3. விரவுப் பத்து

This entry is part 8 of 8 in the series 29 செப்டம்பர் 2019

                    

இப்பகுதியில்முல்லைத் திணைக்குரிய பல ஒழுக்கங்கள் விரவி வருவதால் இப்பெயர் பெற்றது. பிரிந்து வாடலும், அப்படி வாடுபவரைத் தேற்றலும், அவன் மீண்டு வரும்போது கொள்ளும் உணர்வுகளும் அதுபற்றிய   பிறரின் பேச்சுகளும் இப்பகுதிப் பாடல்களில் அமைந்துள்ளன.

=====================================================================================

1.மாலை வெண்காழ் காவலர் வீச

நறும்பூம் புறவின் ஒடுங்கு முயல்இரியும்

புன்புல நாடன் மடமகள்

நலங்கிளர் பணைத்தோள் விலங்கின, செலவே.

      [வெண்காழ்=வயிரம் பாய்ந்த மரம்; நறும்பூம் புறவு=மணம் மிக்க பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதி; விலங்கின=தடுத்தன; இரியும்=அஞ்சி ஓடும்; மடமகள்=இளமையானவள்; பணைத்தோள்=பருத்த தோள்]

      அவன் முன்னாடியெல்லாம் அப்பப்ப போயிட்டுப் பிரிஞ்சி இருந்திட்டு வருவான். ஆனா இப்ப இங்கியே நிரந்தரமா தங்கியிருக்கறான். அதைப் பாத்த மத்தவங்க சொல்ற பாட்டு இது.

      ”காட்டைக் காவல் காக்கறவங்க கையில வச்சிருக்கற வயிரம் பாஞ்ச வெள்ளையான சின்ன தடியை வீசுவாங்க. அந்தச் சத்தம் கேட்டு வாசனையான பூவெல்லாம் இருக்கற காட்ல பொதர்லேந்து முயல்லாம் பயந்துக்கிட்டு ஓடும். அப்படிப்பட்ட முல்லை நெலத் தலைவனோட பொண்ணு இவ. அவளோட அழகான பருத்த தோள்கள்தான் அவன வெளிய எங்கயும் போகாம தடுத்து நிறுத்திடுச்சு”

——————————————————————————————————————————————————2.கடும்பரிப் புரவிக் கால்வல் புரவி,

நெடுங்கொடி முல்லையொடு தளவமலர் உதிர,

விரையு கடைஇநாம் சொல்லின்,

நிரைவளை முன்கை வருந்தலோ இலளே.

      [பரி=விரைவு; கால்வல் புரவி= வலிமையான கால்களுடைய குதிரை; தளவ=செம்முல்லை; கடைஇ=செலுத்த்ஜி; நிரல்வளை=ஒழுங்காகத் தொடுத்த வளை; வருந்தலோ இலள்=வருத்தம் இல்லாமல் ஆவள்]

      போன வேலை முடிஞ்சதும் அவன் வேகமா வரான். அப்ப இன்னும் தேர் வேகமா போனா சீக்கிரம் போகலாம்னு தேரை ஓட்டற தேர்ப்பாகன் கிட்ட சொல்ற பாட்டு இது.

      ”தேரை ஓட்டற பாகனே! வலிமையான கால்கள் இருக்கற குதிரை பூட்டின  நம்ம தேரு போகும்போது முல்லையும் செம்முல்லையும் உதிரும்படிக்கு இன்னும்  வேகமா போனாத்தான் ஒழுங்கா வரிசையா வளையல்லாம் போட்டிருக்கற அவ வருத்தம் இல்லாதவளா ஆவா.

===============================================================================

3. மாமழை இடியூஉத் தளிசொரிந் தன்றே

வாள்நுதல் பசப்பச் செலவுஅயர்ந் தனையே;

யாமே நின்துறந்து அமையலம்;

ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே.

 [இடியூஉ=இடித்து; மாமழை=பெரிய மேகங்கள்; தளி=நீர்த்துளி; அயர்தல்=விரும்புதல்; செலவு=செல்லுதல்; அமையலம்=இயலாது]

      அவன் எல்லாரும் திரும்பி வர்ற இந்தக் கார்காலத்துலப் பிரிஞ்சு போகவேண்டியவனா இருக்கறான். அவன் போகப் போறத அவகிட்டச் சொல்லி

கொஞ்ச நாள் பொறுத்துக்கன்னு சொல்றான். அப்ப தோழி நீ இப்ப போகாதன்னு சொல்ற பாட்டு இது.

