நமன் கொண்ட நாணமும் அச்சமும்

Spread the love

(வரதராசன். அ .கி)

Battle_at_Lanka,_Ramayana,_Udaipur,_1649-53”மரண பயம்”, ”யம பயம்” என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். கூற்றுவனைப் பற்றி அச்சம் கொள்ளாதோர் உண்டோ? . “ காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழி பட அருள்வாயே” என்று தானே அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். இப்படி உலகில் வாழ் மக்கள் அனைவரும் எவனைக் குறித்து அஞ்சுகிறோமோ அந்த நமனுக்கும் அச்சம் வந்துவிட்டதாம். யமனுக்கும் வந்ததோ யமபயம் என்று எண்ணத் தோன்றுகிறது.
இவ்விதம், யமன் அஞ்சுவது எதைக் குறித்து என்பதைக் கம்பன் சொல்கிறான். யமன் தன்னுடைய கடமையைச் செய்யத்தான் அஞ்சுகிறான். குறித்த காலம் வந்ததும், எந்தெந்த உயிர்களைக் கொண்டுபோக வேண்டுமோ, அவற்றைக் கொண்டுபோவது தான் அவன் கடமை. அதைச்செய்ய அவன் அஞ்சுகிறான் என்பதுதான் கம்பன் பதிவு.
ஆம். அரக்கர்கள் உயிரைக் குடிக்க யமன் அஞ்சுகிறான். அரக்கர் குலத்துக்கு இராவணன் தலைமை ஏற்று, ஆட்சி செய்யத் தொடங்கியது முதல், அரக்கர் குலத்தைச் சேர்ந்த எந்த ஒரு உயிரையும் யமன் கொண்டுபோகவில்லை. அந்தச் செயலைச் செய்ய அவனுக்கு மிகுந்த அச்சம்.
தனக்குரிய வேலையை, தன்னுடைய கடமையைச் சரிவர ஆற்ற முடியவில்லையே என்ற நாணமும் அவனுள் பொங்குகிறது. இவ்வாறு அஞ்சி அஞ்சிக் குலைகின்றேனே என்று தன்னைக் குறித்தே அவனுக்கு வெட்கமும் மீதூறுகிறது.
“ கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி”
என்பது கம்பனின் பாடல் வரிகள். ஆம் அரக்கர் குலத்தவரின் உயிரைக் குடிக்க யமன் அஞ்சுகிறான். அது குறித்துக் கூசுகிறான்.
இவ்விதம் அரக்கர் உயிரைக் குடிக்க முடியாமல் அஞ்சி இருப்பது, அதற்காக கூசிக் குறுகிப் போவது என்ற நிலையை நமன் எய்திய போதிலும், அவ்வுயிர்களைக் குடிக்க அவனுக்கு ஆசையும் மிகுதியாக இருக்கிறதாம்.
நமனுடைய உணவுப்பட்டியலில் அனைத்து உயிர் இனங்களும் உள்ளன. ஆண், பெண், வயதானவர்கள், சிறு குழந்தைகள், வாலிப வயதினர், மிருகங்கள், பறப்பன, ஊர்வன, கடல் வாழ் உயிரினங்கள் என்று அனைத்து உயிர் வகைகளும் அவனுடைய பட்டியலில் உள்ளன; ஆனால் அரக்கர் உயிர் என்ற வகை மட்டும் அந்த உணவுப் பட்டியலில் இடம் பெறவே இல்லை. எனவே அந்த உயிர் வகையும் அதில் இடம் பெற வேண்டும் என்னும் தீராத வேட்கை கொண்டவனாகிறான் யமன். அந்த வகை உயிரை உண்டு, வெகுநாட்களாகி விட்ட படியால், அதற்காக ஏங்கித் தவிக்கிறான் யமன். எப்பொழுது நம் உணவுப் பட்டியலில் அரக்கர்கள் உயிரும் இடம் பெறும் என்று ஆசையோடும் ஏக்கத்தோடும் தாகத்தோடும் உழன்று போய்க் காத்திருக்கின்றான் யமன்.
“ஆசையால் உலழும் கூற்று”
என்று, அவனுடைய ஏக்கத்தைக் கம்பன் சுட்டுகிறான்.
அந்த வித ஏக்கத்தைப் போக்க ஒரு சிறிய வாய்ப்பை இப்போது இராமன் ஏற்படுத்திக் கொடுத்து விட்டான்.
அரக்கர் உயிர் யமனுடைய உணவுப்பட்டியலில் இடம் பெறலாகாது என்ற தடையை இராமன் இப்போது உடைத்து விட்டான். தாடகை வதத்தின் மூலம் அத் தடையை இராமன் நீக்கி, யமனுடைய உணவுப் பட்டியலில் அரக்கர் உயிரும் இடம் பெற வழி வகுத்தான் என்று பாடல் வடிக்கிறான் கம்பன்.
ஆனாலும், யமன் கொண்டிருந்த அந்த மாபெரும் பசிக்கு முன்னால், அவனுடைய தீராத வேட்கைக்கு முன்னால் இது மிகச் சிறிய தீனிதான் என்பதையும் கம்பன் நுணுக்கமாகப்பதிவு செய்துவிடுகிறான். யானைப் பசிக்குச் சோளப்பொறி எனப்து போலத்தான் இந்த தாட்கையின் உயிர் அமைகிறது. ” சுவை சிறிது அறிந்தது” என்பது அவன் சொல்லாட்சி.
”ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே!”
யமனுக்கு இராவணனிடம் இவ்வளவு அச்சமா என வாசகர்கள் ஐயப்படலாம். இந்த அச்சம் இயற்கையானதுதான் என்பது, ஆரணிய காண்டத்துப் பாடல் ஒன்றைப் பார்த்தால் எளிதில் விளங்கிவிடும். பாடல் இதோ:- (ஆரணிய காண்டம் – சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் – பாடல் 17)
சூலமே முதலிய துறந்து, சுற்றிய
சேலையால் செறிய வாய் புதைத்துச் செங்கையன்,
தோலுடை நெடும் பணை துவைக்குந் தோறும்,
காலன் நின்று இசைக்கும் நாள்கடிகை கூறவே. ( 3083)
தன் ஆட்சியில் காலனுக்கு என்று இராவணன் கொடுத்த வேலை பற்றிய பதிவு இப்பாடல். இராவணன் அரண்மனையில் நாழிகையை முரசம் அறைந்து தெரிவிக்கும் வழக்கம் உண்டு. அந்தக் கடிகை கூறும் வேலை எமனுக்கு விதிக்கப் பட்டிருந்ததாம். ஒவ்வொரு நாழிகை முடிந்ததும், தோலால் செய்யப்பட்ட பெரிய பேரிகைகள் ஒலிக்கப்படும். ஒவ்வொரு முறையும் அவை அவ்வாறு ஒலிக்கப்படும் போது, – (தோலுடை நெடும் பணை துவைக்குந் தோறும்) – யமன் வந்து அதனை – அதாவது நாழிகைக் கணக்கையும், நாளின் நிலைமையையும் – அறிவிப்பானாம். அந்த அறிவிப்பையும் யமன் மிகப் பணிவாகச் செய்வானாம். தன்னுடைய உடலைச்சுற்றிப் போர்த்திக் கொண்டிருந்த உத்தரீயத்தால் வாயைப் பொத்திக்கொண்டு, (சுற்றிய சேலையால் செறிய வாய் புதைத்து) தன்னுடைய ஆயுதங்களான கால பாசத்தையும், சூலத்தையும் ஒரு புறமாக வைத்து விட்டு, (சூலமே முதலிய துறந்து), மிக பவ்யமாக அச்செயலை யமன் செய்கிறான் என்பது கம்பனின் பதிவு
.
ஆம்! தாடகை வதைப்படலத்தில் வரும் பாடலில் தான் நமன் கொண்ட இந்த அச்சத்தையும் நாணத்தையும் கம்பன் திருத்தமாகச் சொல்கிறான். காகுத்தன் செய்த கன்னிப் போரில் தான் அரக்கர் உயிர் என்பதன் சுவையைச் சிறிதே அறியும் வாய்ப்பு யமனுக்குக் கிட்டியதாம்.
பாடல் இதோ:- (பால காண்டம்- தாடகை வதைப் படலம் – பாடல் 54)
”வாச நாள் மலரோன் அன்ன மா முனி பணி மறாத,
காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப் போரில்,
கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி,
ஆசையால் உழலும் கூற்றும், சுவை சிறிது அறிந்தது அன்றே (392)

