நித்ய சைதன்யா கவிதைகள்

Spread the love

நித்ய சைதன்யா

 

1.

வெறுமை குறித்த கதையாடலின்

முதற்சொல் உன் பெயர்

நாளெல்லாம் ரீங்கரித்து

இசையாகிய பொழுதுகள்

பொற்காலம்

தேடித்தேடி சலித்தபின்

வந்தமர்ந்த நாட்களில்

வெளுக்கத் தொடங்கியது

உனதும் எனதுமான இச்சைகள்

கூடியிருந்தும் இசைய மறுத்தன

நடுநிசியின் ராகங்கள்

பிரிந்து செல்ல வேண்டி

பறிக்கிறேன்

உன் பெயர் சூடிய

என் பெயரை

 

 

 

2.

வழிந்து சென்றன

புத்தக அலமாரியில்

நிரம்பிய சொற்கள்

மலர் என்ற சொல்

அழைத்து வந்தது

பூத்துக் குலுங்கிய அடர்வனமொன்றை

ஊன் விரட்டி உதிரம் ருசித்து

வனமதிர கர்ஜித்தது

சொல் வெடித்துப்பிறந்த சிங்கமொன்று

குளிர் உறைந்த நதியின் மீது

துள்ளிப்பாய்ந்தன

நிலமறியா குறுமீன்கள்

நிலைக்கண்ணாடி மிதக்க

நுரைத்துப் பொங்கியது

அலைகளற்ற பேராழி

நதிக்கரையோரம் தனித்திருந்த

சிற்றிடைப்பெண்ணை நெருங்கிய

நொடிப்பொழுதில்

அனைத்தையும் கலைத்துப்போட்டது

மீண்டும் உன் வருகை

 

3.

சன்னல் அமர்ந்து

அறையை வெறித்தது

வானறிந்த அச்சிறு பறவை

கூரலகு கம்பி உரச

பற்றிப் படர்ந்தது

அலைதலின் நெருப்பு

வெளியைப் புணர்ந்து

சிலிர்த்து நின்றது

அறையி்ன் குறி

உச்சம்  நிகழ்ந்த

நீர்மையில் வேர்ப்பிடித்தன

அகாலத்தின் விதைகள்

நிலம்கீறி தளிர்த்த

சிற்றிலையில் இளைப்பாறுகிறது

நீ சிறைப்படுத்திய

அச்சிறு பறவை

நித்ய சைதன்யா

Series Navigationபறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’தொடுவானம் 149. கோர விபத்து