      ”பெருசா கருப்பா மேகமெல்லாம் கூடி மழையெல்லாம் பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. இப்ப அழகா நெத்தி இருக்கற இவளுக்குப் பசலை வர்ற மாதிரி நீ  பிரிஞ்சு போறேன்னு சொல்ற. அழகா பூப்போல மை பூசி இருக்கற இவ கண்ணெல்லாம் தண்ணியால நெரம்பிச்சிடுச்சு. அதால நாங்க ஒன்னைப் பிரிஞ்சு இருக்கற நெலயில இல்ல; தெரிஞ்சுக்க.”

=====================================================================================4. புறவுஅணி நாடன் காதல் மடமகள்

ஒள்நுதல் பசப்ப நீசெலின், தெண்நீர்ப்

போதுஅவிழ் தாமரை அன்னநின்

காதல்அம் புதல்வன் அழும்,இனி முலைக்கே.

      [புறவு=முல்லை நிலம்; தெண்நீர்=தெளிந்த நீர்]

போன பாட்டு மாதிரிதான் இதுவும் தோழி சொல்றது.

      ”அழகா இருக்கற முல்லை நெல நாட்டுத் தலைவனோட பொண்ணு இவ. ஒனக்கும் பொருத்தமான காதல் பொண்டாட்டி. இவளொட அழகான நெத்தி பசலை வர மாதிரி நீ பிரிஞ்சு போனா என்னா ஆகும் தெரியுமா? தெளிவான தண்ணியில பூத்திருக்கற தாமரை போல இருக்கற ஒன் அன்புப் புள்ள அவனோட அம்மா மொலையில பால் குடிக்க அழுதிடுவான் பாரு.

=====================================================================================

5. புன்புறப் பேடை சேவல் இன்புற

மன்னர் இயவரின் இரங்கும் கானம்

வல்லை நெடுந்தேர் கடவின்,

அல்ல்ல் அருநோய் ஒழித்தல் எமக்கு எளிதே

      [புன்புறம்=பொலிவற்ற புறச்சிறகு; இயவர்=வாத்தியக் கார்ர்; இரங்கும்-இசை எழுப்பும்; கானம்=காடு; வல்லை=விரைவா; கடவின்=செலுத்தினால்; அல்லல்=துன்பம்; ஒழித்தல்=-நீக்குதல்]  

      போன வேலையை முடிச்ச அவன் வேகமாத் திரும்பி வரான். அப்ப அழகான காட்சியெல்லாம் பாக்கறான். ஒடனெ அவ நெனப்பு வருது. அதால தான் போற தேரைச் சீக்கிரம் வேகமா ஓட்டுன்னு தேர்ப்பாகன்கிட்ட சொல்ற பாட்டு இது.

      ”அழகில்லாத சிறகு வச்சிருக்கற பொட்டை மயிலு ஆண் மயிலோட சேர்றதுக்கு ஆசைப்பட்டு அரண்மனை வாத்தியக்காரருங்க மாதிரி ஒலி எழுப்பிக் கூப்பிடற காடு இது. இந்தக் காட்டுல வேகமாத் தேரை ஓட்டிப் போனா அங்க ஊட்ல இருக்கற அவகிட்ட சீக்கிரமாப் போயி அவளோட வருத்தத்தயும் தீத்து வைக்கறது சுலபமாயிருக்கும்.

====================================================================================

6. வென்வேல் வேந்தன் அருந்தொழில் துறந்து,இனி,

நன்னுதல்! யானே செலவொழிந் தனனே!

முரசுபாடு அதிர ஏவி,

அரசுபடக் கடக்கும் அருஞ்சமத் தானே.

      [வென்வேல்=வெற்றி உடைய வேல்; அருந்தொழில்=போர்த்தொழில்; செலவு=செல்லுதல்; பாடு=இடம்; அதிர=பேரொலி செய்ய; பட=களத்திலே வீழ்ந்து பட; ஒழிந்தனன்=நீங்கினான்; சமம்=போர்]

      அவன் அரசன் படையெடுக்கும் போதெல்லாம் அந்தப் படையோட சேந்து போயிடுவான். சண்டை முடிஞ்சு வருவான். இப்படியே செஞ்சுக்கிட்டு இருந்தவன் அரசன் சண்டைக்கு எதுவும் போகாததால ஊட்லயே அவ கூடவே இருக்கான். ஆனா அவன் பிரிஞ்சு போயிடுவானோன்னு அவ வருந்தறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

      ”அழகான நெத்தி இருக்கறவளே! பெரிய சத்தமா போர் மொரச ஒலிக்கச் செய்து தன் படையை எதிரிங்க மேல செலுத்தி அவங்களை எல்லாம் தோக்கடிக்கற போர்த்தொழில நான் உட்டுட்டேன். அதால நீ பயப்படவேண்டாம். கவலைப்பட வேண்டாம்.

=====================================================================================7. பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே

கார்எதிர் பொழுதுஎன விடல்ஒல் லாயே;

போருடை வேந்தன் ‘பாசறை

வாரான் அவன்’எனச் செலவுஅழுங் கினனே.

