நீங்காத நினைவுகள் – 18

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது.  முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’

    ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன்.

‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே வருத்தமும் ஏமாற்றமும். முதல் பேரக் குழந்தை என்பதோடு அது ஆண் குழந்தையாகவும் இருந்து இறந்துபோனதில் அதிக வருத்தம் அவருக்கு!’ என்று அவர் தொடர்ந்ததும் என்னை யாரோ அடித்துவிட்டார்ப்போன்று இருந்தது. என்னுள் வேதனை பெருகியது. ‘பிறந்து செத்துப் போனது பெண் குழந்தையாக இருந்தால் பரவாயில்லையா! அதை மட்டும் ஒரு தாய் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் சுமப்பதில்லையா? ஓரிரு மாதங்களுக்குள் பெற்று விடுகிறாளாமா? ஆண் குழந்தையை மட்டும்தான் வலிக்க, வலிக்கப் பெறுகிறாளாமா? பெண்குழந்தை தாய்க்கு எந்த வலியும் இன்றிப் பிறந்துவிடுகிறதாமா!  ஆண் குழந்தையைப் பெறும் போது மட்டுமே ஒரு தாய் இரத்தம் இழக்கிறாளாமா! இதென்ன பேச்சு’ – இத்தனை கேள்விகளும் கணப் பொழுதுக்குள் என் மனத்தில் எழுந்தன.

ஆனால் அவரைப் புண்படுத்த மனமின்றி மவுனமாக இருந்தேன்.  ஓரவஞ்சனைத்தனமான இந்தப் பேச்சு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி யொன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது.

என் தங்கையின் பேறுகால உதவிக்காக நான் விடுப்பில் இருந்த சமயம். குழந்தை பிறந்ததும், அலுவலகத்துக்குச் சென்று என் பிரிவைச் சேர்ந்த நண்பர்களுக்கெல்லாம் சாக்கலேட் விநியோகம் செய்தேன். மகிழ்ச்சி தெரிவிதத பின், எல்லாரும் ஆளுக்கு ஒரு சாக்கலேட் எடுத்துக்கொண்டார்கள்.

ஒரு நண்பர் மட்டும், ‘பிறந்தது ஆண் குழந்தைதானே?” என்று வினவினார்.

’ஆமாம். அதுதான் முதலிலேயே சொன்னேனே’ என்று சொன்னதும், ‘அப்படியானால் நான் இரண்டு சாக்கலேட் எடுத்துக்கொள்ளுவேன்!’ என்றார்.

‘எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஏன் என்று சொல்லுவீர்களா?’

‘ஆண் குழந்தை ஒசத்தியாச்சே! அதனால்தான்,’ என்றவாறு அவர் இரண்டு சாக்கலேட்டுகளை எடுத்துக்கொண்டார்.  நான் சிரித்துவிட்டுப் பேசாதிருந்தேன்.

அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருந்த புதிது. சில மாதங்கள் கழித்து அவருக்குக் குழந்தை பிறந்தது. அவரும் எங்கள் பிரிவில் இருந்தவர்களுக்குச் சாக்கலேட் விநியோகம் செய்தார்.

‘என்ன குழந்தை?’ என்று கேட்டேன்.

‘அதுதான் சொன்னேனே! பெண் குழந்தை!’

‘அப்படியானால் நான் இரண்டு சாக்கலேட்டுகள் எடுத்துக் கொள்ளுவேன். என் தங்கைக்குக் குழந்தை பிறந்த போது ‘ஆண்குழந்தை ஒசத்தி’ என்று சொல்லி இரண்டு சாக்கலேட் எடுத்துக்கொண்டீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஆண் குழந்தை ஒசத்தி. அது உங்கள் அபிப்பிராயம். பெண் குழந்தை ஒசத்தி என்பது என்னுடைய அபிப்பிராயம்!’ என்று நான் சொன்னதும் அவருக்கு முகம் விழுந்து போயிற்று.

கடவுளின் படைப்பில் உயர்வு-தாழ்வு கற்பித்தல்  ஆகுமா? ஆகுமெனில், பெண்ணையன்றோ ‘ஒசத்தி’ என்று சொல்லவேண்டும்? பெற்றோர் மீது அன்பு செலுத்துதல், குழந்தைகளைப் பேணுதல், கணவனிடம் விசுவாசமாக இருத்தல் போன்றவற்றில் பெண்களே யன்றோ இன்றளவும் ஆண்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்து வந்துள்ளார்கள்! இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மனம் சம்பந்தப்பட்ட இது போன்ற விஷயங்களில் மட்டுமல்லாது, அதிகவலிமை படைத்தவர்கள் (the stronger sex) என்று தங்களைப் பற்றிப் பெருமை பேசுகிற ஆண்களை விடவும்  பெண்களே உண்மையில் வலிமை மிக்கவர்கள் என்பது மருத்துவக் கூற்று.

பல ஆண்டுகளுக்கு முன்னால், இரண்டு ஆண் மருத்துவர்களால் எழுதப்பெற்ற Women are stronger than men (ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக வலிமைகொண்டவர்கள்) எனும் கட்டுரையை ரீடர்ஸ் டைஜெஸ்டில் படிக்க வாய்த்தது.  நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த அக்கட்டுரையின் நறுக்குத் தொலைந்து போய்விட்டது. அதனால் அது வெளிவந்த தேதியைச் சொல்லமுடியவில்லை.  மனவலிமை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகிய இரண்டிலும் பெண்ணே ஆணைவிடவும் மேலானவள் என்கிறார்கள். ஆனால்,  முரட்டுத்தசை வலிமையில் (brutal muscular strength எனும் சொற்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.) ஆணே பெண்ணைக்காட்டிலும் அதிகத் திறன் படைத்தவன் என்றும் கூறியிருந்தார்கள்.  இந்த ஒன்றால்தான் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தினான் என்கிறார்கள்.

