தொடுவானம் 57. பெண் மனம்

Spread the love

Tranquebarதமிழ் சேஷ லுத்தரன் திருச்சபையின் தலைமையகம் திருச்சியில் ” தரங்கைவாசம் ” எனும் பெயர் கொண்ட பெரிய வளாகத்தினுள் இருந்தது. அங்குதான் பிரபலமான ஜோசப் கண் மருத்துவமனையும் உள்ளது. அப்போது அதன் நிறுவனர் டாக்டர் ஜோசப் அதில் பணியாற்றினார். அதுவும் லுத்தரன் சபையைச் சேர்ந்ததுதான். பேராயர் இல்லமும் அங்குதான் உள்ளது. அந்த பங்களாவின் பெயர் ” தரங்கை இல்லம் ” என்பது. தரங்கை என்பது தரங்கம்பாடியைக் குறிப்பதாகும். லுத்தரன் சபை தரங்கம்பாடியில் உருவானது. அதை உருவாக்கியவர் இந்தியாவின் முதல் சீர்திருத்த மிஷனரி சீகன்பால்க் என்ற ஜெர்மானிய இறைத் தூதர்.அவர் டென்மார்க் அரசரால் அங்கு அனுப்பப்பட்டவர். அப்போது தரங்கம்பாடி டென்மார்க் கிழக்கிந்தியக் கம்பனி மூலம் டென்மார்க் அரசிடம் இருந்தது. அப்போது நாகப்பட்டினம் போர்துகீசியரிடமும், சென்னை ஆங்கிலேயரிடமும் இருந்தன.

( டேன்ஸ்போர்க் கோட்டை )

டென்மார்க் நாட்டின் வணிகர்கள் அங்கு வருமுன் தரங்கம்பாடி தஞ்சாவூர் நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.வணிகம் செய்ய அங்கு வந்த டென்மார்க் நாட்டின் கடற்படைத் தளபதி ஓவே ஜெடீ ( Ove Gjedde ) என்பவர் தரங்கம்பாடியில் ஆழ்கடல் உள்ளதை அறிந்து அங்கு துறைமுகம் அமைத்து ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் ஈடுபட விரும்பினார்.
அப்போது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கரிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியைப் பெற்றுக்கொண்டு அங்கு 1620ஆம் ஆண்டில் ” டேன்ஸ்போர்க் ” கோட்டையைக் கட்டினார். அவர்களுக்குத் தரப்பட்ட தரங்கம்பாடி பகுதியைச் சுற்றிலும் பலம் வாய்ந்த சுவர்களும் எழுப்பப்பட்டன.
1620 ஆம் வருடத்திலிருந்து 1845 ஆம் வருடம் வரையில் தரங்கம்பாடி டென்மார்க் நாட்டின் காலனியாக ஆளப்பட்டது.
பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அந்த கோட்டைக்குள் படைவீரர்கள் தங்கும் தளம், சமையல் பகுதி, பண்டகச்சாலை, சிறைச்சாலை பகுதிகள் உள்ளன. மேல் தளத்தில் தலைமையகமும் ஆளுநரின் இருப்பிடமும் அமைந்திருந்தது.தரங்கம்பாடியின் வீதிகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டன. பல மாடி வீடுகளும் அன்று கட்டப்பட்டன. அவற்றில் சிலவற்றை இன்றும் காணலாம்.
ஐரோப்பியாவில் நடந்த நெப்போலியன் போரின் முடிவில் 1808 ஆம் வருடம் தரங்கம்பாடி ஆங்கிலேயர்களின் கைவசம் வந்தது .பின்பு 1814 ஆம் வருடத்தில் டென்மார்க்கிடம் மாறியது. இறுதியாக 1845 ஆம் வருடத்தில் அவர்கள் தரங்கம்பாடியை ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டனர்.
இங்குதான் இந்தியாவின் முதல் கிறிஸ்துவ சீர்திருத்த சபையின் ( Protestant ) இறைத் தூதர்கள் ( Missionaries ) வந்து இறங்கினார்கள்.
ஜெர்மனி நாட்டிலிருந்து அவர்கள் வந்தனர். பார்த்தலோமேயூஸ் சீகன்பால்க், ஹீன்ரிச் புலுச்சோ என்ற அவ்விருவரும் 1705 ஆம் வருடம் தரங்கம்பாடியில் ஏசுவின் நற்செய்தி போதிக்கத் துவங்கினர். அவர்கள் கட்டிய ” சீயோன் ” தேவாலயம்தான் இந்தியாவின் முதல் சீர்திருத்தச் சபையின் ஆலயம். அது 1701 ஆம் வருடத்தில் கட்டப்பட்டது. இன்று அது ” புது எருசலேம் ” தேவாலயமாக தமிழ் சுவிஷேச லூத்தரன் திருச்சபையால் நன்கு பராமரிக்கப்படுகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகில் வேறொரு மாபெரும் வரலாற்று சிறப்பும் தரங்கம்பாடிக்கு உள்ளது. இந்திய மொழிகளில் முதல் மொழியாக தமிழ் அச்சில் பொறிக்கப்பட்டு அழகு கண்டது இந்த தரங்கை எனும் தரங்கம்பாடியில்தான்!
அச்சில் ஏற்றப்பட்ட அந்த முதல் தமிழ் நூல் ஏசுவின் நற்செய்தி கூறும் புதிய ஏற்பாடு.

