தமிழ்ச்செல்வி கவிதை நூல் வெளியீடு அறிவிப்பு

This entry is part 7 of 22 in the series 16 நவம்பர் 2014

001unnamedகாதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது, எவராவது உள்ளாரா ? காதல் தவிப்பு களில் நெஞ்சுருகாத கவிஞர் யாராவது உண்டா ? மானிட வாழ்வுக்குக் காதல் எவ்விதமான நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளது என்பதை என் நண்பர் கவிஞர் புகாரி காட்டுகிறார் ஒரு கவிதையில்.

தாவிடும் ஆசைகள் கூத்தாடும்! இன்பத்

தவிப்புகள் சிக்கியே நாளோடும் !

மானிடம் பூத்தது, காதலுக்காய்! அந்த

மன்மத ராகங்கள் வாழ்வதற்காய் !

அடடா! இந்த வரிகளும், வார்த்தைகளும் நடனமாடி எப்படித் தாளங்கள் போடுகின்றன ? இந்த சந்த நடைக் கவிதையை இசையுடன் நாம் பாடிச் சுவைக்கலாம்.

தமிழ்ச்செல்வியின் இரண்டாம் கவிதைத் தொகுப்பு “காதல் மட்டும் வாழ்கிறது” என்னும் நூலுக்கு முன்னுரை எழுத ஆரம்பித்த போது, ஆங்கில மேதை பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் நினைவுக்கு வந்து “நான் எதற்காக வாழ்ந்திருக்கிறேன்,” என்னும் அவரது கட்டுரையில் காதல் உணர்ச்சி பற்றி அவர் கூறியதை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

காதல் உணர்வு, ஆண்-பெண் பிணைப்பு பற்றி ரஸ்ஸல் கூறுவது இதுதான் :-

“மூன்று இச்சைகள் என் வாழ்வை ஆட்கொண்டு என்னை வழிநடத்திச் சென்றன: அவை எளியவை. ஆனால் தீவிரமாய்ப் பொங்கி எழுந்தவை. நேசத்துக்கு ஏங்கும் பிணைப்பு உணர்ச்சி, மெய்யறிவை தேடும் ஞான உணர்ச்சி, இடர்ப்படும் மாந்தர் மீது எழும் இரக்க உணர்ச்சி. சூறாவளிப் புயல் போன்று, இந்த மூன்றும் என்னை இங்குமங்கும் அலைத்து ஆழ்ந்த மனக்கசப்புத் துயர்க் கடலின் எல்லையைத் தொடும்படி தள்ளி விட்டன!

காதலை முதலில் தேடிச் சென்றதின் காரணம், மெய்மறந்த இன்பத்தை எனக்கு அது அளித்தது! பேருவகையில் விளைந்த அச்சிறு நேர இன்பத்திற்காக வாழ்வின் மற்றைய காலத்தை எல்லாம் தியாகம் செய்யத் துணிந்தேன். பயங்கரத் தனிமைத் தவிப்பிலிருந்து காதற் பிணைப்பு என்னை விடுவித்தது! தவிக்கும் மனித நேச உணர்ச்சி உலகின் விளிம்பிலிருந்து ஆழங் காண முடியாத, உயிரற்ற பாதாளத்தை நோக்கும் தனிமையிலிருந்து விடுவிப்புக் கிடைத்தது. முடிவாக அதைத் தேடி அடைந்தேன். கருதொருமித்த காதல் இணைப்பில் சித்தர்களும், கவிஞர்களும் மாயச் சிற்றுலகில் சொர்க்கத்தைக் கற்பனித்த காட்சியைக் கண்டேன்! அதைத்தான் தேடினேன்! மனித இனத்திற்கு கிட்டிய பெரும் பேறாகத் தோன்றிய அதனை, இறுதியில் நான் தேடி அடைய முடிந்தது.

நமது இனிமையான கீதங்கள் எல்லாம் மிகச் சோகத்தைத் தரும் நமது சிந்தனைகளே என்று சொல்கிறான் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி. தமிழ்ச்செல்வியின் இந்தக் கவிதைத் தொகுப்பு ஓர் கண்ணீர்க் காவியமே !. காற்று மூலம் தூதனுப்பி, கார்மேகம் தூது சொல்லி நித்தம் உன் நினைவு களில் வாடி என்னும் வரிகள் கவிக் காளிதாசனின் மேத தூதம் காவியத்தை நினைவூட்டுகிறது.

ஆனால் தமிழ்ச்செல்வியின் காதல் கீதாஞ்சலியில் தோல்வியான ஒரு நேச உறவின் தொனிதான் ஆதிமுதல் அந்தம்வரை எதிரொலிக்கிறது. காதலன் பேச்சு வார்த்தை களில் தூரிகையின்றி தீட்டப் படுகின்றன வண்ணக் கனவுகள். அவனது மௌனம் போல் அவளை இம்சிக்கப் பிறந்தது எதுவுமில்லை. காதலன் வாழ்க்கைத் துணையாக வரா விட்டாலும் வழித்துணையாக வேணும் வந்திருக்கலாம் என்று நைந்து போகிறது மனம். காதலற்ற மனங்கள் எத்தனையோ அவளைத் தீண்டிச் சென்றதற்கு நன்றி கூறுவதைத் தவிர வேறு எதுவுமில்லை. மானுடத்தைக் கடவுள் படைக்கப் பட்டது நேசத்தின் அழமான பகிர்தலுக்காவே. ஆனால் கவிதைக் காரிகைக்கு இது பகிரப்பட வில்லை என்பது வாசகர் மனத்தை வருத்துகிறது. காதலன் திரும்பாத நாட்கள் மனம் அரும்பாய்க் கூம்ப இருவராய் நடந்த பாதையில் இப்போது அவள் மட்டும் தனியளாய்த் தடம் வைக்கிறாள்.
தமிழ்ச்செல்வி எட்டு வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு; அவரது முதல் கவிதைத் தொகுப்பு “இது நிகழாதிருக்கலாம்,” நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் எழுதியவை கடுகளவு; எழுதப் போவது கால் பந்தளவு. குடத்து விளக்காய் இருந்த இந்த ஒளிவிளக்கில் எண்ணை ஊற்றிக் குத்து விளக்காய் ஏற்றி வைத்த நண்பர் பதிப்பாசிரியர் திரு. வையவன் அவர்களுக்கு எனதினிய நன்றி.

சி. ஜெயபாரதன், கனடா.

செப்டம்பர் 1, 2014

தமிழ்ச்செல்வி எட்டு வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இது அவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு; முதல் கவிதைத் தொகுப்பு “இது நிகழாதிருக்கலாம்,” நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் எழுதியவை கடுகளவு; எழுதப் போவது கால் பந்தளவு. குடத்து விளக்காய் இருந்த இந்த ஒளிவிளக்கில் எண்ணை ஊற்றிக் குத்து விளக்காய் ஏற்றி வைத்த நண்பர் பதிப்பாசிரியர் திரு. வையவன் அவர்களுக்கு எனதினிய நன்றி.

சி. ஜெயபாரதன், கனடா.

செப்டம்பர் 1, 2014

+++++++++++++++++++++++++++++

பக்கங்கள் : 112

விலை : ரூ 100

நூல் கிடைக்குமிடம்:

தாரிணி பதிப்பகம்,

4A Ramya Plots

32 /79 Gandhi Nagar 4th Main Street

Adayar – Chennai : 600,0020

Mobile : 99401 20341

dharinipathippagam@gmail.com

+++++++++++++++++++++

Series Navigationஅந்திமப் பொழுதுவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *