நல்ல நண்பன்

Spread the love

நான்
உரிக்கப் படுகிறேன்
அவன் அழுகிறான்

எனக்குள்
ஒரு பூ சிரிப்பதும்
ஒரு புதைகுழி
அழைப்பதும்
அவனுக்குத் தெரிகிறது

ஒரு பெண்
எனக்குச் சொல்வதும்
அவனுக்குச் சொல்வதும்
ஒன்றே

எனக்கு
ஒன்று ருசி என்றால்
அவனுக்கும்
அது ருசியே

இப்படித்தான்
நானென்று
நான் சொல்வதும்
என் நண்பன்
சொல்வதும் ஒன்றே

புறத்தை
மட்டும் சொல்பவன்
நண்பனல்ல
அவன்
அகத்தையும்
சொல்வான்

தப்பான பாதையில்
அவன் முள்
நல்ல பாதையில்
அவன் புல்

இன்று
நல்ல பழம்
நாளை அழுகும்
நல்ல நண்பன்
எப்போதுமே
நல்லவன்

நல்ல நூலாய்
என் நண்பன்
என்னை அவன்
இன்னொரு
நூலாக்குகிறான்

காரி உமிழ்ந்தாலும்
எனக்கு ஆறுதல் சொல்வான்
‘என்னால் மண்ணுக்கு
உரம் சேர்ந்திருக்கிறதாம்’

நான் எடுக்கிறேன்
அவன் கொடுக்கிறான்
அவன் எடுக்கிறான்
நான் கொடுக்கிறேன்.
இருவரும் எப்போதும்
நிறைவாக

நல்ல நண்பர்கள்
பொட்டும் நெற்றியும்
நாசியும் சுவாசமும்
பசியும் உணவும்

அமீதாம்மாள்

Series Navigationநெய்தல்—பாணற்கு உரைத்த பத்துஇரணகளம் நாவலிலிருந்து….