நீக்கமற….

கவிதை

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

வீடுவந்து சேர்ந்த பிறகும்
நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை
தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள
அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க
கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க
உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள்
முதுகுமாக மாறிக்கொள்ள
வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக
அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம்
அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம்
திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள்
புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான வேறுபாடு
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை
யெனச் சொல்லுமாறு ஊரு பேரு காரு தேரு
நீறு சேறு பேறு வேறு கூறு பாரு
போகுமாறு
பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு என்றழைக்கும் மனம்
கூவியவாறிருக்க
கேட்டுக் காலெட்டிப் போட்டபடி போய்க்கொண்டிருக்கும்

என் மெய் உயரத்தைச்
சிறிதே கூட்டிக்காண்பிக்க விரும்பி அணிந்துகொண்டிருக்கும் காலணிகளில் ஒன்று

என்னை வீதியோரம் உருட்டப் பார்ப்பதை
ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த அணிலின்

குட்டிவால் சற்றே விலகிக் காட்டியதில்

பதறும் மனம்
நிதானமாய் நிறுத்தி அழுத்திக் கேட்கும்
வழக்கம்போல்
நான் எங்கே இருக்கிறேன்……


Series Navigationமொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்திவெளிச்சம்