வாசனை மிகுந்த தாமரை மலரில் உறைகிற பிரம்மாவுக்கு நிகரான முனிவன் விஸ்வாமித்திரன். (”வாச நாள் மலரோன் அன்ன மா முனி). அவன் சொன்ன பணியை மறுக்காமல் (பணி மறாத) நிறைவேற்றி வைக்கிறான் இராமன். பொன்னால் ஆன அணிகலன்களைப் பூண்டிருந்த இராமன், (காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன்), தான் செய்த முதல் போரில் (கன்னிப் போரில்), அதனைச் செய்து முடித்தான். (தாடகையின் உயிரைப் போக்கி, அவளை யமனுக்கு இரை ஆக்கினான்). அதன் மூலம், இதுநாள் வரை தான் செய்ய அஞ்சி, அதற்காக நாணிக் கொண்டிருந்த யமனுக்கு (கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி, ஆசையால் உழலும் கூற்றும்) இப்போது அந்த அரக்கர் உயிரின் சுவையைச் சிறிது அறிந்து கொள்ள முடிந்தது. (சுவை சிறிது அறிந்தது அன்றே) –

என்று கம்பன் பாடல் வடிக்கிறான்.

கம்பன் கவிச்சக்ரவர்த்தி தான்.!

அ.கி.வரதராசன், (girijaraju@hotmail.com)

Series Navigationபுத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.