நான்கு கவிதைகள்

 

 

பின்புலம்

பற்றற்ற வாழ்வைத் தாருமென

வேண்டி நிற்பதுவே

வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான்.

ஆசையை அழித்து விடு

என்று பறைவதில்

ஒளிந்திருப்பதும் 

ஆசையின் ஒலியன்றோ?

இயல்பு

வனத்தில் மேய்வது

இனத்தின் இயல்பு.

பிரித்துக் காட்டுவது

அறிவின் தாக்கம்.  

விமர்சகன்

அந்தக் கண்ணாடியின்

முன்நின்றவர்கள்

தங்களைப்

பார்த்து விட்டு

ரசம் போய்விட்டதென்றார்கள்.

ரசமெல்லாம் கச்சிதமாகத்தான்

இருந்தது.

அவர்கள் காணவிரும்பிய

தோற்றத்தைத்தான்

அது

காண்பிக்கவில்லை.

(நி)தரிசனம்

ஜில்லென்ற புல்வெளியில்

காலை அழுத்தித் தேய்த்து

நடந்தான்.

‘ஆஹா, என்ன சுகம்’ என்று.

‘ஐயோ வலிக்கிறது!’

என்றது புல்.

Series Navigationபுதியனபுகுதல்மூட முடியாத ஜன்னல்