தொலைந்து போனாரோ சா.கந்தசாமி?

                      ப.சகதேவன்

1977-78 ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள். திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகத்துக்கும், தம்பானூருக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரு லாட்ஜில் ஒரு மாலை நேரத்தில்  சில தமிழ் எழுத்தாளர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் சிறு பத்திரிகை உலகில் மிக பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த ‘கசடதபற’ இதழின் பொறுப்பாளர்களான சா.கந்தசாமியும், நா.கிருஷ்ணமூர்த்தியும் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் வருகை முன்கூட்டியே நகுலன் மூலமாக திருவனந்தபுரம் எழுத்தாளர்களுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. கேரளப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பண்ணுவதாகப் பெயர் பண்ணிக்கொண்டிருந்த நான் அதைப் பெரிதும் எதிர்பார்த்துகொண்டிருந்தேன். அந்தச் சிறிய அறையில் நகுலன், காசியபன், ஷண்முக சுப்பையா ஆகியோருடன் இன்னும் சிலர் இருந்ததார்கள். உற்சாக பானத்தின் மணமும், நொறுக்குத் தீனிகளின் வாசனையும் இலக்கியப்பேச்சோடு கலந்து போய்க்கொண்டிருந்தது. அப்போது இலக்கிய வம்பில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த வெங்கட்சாமிநாதன், தருமு சிவராமு ஆகியவர்களைப் பற்றிப் பேச்சு மையம் கொண்டிருந்தது. என்னை ‘கசடதபற’ விடம் அறிமுகப்படுத்திய நகுலன் தனது வழக்கமான குசும்பு வெளிப்படும்படியாக ‘நல்ல ரசனை உடையவர். ஆனால் ‘வானம்பாடி’க் கவிதைகளையும் பிடிக்கும் என்று சொல்வார்’ என்று சொல்லிவிட்டு கீழே குனிந்து தனது கண்ணாடிக்கு மேல் அவரது கண்கள் தெரியும்படியாக ஒரு நமுட்டுச் சிரிப்புச்சிரித்தார். அதற்கு முதலில் எதிர்வினையாற்றிய கந்தசாமி என்னை அருகில் அழைத்து தனக்கு ஏன் ‘வானம்பாடி’க் கவிதைகள் பிடிக்காது என்பதற்கான காரணங்களைச் சொன்னார். கந்தசாமி நல்ல கறுப்பு நிறம். கருப்பாக இருப்பவர்களுக்கெல்லாம் ‘வானம்பாடி’க் கவிதைகள் பிடிக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் பிடிக்காமல் போயிற்று என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

‘வாசன் மகனுக்கென்றால் மட்டும்

அச்சுப்பொறிகள் அடிக்குமோ?

முத்துசாமி போன்றவர் சொன்னால்

மாட்டேனென்று மறுக்குமோ?’

ஞானக்கூத்தன் எழுதிய இந்தக் கவிதை ‘கசடதபற’ முதல் இதழில் வெளிவந்தது. ’ஆனந்த விகடன்’ போன்ற வெகுசனப்பத்திரிகைகளின் இலக்கியத்தரம் வெகுவாகக் குறைந்து அவை முற்றிலும் வணிகப்பத்திரிகைகளான போது அதை எதிர்த்துத் தொடங்கப்பட்டது ‘கசடதபற’ இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வெளியான சிறு பத்திரிகைகளான சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’, க.நா.சுப்பிரமணியத்தின் ‘இலக்கிய வட்டம்’ ஆகியவற்றைத்தொடர்ந்து ஆனால் உள்ளடக்கத்தில் மாறுபட்ட பத்திரிகையாக ‘கசடதபற’ வெளியானது. காங்கிரஸ் இயக்கத்தின் மனோரதக்காலம், திராவிட இயக்கத்தின் ‘பகுத்தறிவுக்காலம்’ என்பவற்றில் காணாமல் போன தமிழினத்தின் உண்மையான நாகரிகம் மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சியை அறியும் முயற்சியாக இது இருந்தது. இன்னொரு வகையில் சொன்னால் எல்லா நாகரிகங்களிலும் இருக்கக் கூடிய ‘இணைப்போக்கு’க் கலாச்சாரத்தின்’ ஒரு பிரதிநிதியாகவே அப்போது சிறு பத்திரிகைகள் தோன்றின. ஒரு நேர்கோட்டில் பார்த்தால் இது ’எழுத்து’ ’இலக்கியவட்டம்’ ’கசடதபற’ ‘பிரக்ஞை’ ‘படிகள்’ ‘நிறப்பிரிகை’ என்று போகும். இந்த சிறு பத்திரிகை இயக்கத்தின் ஆரம்ப கால முகங்களில் ஒன்று தான் சா.கந்தசாமி. கொஞ்சம் வித்தியாசமான அசலான முகம்.

