்தது. அது போதைதான். ஓய்வெடுத்தால் குறைந்துவிடும். அவருடைய முகத்தைக் கழுவினோம். குடிக்க தேநீர் சூடாகக் கொடுத்தோம். அவர்  நினைவில்தான் இருந்தார். ஆனால் நிதானமாக செயல்படமுடியவில்லை.
         என்னை படுக்கை அறைக்குள் கூட்டிச் சென்றார் ரோகினி. அங்கு அலமாரியில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை என்னிடம் காட்டினார். அதை சிகரெட் மாதிரி சுருட்டி புகைப்பாராம். அதன்பின் இருவருக்கும் சண்டை வருமாம். அடிப்பாராம். சித்திரவதை செய்வாராம். பிளேடால் அவர் கிழித்த காயத்தை தொடையில் காட்டினார்.அவரை விட்டு விலகிப் போய்விட முடிவு செய்துள்ளாராம். நான் அப்படி ஒன்றும் வேண்டாம். அவரிடம் நாளை காலையில் பேசுகிறேன் என்றேன். அவரைப் பேசிப் பேசி மாற்றுவோம என்றேன். முடிந்தால் மாலையில் அவருடனே வந்துவிடுகிறேன் என்றேன். நான் வீட்டில் கலைமகளுடன்  உள்ளது ரோகினிக்குத் தெரியும். அவர் சரி என்றார்.
         இரவு வெகு நேரம் கழித்தே வீடு திரும்பினேன். அவரை படுக்கையில் கிடத்தினோம். நன்றாகத்  தூங்கிவிட்டார்.
          ” அவருக்கு என்னதான் பிரச்னை? எதற்காக இதை உபயோகிக்கிறார்? உங்களுக்கு ஏதாவதுதெரியுமா? ” ரோகினியைப் பார்த்துக் கேட்டேன்.
          ” அவருக்கு உள்ளுக்குள் ஒரு பிரச்னை உள்ளது. ” என்றார்.
          ” அது என்ன பிரச்னை? ” நான் கேட்டேன்.
          ” என்னைப்பற்றியதுதான். “
          ” உங்களை பற்றியதா? அது என்ன? ” நான் குழப்பமுற்றேன்.
          ” அது என் அழகு பற்றியது. “
          ” உங்கள் அழகா?  நீங்கள் அழகாகத்தான் இருக்கிறீர்கள்? அதனால் என்ன பிரச்னை?” வியப்புடன் கேட்டேன்.
          ” இந்த அழகுதான் இப்போது பிரச்னையாக உள்ளது. “
          ” எப்படி? கொஞ்சம் விளங்கும்படிச் சொல்லுங்கள்.”
          ” நான் அழகாக இருக்கிறேனாம். என் அழகை பலரும் பார்த்து ரசிக்கிறார்களாம். அதனால்…”
          ”  அழகை பார்ப்பவர்கள் ரசிக்கத்தானே செய்வார்கள்?  அதனால் இவருக்கு எப்படி பாதிப்பு?”
          ” என் மீது நம்பிக்கை இல்லையாம்! ” இதைச் சொன்னபோது அவரது கண்கள் கலங்கின.
          ” நீங்கள் அழகாக இருப்பதால் உங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேகப்படுகிறாரா?”
          ” ஆம். அதனால்தான் கஞ்சா போதையில் என்னை சித்ரவதை செய்கிறார். இங்கே நிம்மதியாக என்னால் வேலை செய்ய முடியவில்லை. ” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டார்.
          ” இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயல்வோம். நீங்கள் அவசரப்பட்டு விபரீத  முடிவு ஏதும் எடுக்காதீர்கள் .” நான் தைரியமூட்டினேன்.
           ” நாளை நீங்கள்  வந்து போனதையும் சந்தேகத்துடன் கேட்டு பிரச்னை பண்ணுவார். ” தயக்கத்துடன் கூறினார்.
          ” அப்படியா? கவலை வேண்டாம். .காலையில் அவர் கேட் பதற்கு  முன் நானே நடந்தவற்றைச் சொல்லிவிடுகிறேன். ” .நான் ஆறுதல் சொன்னேன். அதோடு  ஆவரிடமிருந்து விடை பெற்றேன்.
          இது பற்றி நான் யாரிடமும் சொல்லக்கூடாது. அவர் ஒரு டாக்டராக இருந்தாலும் இப்போது என்னுடைய  நோயாளி. ஒரு நோயாளியின் அந்தரங்கத்தை வெளியில் சொல்லக்கூடாது என்பது மருத்துவக் கோட்பாடு. எனக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் டாக்டர் ராமசாமியிடம் கலந்து ஆலோசிக்க முடிவு செய்தேன்
          அவர் போதைக்கு அடிமையாகியுள்ளார். ஆனால் இரவில் மட்டும்  கஞ்சா பயன்படுத்தி தூங்கிவிட்டு  காலையில் கலகலப்புடன் வேலைக்கு வந்துவிடுகிறார். போதையில் உள்ளபோது வானில் மிதப்பது போன்ற உணர்வில் இருக்கிறார். அப்போது அழகான தன்னுடைய காதல் மனைவியை சந்தேகப்பட்டு சித்திரவதை செய்கிறார். அதில் அவர் மகிழ்ச்சி காண்கிறார். இந்தத்   தீய பழக்கத்திலிருந்து அவரை எவ்வாறு விடுவிக்கலாம் என்றும் யோசித்தேன்.
         ( தொடுவானம் தொடரும் )
       .
Series Navigationபழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்இன்று ஒரு முகம் கண்டேன் !