நிழல்

 

 

எஸ்.எம்.ஏ.ராம்

 

 

1.

என் நிழலில் என் சாயல் இல்லை,

யாருடைய நிழலிலும் அவர்களின் சாயல் இல்லை.

என் நிழலில் என் நிறம் இல்லை,

யாருடைய நிழலிலும் அவர்களின் நிறம் இல்லை.

எல்லாம் சாயல் அற்று, அல்லது ஒரே சாயலாய்-

எல்லாம் நிறம் அற்று, அல்லது ஒரே நிறமாய்-

எதையோ உணர்த்தும் நிழல்…

 

2.

நானும் அவளும்

விலகி நிற்கிற நிலையிலும்

எங்கள் நிழல்கள் கூடிச் சல்லாபிக்கின்றன.

நிழல்களுக்குக்

கற்பில்லை.

 

3.

நாளெல்லாம் விசுவாசமாய்த்

தொடர்ந்து வந்த நிழல்

உச்சி வேளையில்

உடம்போடு ஒன்றானது.

உச்சந்தலை கொதிக்கிறபோது

உடம்போடு புணர்ந்தது நிழல்.

உணர்வுகள் உச்சப்படுகிறபோது

எனக்கும் என் காதலிக்கும்

தனித்தனி ரூபங்கள் இல்லை.

 

 

 

….2

4.

வீதியோரத்து

விளக்குக் கம்பத்து நிழல்

எதிர்ச் சுவரில் மோதி

வளைந்து போய்க்

காரை பெயர்ந்த

சுவர்ப் பள்ளங்களில்

விழுந்து விழுந்து

நசுங்கிச் சிதையும்

அது கண்டு உச்சியில் கம்பம்,

உருண்டை முகம் சிவந்து

சோகமாய் அழும்

அந்தி வரும் போதெல்லாம்

தினமும் தெருவில்

இதுவே நடக்கும்.

 

*********

 

Series Navigationமாமன் மச்சான் விளையாட்டுவால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)