நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:


வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே.

 

 

 ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை மாலை இடம் காலியானவுடன் கூட்டம் போட்டு விடுவார். எனக்குத் தெரிந்து தேவநேயப்பாவாணர் பேரரங்கையோ சிற்றரங்கையோ ( வாடகை வெறும் ஐம்பது ரூபாய்தான்) எடுத்ததாக எனக்கு நினைவில்லை.. என்கிறார் கட்டுரையாளர்.விருட்சம் சார்பில் எழுத்தாளர் அழகியசிங்கர் நிறைய கூட்டங்களை தேவநேயப்பாவாணர் சிற்றரங்கில் – அதன் வாடகை 50 ரூபாயாக இருந்தபோதும் சரி, முந்நூறு ரூபாயாக உயர்ந்த பிறகும் சரி நடத்தியிருக்கிறார். தனியொரு மனிதனாக அழகியசிங்கர் இருபது வருடங்களுக்கும் மேலாக நவீன விருட்சம் இலக்கிய இதழை நடத்திவருவதை, அதற்கு அவர் செலவழித்திருப்பதைப் குறிப்பிட, பாராட்ட மனமில்லை கட்டுரையாளருக்கு. அவரைக் கேவலப்படுத்தி மகிழ்கிறார்.

 

 

இலக்கியக் கடலில் கால் நனைத்துக் கொண்டிருந்த எனக்கு அப்போதெல்லாம் அவர்கள் பேசுவது க்ரீக் அண்ட் லேட்டிந்தான். க.நா.சு., என்பார்கள், வெங்கட் சாமிநாதன் என்பார்கள், பிச்சமூர்த்தி என்பார்கள்.. ஏகப்பட்ட பல்லிகள் உச்சு கொட்டும்.. என்று இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும் வாசகர்கள், படைப்பாளிகள் அனைவரையும் ‘பல்லிகளாகப் பழிக்கிறார்.

 

வெட வெடவென்று இருக்கும் வயசான ( அப்போதே) னால் திருத்தமாக உடை உடுத்திக் கொண்டிருந்த கவிஞர் க்ருஷாங்கினி ( என்ன பெயர் என்று நினைத்துக் கொண்டேன்) அங்குதான் அறிமுகமானார் என்று கவிஞர் கிருஷாங்கினியைப் பற்றி விவரித்திருப்பதுகூட நயமான விவரிப்பாக இல்லை.

 

 ”இலக்கியக் கூட்டத்தில் இலக்கியம் பேசியது அவர் ஒருவர்தான். இதற்கு முன்னால் பேசியவர்கள் எல்லாம் க.நா.சு. வின் உடை, நடை, குணம் என்று ஏகத்துக்கு பேசி என்னை மரத்துப் போக வைத்திருந்தார்கள். மனிதரோ போய்விட்டார்.. இப்போதென்ன உடை, நடை பற்றியெல்லாம் என்று உள்ளூக்குள் அலறினேன். படைப்பைப் பற்றி பேசுங்கப்பா என்று ஒலியின்றி வார்த்தைகளை உமிழ்ந்தேன்” என்று க.நா.சுவுக்கு  விருட்சம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் பற்றி அங்கலாய்க்கிறார். க.நா.சு நினைவுக்கூட்டத்திலும் அந்த எழுத்தாளருடனான தமது பரிச்சயத்தைப் பற்றி சக எழுத்தாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். அது க.நா.சுவின் படைப்புலகம் குறித்த திறனாய்வுக் கூட்டமல்ல. இதை எழுத்தாளர் பிரபஞசனிடமே கேட்டு அவர் தெரிந்துகொள்ளலாம்.

 

முதல் முதலில் க.நா.சு.வைப் பற்றி கேள்விப்படுகிறேன் .. இத்தனைக்கும் மனிதர் மயிலாப்பூரில் நான் கூப்பிடும் தூரத்தில் தான் இருந்திருக்கிறார்..வயசானவர், தனியாள்.. போய் பேசியிருக்கலாம்..லதா ராமகிருஷ்ணன் தான் கடைசியில் அவருக்கு ஒத்தாசையாக இருந்தாராம்..” என்று குறிப்பிட்டுள்ளார் கட்டுரையாளர். க.நா.சுவின் மனைவி அவருடனே வாழ்ந்துவந்தார். க.நா.சுவைப் போய் பார்த்துவிட்டு வரும் எத்தனையோ எழுத்தாளர்களில் நானும் உண்டு. அவருடைய எழுத்தாக்கங்கள் சிலவற்றை பிரதியெடுத்துக்கொடுத்திருக்கிறேன். அறிவார்ந்த, ஆரவாரமற்ற அவரிடம் பேசுவதில் அமைதியும், மனநிறைவும் கிடைக்கும். மற்றபடி,‘ஒத்தாசையாக’ இருந்தாராம்’ என்பதெல்லாம் ‘வேண்டாத மிகைவார்த்தைகள்’.

 

 

பின்னாளில் செங்கல்பட்டில் மு. முருகேஷ், வெண்ணீலாவின் புத்தக வெளியீட்டுக்குப் போய் திரும்புகையில் இரவு பத்து மணி வரை அவருடன் மின்சார வண்டியில் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்” என்று குறிப்பிட்டு முடித்துவிடுவதற்கு பதிலாக கட்டுரையாளர் மேற்குறிப்பிட்ட விவரிப்புகளுக்கு ஒதுக்கிய இடத்தில் பிரபஞ்சனுடனான அந்த மறக்கமுடியாத பயணம் குறித்து, அந்த அனுபவம் குறித்து கட்டுரையில் அதிகமாகப் பதிவுசெய்திருக்கலாம்.

Series Navigationபிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழாமுன்னணியின் பின்னணிகள் – 14 சாமர்செட் மாம்