New Jerusalem Church
ஜெர்மானியரான சீகன்பால்க் தமிழ் கற்று புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்தார். அது அனைத்து மக்களுக்கும் சேரவேண்டும் என்ற ஆவலில் நூல் வடிவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.
தமிழ் எழுத்துக்களை ஜெர்மனிக்கு கொண்டு சென்று அவற்றை அச்சில் வார்த்தார். இங்கிலாந்து அரசி ஒரு அச்சு இயந்திரம் தந்தார். அதைக் கப்பலில் தரங்கம்பாடிக்கு கொண்டு வந்தார். அங்கு அச்சுக்கூடம் அமைத்து, பொரையாரில் காகிதப் பட்டரையும் உருவாக்கி புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு வினியோகித்தார். இது நடந்தது 1714 ஆம் வருடத்தில்.
1727 ஆம் வருடத்தில் முதன்முதலாக இந்தியாவில் நாள்காட்டி தரங்கை அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது!

(புது எருசலேம் தேவாலயம்)
சீகன்பால்க் 40,000 ஆயிரம் சொற்கள் கொண்ட தமிழ் அகராதியையும் உருவாக்கி வெளியிட்டார். அதில் தமிழ்ச் சொல் , அதை உச்சரிக்கும் முறை, ஜெர்மன் மொழியில் அதன் பொருள் ஆகிய முக்கூறுகள் இடம்பெற்றிருந்தன.

TELC
தமிழ் கற்ற இரண்டு வருடங்களில் ஆவர் தமிழ் மொழியில் பதினான்கு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!
சமயப் பணி, தமிழ்ப் பணியுடன், கல்விப் பணியிலும் அந்த இருவரும் ஈடுபட்டனர். தரங்கம்பாடியில் அவர்கள் தொடங்கிய புலுச்சோ துவக்க தமிழ்ப் பள்ளி இன்றும் உள்ளது. அதோடு ஒர் உயர்நிலைப் பள்ளியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியும் இன்று தரங்கையில் இயங்கி வருகின்றன.
அவரைத் தொடர்ந்து பல இறைத் தூதர்கள் ஜெர்மன் தேசத்திலிருந்தும் சுவீடன் தேசத்திலிருந்தும் வந்தனர்.அந்த வழியில் வந்தவர்தான் பேராயர் டீல்.

