நிலாவும் குதிரையும்

Spread the love

குமரி எஸ். நீலகண்டன்

 

பரந்த பசும் வெளியில்

பாய்ந்து சென்றது

ஒரு குதிரை

தன்னந்தனியாய்.

 

ஆடுகள் மாடுகள்

ஆங்காங்கு மேய்ந்திருக்க

இறுமாப்புடன்

வானம் நோக்கியது.

 

வட்ட நிலாவைக் கண்டு

அழகிய இளவரசி

தன்மேல்

சவாரி செய்வதாய்

நினைத்துக் கொண்டது.

 

முதுகில் இருப்பதாய்

கூடத் தெரியவில்லை…

எவ்வளவு

மெல்லிய உடலுடன்

என் மேல் சவாரி

செய்கிறாளென

இன்னும் குதூகலமாய்

குதித்து குதித்து

பறந்தது.

 

அங்கே ஒரு அழகிய

தாமரைக் குளம் வந்தது.

குளத்தில் நிலாவைக்

கண்டதும்

அதிர்ந்து போனது.

 

தான் துள்ளிக்

குதித்ததில்

இளவரசி குளத்தில்

விழுந்ததாய் எண்ணி

சோகமாய் குனிந்து

நிலாவைக் கரையேற்ற

இயன்றவரை முயன்றும்

இயலாமல் சோகமாய்

குனிந்து மெதுவாய்

ஒரு மேடு

நோக்கி நடந்தது.

 

திடீரென வானத்தைப்

பார்த்த போது

நிலாவைப் பார்த்து

இளவரசி மீண்டும்

முதுகில் ஏறி

விட்டதாய் எண்ணி

இனி விழாத

அதிக சிரத்தையுடன்

ஆடி அசைந்து

இன்னும் இறுமாப்பாய்

பயணித்து

கொண்டிருந்தது

பரவசக் குதிரை.

Series Navigationகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)