நிலா அதிசயங்கள்

அலை கடலில்
நீராடி வானமேறியது
வண்ண நிலா.

மங்கலப் பெண்ணாய்
மஞ்சள் முகத்தில்
ஆயிரமாயிரம்
வெள்ளிக் கரங்களால்
அழகழகான மலர்களை
அணு அணுவாய்
தொட்டு நுகர்ந்தது.

தாமரை மலர்களை
எல்லாம் தடவித்
தடவி தடாகங்களில்
மிதந்து களித்தது.

பழங்களையெல்லாம்
மரத்திலிருந்து
பறிக்காமல் சுவைத்தது.

நிலவின் சுமையில்
மலர்களில் இதழ்கள்
உதிரவில்லை.
மணங்களை மலர்கள்
இழக்கவில்லை.

நிலவு சுட்டப்
பழங்கள் நிறம்
மாறவில்லை.
கோடி கோடி
மைல்களென
அன்றாடம் அலையும்
நிலாவிற்கு அணுவளவும்
களைப்பில்லை.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationஅந்த இருவர்..கதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்