 

(சீகன்பால்க் சிலை)

பேராயர் டீல் தமிழில், ” தோத்திரம். வாருங்கள் ” என்று கூறி எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். பழுத்த வயதுடைவர். நல்ல நிறம். அவரின் விழிகளில் அருளொளி வீசியது. கடவுளுக்கு ஊழியம் செய்யும் உண்மையான ஓர் ஊழியரைப் பார்த்த உணர்வு உண்டானது.
நாங்கள் தெம்மூரிலிருந்து வருவதாதக் கூறி அறிமுகம் செய்துகொண்டோம். அவர் தெம்மூருக்கு வந்துள்ளதாகவும், அழகான கிராமம் என்றும் கூறினார்.
நான் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் பயில விரும்புவதாகக் கூறினேன். படித்து முடித்ததும் மிஷன் மருத்துவமனையில் சேர்ந்து பணி புரிவேன் என்று உறுதி கூறினேன்.
” தெம்மூர் கிராமத்திலிருந்து ஒரு டாக்டர்? ” அவர் வியந்து பாராட்டினர்.
” அதற்கு பேராயரின் பரிந்துரைக்கு வேண்டி வந்துள்ளோம். ” அண்ணன் கூறினார்.
“: நிச்சயமாக. தெம்மூரில் ஒரு டாக்டர் உருவானால் அது எல்லாருக்கும் சிறப்பு.அதற்கான தேர்வை நல்ல முறையில் எழுதணும். அப்போது நிச்சயமாக இடம் கிடைக்கும். ” என்று உற்சாகமூட்டினார்.
அவர் பரிந்துரை செய்ய வேண்டிய பாரத்தை அவரிடம் தந்தோம். அதை அவர் பார்த்தபடியே, ” இதை சபைச் சங்கக் கூட்டத்தில் வைத்து சம்மதம் பெறுகிறேன். இப்போது ஜெபம் செய்வோம். ” என்று கண்களை மூடினார். நாங்களும் கண்களை மூடினோம். எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க இறைவனிடம் மன்றாடினார். எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் நன்றி கூறி நம்பிக்கையுடன் விடை பெற்றோம்.
பேராயர் டீல் அவர்களைப் பார்த்தபின்பு அவர் எங்களிடம் தமிழில் பேசியதை எண்ணி வியந்தேன். சுவீடன் தேசத்தவர் இங்கு வந்து தமிழ் கற்று தமிழில் பேசுவது விந்தையன்றோ! இன்று தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எத்தனையோ தமிழர்கள் தமிழில் பேசுவது தரக்குறைவு என்று எண்ணிக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுவதையும் எண்ணிப்பார்த்தேன். மேல்நாட்டு மிஷனரிகள் இயேசுவின் சுவிசேஷத்தைப் பரப்ப தமிழகம் வந்து தமிழ் கற்றதோடு தமிழ் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பதை நான் படித்துள்ளேன். அது போன்ற ஒருவரை நேரில் பார்த்து பேசியது என்னை பெருமையடையச் செய்தது. தமிழர்களாகிய நாம் தமிழ் மேல் இன்னும் அதிகம் பற்று கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று எண்ணினேன்.
அண்ணியின் வீடு சென்றோம். அங்கு மூன்று நாட்கள் கழித்தேன். பின்பு நான் மட்டும் ஊர் திரும்பிவிட்டேன்.
அது நீண்ட விடுமுறை. வேலூர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுத நான் தயார் செய்ய நேரம் சரியாக இருந்தது.ஆனால் எப்படியும் தினமும் பால்பிள்ளையுடன் தூண்டில் போடவும் சென்றுவிடுவேன்.
குளத்தங்கரையில் மீன் பிடிக்கச் சென்றால் தவறாமல் கோகிலம் அங்கு வந்துவிடுவாள்.வீட்டுக்குத் திரும்பினால் அங்கும் அவள் இருப்பாள்.அம்மாவுக்கு சமையலில் உதவுவதாகக் கூறிக்கொண்டு இரவிலும் வருவாள். சில இரவுகளில் அம்மாவுடன் பேசிக்கொண்டு எங்கள் வீட்டிலேயே படுத்துக்கொள்வாள். அவளுடைய செயல்கள் யாவும் எனக்காவே என்பது எனக்குத் தெரியும்.