      [பேர்அமர் மலர்க்கண்= பெரிதும் அம்ர்ந்த மலர் போன்ற கண்; ஒல்லாய்=மனம் பொருந்தாய்; செலவு=பயணம்; அழுங்கினன்=தவிர்த்தனன்; அமர்=விருப்பம்; பாசறை=போரின் போது தங்கும் வீடு]

      நான் இனிமே ஒன்னைப் பிரிஞ்சு போருக்குப் போக மாட்டேன்னு அவன் சொன்னதை அவ ஒத்துக்கல. அதால அவன் அரசரு இப்ப போருக்குப் போறத நிறுத்தி வச்சிருக்காரு. அதால நானும் போக வேணாம்னு சொல்ற பாட்டு இது.

      ”பெரிசா பூத்திருக்கற கொவளைப் பூப்போலக் கண்ணு வச்சிருக்கறவளே! என்னைப் பிரிஞ்சு இருக்க முடியாத கார்காலம் இதுன்னு நீ என்னைப் பிரிய மாட்டேன்ற. எதிரியும் இந்தக் காலத்துல படை எடுத்துக்கிட்டு வரமாட்டான்னு எங்க அரசரும் போருக்குப் போக மாட்டான். அதால நானும் போக மாட்டேன்”

=====================================================================================

8. தேர்செலவு அழுங்க, திருவிற் கோலி

ஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றே;

வேந்துவிடு விழுத்தொழில் ஒழிய,

யான்தொடங் கினனால், நிற்புறம் தரவே.

      [திருவில்=இந்திரவில்; சோர்=மழைபொழிதல்; அழுங்க=தவிர்க்க; கோலி=வளைத்து; ஆர்கலி=ஒலியை உடைய; எழிலி=மேகம்; விழுத்தொழில்=தூது; விழுமிய தொழில்; புறந்தரல்=பாதுகாத்தல்]

      அவன் பிரிஞ்சிடுவானோன்னு அவ சந்தேகப்பட அவன் பிரிய மாட்டேன்னு சொல்ற பாட்டு இது

      ”இந்திரவில்லுன்னு சொல்ற வானவில்லைப் போட்டபடி இடிச்சு மேகமெல்லாம் மழை கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அதாலத் தேரெல்லாம் போக முடியாது. நம்ம அரசரும் என்னைத் தூதுக்கு அனுப்பல; நானும் ஒன்னைப் பாதுகாத்துட்டு இருப்பேன்.” 

====================================================================================

9. பல்இருங்கூந்தல்! பசப்பு நீவிடின்,

செல்வோம் தில்ல யாமே; செற்றார்

வெல்கொடி யரணம் முருக்கிய

கல்லா யானை வேந்துபகை வெலற்கே.

      [செற்றார்=பகைவர்; அரணம்=மதில் அரண்; முருக்கிய=அழித்த; கல்லா யானை=பயிற்சியில்லாத யானை; தில்ல=அசைச்சொல்]

      அவனோட அரசனுக்கு எதிரியால துன்பம் வருது; அதால அவன் பிரிஞ்சு போயிடுவான்னு அவ நெனக்கறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

      ”பல பின்னல் போட்டு இருக்கற கூந்தல் வச்சிருக்கறவளே! எதிரிங்களோட வெற்றிக் கொடியெல்லாம் இருக்கற மதிலுங்களை அழிக்கற யானைப் படையை வச்சிருக்கற நம்ம அரசரோட நானும் நீ ஒன் நெத்தியில வர்ற பசலையை விட்டாத்தான் போவேன்.”  

 =====================================================================================10. நெடும்பொறை மிசைய குறுங்கால் கொன்றை

அடர்பொன் அன்னச் சுடரிதழ் பகரும்

கான்கெழு நாடன் மகளே!

அழுதல் ஆன்றிசின், அழுங்குவல் செலவே.

      [பொறை=சிறுகுன்று; மிசைய=மேலே; குறுங்காற் கொன்றை=குட்டையான அடிமரம் கொண்ட கொன்றை; அடர்பொன்=பொற்றகடு;  அழுங்குவல்=தவிர்ப்பேன்; ஆன்றிசின்=அமைதியாக]

      அவன் பிரிஞ்சு போயிடுவான்னு அவ அழறா. அப்ப அவன் சொல்ற பாட்டு இது.

”ஒயரமான குட்டையான அடிமரம் இருக்கற கொன்றை மரம் பொன்தகடு போலப் பூக்களைக் கொட்டற காட்டை வச்சிருக்கறவரோட மகளே! நீ அழாம இரு.நான் போக மாட்டேன்”

===========================================

valavaduraiyan@gmail.com

Series Navigation`பட்டுக்கோட்டையாரின் புகழ்பரப்பும்` 60 ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *