நினைவில் உதிர்தல்

முருகன்.சுந்தரபாண்டியன்
 
1
பால் வைத்தக் கதிரை பிதுக்கி உன் நாவையும் என் நாவையும்
சுவைக்கச் செய்த என் பால்ய விரலுக்கு
சில வரிகள் காதலில் வராமல்
பார்த்து பார்த்து எழுத்துக்களால் இவ்விரரை
எடிட் செய்துகொண்டிருக்கிறது…
சொல்லாமல் சொன்னவைக்கு
ஒரு மொட்டை மாடியில்
மத்தியில் அமர்ந்து யோசிக்குமளவு
ஒன்றுமில்லையென பதில் தகவல் அனுப்புகிறாய்.
காலையிலிருந்து இறுக்கும் என் பரிதவிப்புகள் மெல்ல உதிர்கிறது
இந்த இரவளவு பூரணத்தின் மேல் நிரம்புகிறது.
உன் வார்த்தைகள் பதிவிறக்கமாகையில்
ஓங்கி விழுந்தது ஒரு மின்வெட்டு,
இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டதில்
நீ பேசி நான் வாங்காத ஒலிப்பகிர்வுகள்
இணையத்தில் இரவு பகலற்றும் காத்திருக்கத் தயாராக இருக்கிறது.
விரல்கள் பால்யத்திலிருந்து மீண்டும் முளைக்கின்றன
வெளிச்சமில்லா என் இரவெங்கும்
முதலில் நெற்பயிர் பொதிந்திருந்த பால் பிதுக்கிய வாசனை
பின்… மின்னும் நட்சத்திரங்களை காண்பது போல ஒன்றுக்கொன்று
நினைவினுள் தவளையாக தாவிக்கொண்டிருக்கிறது
எப்போதும் இணைந்திருக்க துண்டிக்கபடா நினைவுகளிருப்பது தான்
அவ்வபோது ஆறுதல் என உனக்காக எழுதி வைத்திருக்கிறேன்
இந்த இணையவெளி காத்திருப்பில்…
2
அழகென அதிகாலை திறக்கும் பெருமழையின்
கொஞ்சிடும்
முதல்த் துளியாக
தாளிடாமல் செல்கிறாய்
சிறு உதட்டுக் குவியலோடு…
காற்றழைக்க வேண்டிய பூவாக
திறந்து கிடக்கும் உனக்கான பொழுதில்
உதிர்ந்து கிடக்கிறேன் நான்…
3
கிளம்ப உறுமுகிறப் பேருந்தின்
சாளர விளிம்பில் தாடை தாங்கிக்
கம்பிகளுக்குக் கீழே ஏக்கமற்றதாய் நிற்கும்
தன் உலகத்தை, கொஞ்சம் கொஞ்சமாக
பின்னோக்கி பிரிபவளின்
கண்களில் கசியும்
இதய தூரத்தின் இடைப்பட்டச் சமநிலை.
4
உளுந்தோடு குவிந்த வெயிலை
விரட்டியும் மிரட்டியும்
உருட்டு கம்பதிர திம்முதிம்மென
வெயிலைக் காதலித்துக் கொள்வாள்
முத்தாமாச்சி…
ஆமா,
கண்ணசைக்காமல் பார்த்துக் கொண்டிருப்போம்
ஆச்சி இல்லா நேரத்திலும்
விரிஞ்சி கிடக்கும் உளுந்து
வெட்கப்பட்டுத் தானா வெடிக்கும்
எங்க ஆனாலும் கூட கிடக்கும் நிழலை
கறுத்த வெயில் என்பவளுக்காக…
Series Navigationகவிதைகள்வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15