நம்பிக்கையே நகர்த்துகிறது

                         

                                               

                                                வளவ. துரையன் 

             

[அன்பாதவனின் “பிதிர்வனம்” புதினத்தை முன்வைத்து]

அண்மையில் அன்பாதவன் எழுதி வெளிவந்துள்ள புதினம் “பிதிர்வனம்”. சிறந்த கவிஞராக,  சிறுகதை ஆசிரியராக தம்மை வெளிக்காட்டியவர் இப்பொழுது நாவலாசிரியராகப் புது பரிணாமம் எடுத்துள்ளார்.

 

2006-ஆம் ஆண்டு மும்பை புறநகர்ப் பகுதியில் ரயில் நிலையங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை நாவலின் மையமாக்கி இருக்கிறார். அன்பாதவன் சில ஆண்டுகள் மும்பையில் பணியாற்றியதால் மும்பையின் பல்வேறு தளங்களைச் சிறப்பாகப் படம் பிடித்துள்ளார்.

 

ஆங்காங்கு உள்ள கவிதைகள் நின்று நிதானித்து வாசிக்க வைக்கின்றன. 77-ஆம் பக்கக்கவிதை  மிக யதார்த்தமாக,

 

                  ”மூர்ச்சித்துக் கிடப்பவனைப் பரிதாபமாகப் பார்த்து

                  செய்வதறியாமல் கூவிநகர்ந்து

                  கடந்து செல்கின்றன மின்ரயில்கள் பலதடங்களில்…”

 

என்ற அடிகளைக் காட்டுகிறது. அஃறிணையான மின்ரயில்களின் நிலையை மாந்தரோடு ஒப்பிடுவது மனத்தில் நிற்கிறது. வேதாளம் நண்பராக வந்து உரையாடுவது ஆசிரியருக்குப் பல செய்திகளச் சொல்ல வழி வகுக்கிறது. டப்பாவாலாக்கள் பற்றிய பதிவை மிக நேர்த்தியாகக் கவனத்துடன் செய்திருக்கிறார். அது மிகவும் தேவையான பதிவு. பலரும் அறியாத உலகம் அது.

 

நாவலின் ஊடே வரும் கஸல் கவிதைகள் அருமையாக உள்ளன. குறிப்பாக,

 

            ”என்வில்லும் நீதான்

            என் அம்பும் நீதான்

            உன்னால் வீழ்த்தப் படுவதற்காகவே

            படைக்கப்பட்ட பறவை நான்”      [பக்:34]

 

எனும் கவிதை மனத்தை உருக்குகிறது. தன்னிரக்கத்தை வெளிப்படுத்தும் அவலத்தின் உச்சி அது. ஒவ்வொரு குண்டுவெடிப்பும் அன்பாதவனின் எழுத்தில் நம்மைப் பதற வைக்கின்றன. ஆனால் அந்தப் பதற்றத்தையும் மனத்தில் தோன்றும் அச்சம், அவலம் போன்றவற்றையும் முழுக்க்க் கனமாக மாற்றாமல் ஆங்காங்கே சில எள்ளல்களை கலப்பது நல்ல உத்திதான்.

 

ஆனால் ஓரிரண்டு குண்டுவெடிப்புகளுக்குப் பின்வரும் அத்தியாயங்களின் முடிவில் குண்டுவெடிப்பு இருக்கும் என நாம் ஊகிக்கும்படி இருப்பது ஒரு பலவீனம்தான்.  

 

அதேபோல குண்டுவெடிப்புக் காரணம் வேவுப்பிரிவு என்பது ஒரு மிகையான கற்பனை. நாவலின் பலமே வாசிக்கக் களைப்பு தராத நல்ல ஓட்டம்தான். “காலம் மாறும்! தேவைகள் மாறும்! அதிகார மையங்களும் மாறும்” என்பதே நாவல் உணர்த்தும் சத்தியமான வார்த்தைகள். முதல் ஆட்டத்திலியே ஆட்ட நாயகன் விருது பெறும் தேர்ந்த நிபுணன் போல அன்பாதவன் முதல் நாவலிலேயே வெற்றி பெற்றுள்ளார்.  

 

[பிதிர்வனம்—நாவல்—அன்பாத்வன்; வெளியீடு: உதகண்ணன், புதியஎண்-10, கல்யாண சுந்தரம் தெரு, பெரம்பூர்—சென்னை—600 011— 94446 40986; பக்: 152; விலை: ரூ 150]

 

Series Navigationமனிதனின் மனமாற்றம்