நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்

Spread the love

இன்றைய ஹாட் நியூஸ்: தமிழகத்தில் இடைத் தேர்தல்; டெல்லியில் சிதம்பரம்; உலகத்தில், நியுட்ரினோ (Neutrino)! என்ன அது? இயற்பியல் பயில்வோருக்கு முதல் பாடமே, ஒளியின் வேகம் குறித்து ஐன்ஸ்டீன் உருவாக்கிய சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special relativity theory) தான். இன்று வரை, ஒளியின் வேகத்தை காட்டிலும் வேகமாக எதுவும் பயணிக்க முடியாது என்று அந்த கோட்பாடு கொண்ட கருத்தை கற்பிதம் என்று நிரூபிக்கும் கண்டுபிடிப்பாய் அமையப் போகிறது நியுட்ரினோவின் வேகம். அதைப் பற்றி சில செய்திகளை பார்ப்போம்.

நியுட்ரினோ என்ற வார்த்தைக்கான பொருள், ‘சிறிய சார்புருதியற்ற ஒன்று’ (small neutral one) என்பதாகும். அதாவது, மின்காந்த விசையால் (Electromotive Force) எந்த பாதிப்பும் அடையாமல் சார்புருதி அற்ற ஒரு பொருள் என்று கூறலாம். இது அணுவினின்றும் சிறிய பொருள் என்றும், இதன் திரண்ட நிலை (mass) ஏறக்குறைய பூஜ்ஜியம் என்றும் கூறப் படுகிறது. 1930- ஆம் ஆண்டு வுல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) என்ற இயற்பியல் மேதையால், இப்பொருளின் முதல் வடிவம் கோட்பாடாக அறிவிக்கப் பட்டது. பின், 1956 -இல் கிளைட் கோவான், பிடெரிக் ரெயின்ஸ் ஆகியோரால் நியுட்ரினோ கண்டு பிடிக்கப் பட்டது. தற்போது இந்த பொருள், ஒளியை விட வேகமாக பயணிக்க வல்லது என்று ஐரோப்பிய அறிஞர்களால் தெரிவிக்கப் படுகிறது.

நியுட்ரினோ எந்த பொருளையும் ஊடுருவிச் செல்லக் கூடிய திறன் கொண்டது. அதனால், ஜெனிவாவில் உள்ள CERN என்ற ஆய்வுக்கூடத்தில் 1300 மெட்ரிக் டன் எடையுள்ள இயந்திரம் (OPERA) கொண்டு நியுட்ரினோவை பூமிக்குள் செலுத்தினர். சுமார் 16,000 நியுட்ரினோக்களின் வேகத்தை ஆராய்ந்தனர். 2.3 மில்லி செகண்ட் நேரத்தில், 730 கிலோமீட்டர் பயணித்த நியுட்ரினோ, ஒளியை விட சுமார் 60 நானோ செகண்ட் அதிக வேகத்தில் சென்றதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை அதி நவீன கருவிகள் மூலமாக, நுணுக்கமான கடிகாரத்தின் துணை கொண்டு கண்டு பிடித்திருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக பார்க்கப் படுகிறது. இதனை பல ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். அதற்கான காரணமாக சிலர் கூறுவது, ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது என்னவென்றால், சில தவறுகள் எங்கள் கண்ணுக்கும்,மூளைக்கும் எட்டாக் கனியாக இருந்திருக்கலாம். அவை முடிவின் மீது தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு.இது மேலும் உற்று கவனிக்கப் படவேண்டிய ஆராய்ச்சி’ என்பதாகும். இதனால், குழுவினர், தீர்கமான முடிவை அறிவிக்கவில்லை என்பது தெளிவாகிறது’.

மேலும் சிலர், ‘இந்த ஆராய்ச்சியின் முடிவில் கூறப் பட்டுள்ள நிலையற்ற தன்மை நேரம் (uncertainty) பத்து நானோ செகண்ட் ஆகும். இது சாத்தியமாவது மிகவும் கண்டினம்’ என்கின்றனர்.

இந்த கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தையும், ஆச்சர்யத் தன்மையையும் ஏற்கும் சிலர், மேலும் பல ஆராய்ச்சிகளை செய்து இதே வேகத்தில் நியுட்ரினோ பயணிக்கிறது என்று நிரூபித்தால், தாங்கள் ஒப்புக் கொள்ளத் தயார் என்றும், இதை ‘சாத்தியம் அற்றது’ என்று சொல்லி முழுமையாக ஒதுக்க இயலாது என்றும் கூறியுள்ளனர். இதையெல்லாம் தாண்டி ஒரு கடைசி கேள்விக்கு பதிலாய்,

‘இந்த கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன்-இற்கு இழுக்காக அமையுமா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். இது நிரூபிக்கப் பட்டால், இயற்பியலை மாற்றியமைத்துவிட்டதாக அர்த்தமல்ல! இயற்பியலை மேலும் புதுப்பித்த கண்டுபிடிப்பாகவே அமையும்!”, என்று ஆராய்ச்சியாளர்கள் கூற, மூச்சு விட முடிந்தது பழமை வாதிகளுக்கு!

 

Series Navigationபறவையின் இறகுபாரதியாரைத் தனியே விடுங்கள் !