இந்த இணைப்போக்குக் கலாச்சாரப் பிரதிநிதிகள் மனோரதத்திலும், பகுத்தறிவிலும் முற்றிலுமாக மயங்கி விழுந்து விடவில்லை. எந்த நாகரிகமும் பல்வேறு கலை இலக்கிய வடிவங்களில் தன்னை ஆழமாக வெளிப்படுத்திக் கொள்கிறது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இலக்கியத்தைத் தாண்டி நமது பாரம்பரியக்கலைகள், நவீன ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் என்பவற்றையும் சமகால நாகரிகத்தின் வெளிப்பாடுகளாகக் கருதினார்கள். கந்தசாமிக்கு இவை எல்லாவற்றிலும்  ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததோடு மட்டுமல்லாமல் இந்தத் துறையிலிருந்தவர்களோடெல்லாம் நல்ல நட்புக்கொண்டிருந்தார். சென்னையில் அவர் அறியாத ஓவியர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஓவியர் சந்தானம் (இது வீர்.சந்தானமல்ல) சென்னையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றலாகி வந்த போது எங்களுக்குத் தகவல் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். சோழ மண்டல ஓவியப்பள்ளியைச் சேர்ந்த கே.சி.எஸ். பணிக்கரின் மாந்திரீகக் குறியீடு சார்ந்த ஓவியப்பாணியில் கந்தசாமிக்கு ஈடுபாடு இருந்தது. அவரது புத்தகங்கள் பலவற்றிற்கு ஓவியர் ஆதிமூலம் அட்டைப்படம் வரைந்திருக்கிறார்.

சுடுமண் சிற்பங்கள் பற்றிய அவரது ஆய்வு குறிப்பிடத்தக்க பங்களிப்பு. செவ்வியல் கலை, இலக்கிய வடிவங்களைப் போற்றக்கூடிய அளவுக்கு நாட்டார் கலை, இலக்கியங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் போற்ற வேண்டும் என்பது  கந்தசாமியின் வாதம். இரண்டிலும் இருக்கக்கூடிய மரபம்சங்கள், நவீனத்துவம் என்பதைக் கண்டறிவது நமது கடமை என்று அவர் கருதியதால் தான் அதைச் செய்யத் தவறிய திராவிட இயக்க அரசியல்வாதிகளும், தமிழ்க்கல்விப்புலத்தைச் சார்ந்தவர்களும் இவரிடம் பெரும் விமர்சனத்துக்குள்ளானார்கள். எழுத்தில் இதைப் பெரிதாகப் பதிவு பண்ணவில்லையென்றாலும் நேர்ப்பேச்சில் இதை அடிக்கடி குறிப்பிடுவார். இவர்களைப் பற்றி அவர் எப்போதும் குறிப்பிடும் ஒரு வார்த்தை ‘முட்டாள்கள்’. இதே துறைகளில் தங்களது சுயத்துவத்தோடு இயங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது அவருக்கு மதிப்பும், மரியாதையும் இருந்திருக்கிறது

வாழ்க்கை புதிர்கள் நிறைந்தது. பல வகைப்பட்ட இந்தப்புதிர்களை எவ்வளவு பூடகமாகச் சொல்கிறோமோ அந்த அளவுக்கு ஒரு கலைப்படைப்பு பூரணத்துவம் பெறுகிறது. இதை அடிநாதமாகக் கொண்டவை தான் சா.கந்தசாமியின் படைப்புகள். இதில் காலம் முக்கிய இடம் பெறுகிறது. ஒரு கட்டத்தில் நமக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவர்கள் என்று நாம் கருதியவர்கள் இன்னொரு கட்டத்தில் நமக்கு விருப்பம் இல்லாதவர்களாக நாம் புறக்கணிக்கக் கூடியவர்களாக மாறிப்போகிறார்கள். அவர்களும் நம்மை இவ்வாறு கருதக்கூடும். இதைச் சொல்வது தான் ‘தொலைந்து போனவர்கள்’

தனது முதல் நாவலில் (சாயாவனம்) வரும் முக்கிய கதாபாத்திரமான சிதம்பரம் ஒரு கிராமத்தில் தான் நினைத்த பல சாதனைகளைச் சாதித்த பிறகு ஒரு முதிய பெண்மணி (பழைய பாரம்பரியத்தின் பிரதிநிதி?) கேட்கும் சாதாரணக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுவதைப் போல உலக சமுதாயமே தாங்கள் செய்த தவறுக்கு என்ன பிராயச்சித்தம் என்று தடுமாறிக்கொண்டிருக்கும் இந்தக் கொரோனா வேளையில் சா.கந்தசாமி இந்த உலகத்திலிருந்து விடைபெற்றுக்கொண்டது ஒரு நகைமுரண் தான்.

ப.சகதேவன் (ப.கிருஷ்ணசாமி)

krishnaswamip@yahoo.com

9845165940

Series Navigationகலையாத தூக்கம் வேண்டும்கையெழுத்து