நடுங்கும் ஒற்றைப்பூமி

Spread the love

மணி.கணேசன்

விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த
அபசுரங்களையெல்லாம் ஒருசேர்த்து
உரத்தக் குரலில் உயிரைக் கீறும்
யாரும் கேட்டிடாத முரட்டு மலைப்பாட்டாக
முழங்கிக் கொண்டிருக்கும்
கன்னங்கரியக் குயிற்குஞ்சைக் கூரிய
தம் கொடும் அலகுகளால்
கொத்திக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன
ஆவேசப்பட்ட அண்டங்காக்கைகள் கூட்டமாக.
அப்பாடலின் சுருதி முன்பைவிட
பலமாக ஓங்காரித்ததில்
அதுவரை நிச்சலனமாக நின்றிருந்த
கொள்ளைப்போகும் கிரானைட் மலைகளின்
அடையாளம் மழிக்கப்பட்டப் பசுங்காடுகள்
புதிதாய்த் துளிர்த்த தளிர்களுடன்
கந்தக மண்ணில் தம் இன்னுயிரை அடகுவைத்து
வெடிமருந்துகளுக்குச் சாம்பலான பட்டாசுமனிதர்களின்
கருத்தக் காற்றைப் புணர்ந்துக் குலவைச் சத்தமிட
விட்டுவிட்டு அதிர்ந்துகொண்டிருந்தது
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமான
ஒற்றைப்பூமி.

Series Navigationசிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச இலக்கிய சாகித்திய விருதுதிரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்