நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை

கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே சுவாரசியத்தைக் கூட்டுவதாகவே உள்ளது. கதை சொல்லப்படும் நேர்த்தியின் பாற்பட்டு வாசிப்பனுபவத்தை மட்டுமல்ல. அதைச்சுற்றிப் பின்னப்படும் கற்பனைகள் கொண்ட அக உலகை தனக்கு மட்டுமேயானதாக ஆக்குவதால் கதைகள் வாசித்தலின் சாரமும் வசீகரமும் என்றும் குறைதுவிடாமலே தொடர்கிறது என்னை.

நர்சிமின் முதல் சிறுகதைத் தொகுதி இது இதன் பின் பல நூல்கள் வந்துவிட்டன. பல காலம் முன்பே படித்தாலும் தற்போதுதான் நேரம் கிடைத்திருக்கிறது பகிர .பதிவுலகத்திற்கு இத்தொகுதியைச் சமர்ப்பித்திருப்பது சிறப்பு !

அய்யனார் கம்மாவின் திடுக் முடிவு , ம’ரணம்’ சந்தர்ப்ப’வதம்’ மனக்குரங்கு, அதிர்ச்சி ரகம்.

தந்தையுமானவன் உள்ளடக்கிப் பொங்கும் வருத்தம், திகட்டத் திகட்டக் காதலித்தவளோடு திருமணம், செம்பட்டைக் கிழவி மேலான பாசம், தொடரும் முடிவுகள்,எல்லாம் மனித உறவுகளின் மேன்மையைப் பேசும் கதைகள்.

ஞாபகமாய் ஒரு உதவி தாமதமான உதவியால் எந்தப் பயனுமில்லை என்பதைச் சொன்னது. மாநகரம் மனிதர்களை எப்படி மாற்றுகிறது என்பதைச் சொன்ன கதை மாநரகம். வெத்தலப் பெட்டியின் பழக்கம் அவனது வாரிசுக்கும் தொடர்ந்திருப்பது பற்றிச் சொன்ன கதை,

அன்பின் கதை முழுக்க முழுக்க அன்பில் தோய்ந்த ஒரு காதல் கடிதம். இழந்துவிட்ட காதலிக்கான உருக்கம் நம்மையும் உருகவைத்தது./// மரணம் விட்டுச் செல்லும் வலியை ஒருவருக்கும் தரக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறேன். அல்லது கல்லாய் மாற்றிக்கொண்டேன் என்னை…//

தலைவர்கள் கதை கல்லூரியில் கலந்து கொண்ட டம் ஷெராடை ஞாபகப் படுத்திச் சிரிக்க வைத்தது.

கொஞ்சம் சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திர குமார் சாயலில் வார்த்தைகள், வார்த்தைப் பாணிகள் வருகின்றன என்பது அவர்களை வாசித்தவர்கள் உணரலாம்.

தலைப்புகளிலும் வித்யாசம்,ம’ரணம்’. மா’நரகம்’ , சந்தர்ப்ப’வதம்’ என்று கதைத் தலைப்புகளே நறுக் சுறுக் கென்று இருக்கின்றன. முன்னுரை கூட ’என்’ணங்கள் ஆக இருக்கிறது.

மொத்தத்தில் அருமையான தொகுப்பு. சரளமான நடை. தனியாய் மேற்கொண்ட ரயில் பிரயாணப் பொழுதை சுவாரசியமாக்கியது.

ஆசிரியர் :- நர்சிம்
நூல் :- அய்யனார் கம்மா
பதிப்பகம் :- அகநாழிகை.
விலை – 40 ரூ

Series Navigationஒரு விநோதமான இரவும் அதன் பின்னும்காதல் கண்மணிக்குக் கல்யாணம்