அது காதலா காமமா என்பது எனக்குத் தெரியவில்லை. அது ஒரு வகையான கள்ளக் காதல் போன்றே தோன்றியது. ஆனால் அதுபற்றியெல்லாம் அவள் கவலை கொள்ளவில்லை. நான் கூடத்தான்.ஆவளுடன் பேசிக்கொண்டிருப்பது இனிமையகத்தான் இருந்தது. அவள் என்னிடம் பேசுவதை விரும்பினாள். அதில் அவள் மகிழ்ந்தாள். மணமான அவளுடன் அப்படி பேசிப் பழகுவது எனக்கு புது அனுபவம்தான். ஆனால் அவளையே எண்ணிக்கொண்டு எப்போது பேச வருவாள் என்ற ஏக்கம் எனக்கு இல்லை. அவள் மீது எனக்கு பாவ உணர்வு அவ்வளவாகத் தோன்றவில்லை. ஆனால் வெரோநீக்காவை நினைத்துக்கொள்ளும்போது அவள் மீது பாவம் உண்டானது.காரணம் அவள் என்னைக் காதலிப்பது தெரிந்தது.
பெண் மனம் எவ்வளவு மென்மையானது என்பதை நான் வெரோனிக்காவிடம் கண்டேன். சாந்தமான அவளுடைய முகம் என்னைக் கண்டதும் மலர்வது போன்று மாறும். அவளிடம் பேசிவிட்டு விடைபெறும் ஒவ்வொரு தடவையும் அதே முகம் சோகத்தால் வாடும்! ஏனோ தெரியவில்ல்லை. இந்த முறை அவளைக் காணவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது.
காதல் என்பது விசித்திரம் நிறைந்தது. முன்பு லதாவைக் காதலித்தபோது பால்ய வயதுதான். ஆனால் அப்போது அவளைத்தவிர வேறு பெண்கள் மீது எந்தவிதமான ஆசையும் தோன்றவில்லை. அதற்கு வாய்ப்பும் கிட்டவில்லை. இப்போது இளமைப் பருவம். வெரோனிக்காவின் தொடர்பு உண்டானதும் அவள் மீது ஒருவித ஈர்ப்பு உண்டானது. அப்போதெல்லாம் லதாவின் நினைவு தடை போட்டது. ஆனால் அவளிடமிருந்து கடிதங்கள் வருவது குறைந்ததும், வெரோனிக்காவிடம் நெருக்கம் ஆனது. காதலைச் சொல்லிக்கொள்ளாவிட்டாலும் பார்ப்பவர்களுக்கு காதலர்களாகத்தான் தோன்றியது. கிராமத்தில் கோகிலம் என்னை நெருங்கியபோது எந்தவிதமான சலனமும் தோன்றவில்லை என்றாலும் அவள் மீது இரக்கம் உண்டானது. அவளுடைய மகிழ்ச்சியைக் கெடுக்க விரும்பவில்லை. அவளிடம் கடுமையாக நடந்துகொள்ளவும் முடியவில்லை. காதல் பற்றி நிறைய அனுபவ ரீதியாகத் தெரிந்திருந்தும், படித்திருந்தும் காதலை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. காதல் மகத்துவமானது, அது எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம் என்பது மட்டும் தெரிந்தது!
நான் ஆவலுடன் காத்திருந்த தபால் வேலூரிலிருந்து வந்தது. அதில் நுழைவுத் தேர்வுக்கான நாள் அறிவிப்பும் அதற்கு நுழைவு அட்டையும் இருந்தன. உடன் வெரோனிக்காவுக்கு கடிதம் எழுதினேன். தேர்வு முடிந்ததும் மாலையில் வீடு வருவதாகவும், அப்போது வெளியில் சென்று வரலாம் என்றும் தெரிவித்தேன்.
சென்னை செல்கிறேன் என்றதும் கோகிலம் கவலையுற்றதை அவளின் முகம் பிரதிபலித்தது. நான் அதை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.
தேர்வு எழுதப்போகும் ஆர்வத்திலும், வெரோனிக்காவை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியிலும் பிரயாணத்துக்கு தயாரானேன்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஅகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்தொலைக்கானல்