‘இந்தியாவே! விழித்தெழு!’ (Wake up, India!) எனும் புத்தகத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்ன என் அப்பா (திரு சுப்பிரமணியம்) சொன்னார் – பெண்ணே ஆணைக்காட்டிலும் அறிவிலும், கல்விகற்கும் திறனிலும் அதிகம் சிறந்தவள் என்று. அவர் படிக்கக் கொடுத்த அந்நூலை எழுதியவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு கணிசமாய்ப் பங்காற்றிய ஐரிஷ் பெண்மணியான அன்னீ பெசன்ட் அம்மையார் ஆவார். என் அப்பா சுட்டிக்காட்டிப் படிக்கச்சொன்ன பகுதியில் அன்னீ பெசன்ட், “பெண் கல்வி என்பது இந்தியாவுக்குப் புதிது அன்று.  வேதவாகினிகள் என்று அழைக்கப்பெற்ற, வேதகாலத்துப் பெண்மணிகளான, மைத்ரேயி, கார்க்கி போன்றவர்கள் தர்க்க சாஸ்திரத்தில் ஆண் முனிவர்களைத் தோற்கடித்ததன் விளைவாகவே, பெண்கள் இனிக் கல்வியறிவு பெறக்கூடாது என்பதாய் அவர்கள் சட்ட்மியற்றினார்கள்’ என்று கூறியுள்ளார். (கருத்து இதுதான். புத்தகம் கிடைக்கவில்லை யாதலால், சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்க முடியவில்லை.)

இந்தியாவைப் பொறுத்த வரையில், அண்மைக்காலப் பள்ளி / கல்லூரித் தேர்வு முடிவுகளும் இதனை மெய்ப்பித்து வருகின்றன. நரம்பியல் வல்லுநரான காலஞ்சென்ற டாக்டர் பி. ராமமூர்த்தி அவர்கள் இக்கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர் கூறுகிறார்: ‘பெண்ணின் மூளையின் எடை ஆணின் மூளையின் எடையைக் காட்டிலும் சில கிராம்கள் குறைவுதான்.  ஆனால் இதை மட்டும் வைத்துப் பெண்ணின் மூளையின் திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது’

பரம்பரை, பரம்பரையாக ஒன்றைச் செய்யும்போது, அதைச் செய்கிறவர்களின் வழித்தோன்றல்கள் அந்தச் செயலில் (அல்லது தொழிலில்) தங்கள் மூதாதையரை விடவும் மேலும் அதிகத் திறமை கொண்டவரகளாகப் பிறப்பிலேயே திகழ்வார்கள் என்று கூறுகிறது விஞ்ஞானம். ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை இது என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு பரம்பரைத் தன்மை இல்லாத நிலையிலும் கூட – அதாவது மிகச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கல்வி கற்கத்தொடங்கியுள்ள நிலையிலும் – பரம்பரை பரம்பரையாய்க் கல்விகற்று வந்துள்ள ஆண்களைப் பெண்கள் விஞ்சுகிறார்கள் எனும் போது, அவர்களது அறிவுக்கூர்மை அயர வைக்கிற தல்லவா? ஆனால் நடப்பதென்ன? ஆணே உயர்ந்தவன் என்கிற மமதை ஆண்களில் பெரும்பாலோரின் மனங்களை விட்டுப் போகவே இல்லை. அதன் விளைவுதான் ஆண் குழந்தை பிறந்தால் குதூகலிப்பதும். பெண் குழந்தை பிறந்தால் அங்கலாய்ப்பதும். இந்த மனப்பான்மை சிறுகச் சிறுகக் குறைந்துதான் வருகிறது. இது காலப்போக்கில் அறவே மறைந்து விடும் என்று நம்புவோமாக.

சென்னை அரசு மகப்பேறு விடுதிகளில் கூட, ஆண்குழந்தை பிறந்தால், அதன் பெற்றோர்கள் எவ்வளவு ஏழைகளானாலும் அவர்களிடமிருந்து ரூ.500 கறந்துவிடுகிறர்களாம் மருத்துவ விடுதி ஊழியர்கள்.  பெண் குழந்தையானால் ரூ.300 கொடுத்தால் போதுமாம்!

ஒரு நாள், எங்கள் அலுவலகத்தில், நான் சற்றே ஓய்வாக இருந்த போது, நடுத்தர வயதைக் கடந்த ஒரு தலைமை எழுத்தர் எனது அறைக்கு வந்து என்னெதிரில் சட்டமாக அமர்ந்து கொண்டார். தொண்டையைச் செருமிய பின், “உங்கள் ஆஃபீசர் டூர் போயிருக்கிறார் என்பதால் நீங்கள் அவ்வளவு பிஸியாக இருக்க மாட்டீர்கள் என்று நினைத்து வந்தேன். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும். ஒன்றும் தொந்தர வில்லையே?” என்று பீடிகை போட்டார்.

அவர் ஓர் அறுவைத் திலகம் என்பது தெரியும், எனக்கும் உடனே முடிக்க வேண்டிய அவசர வேலை இல்லாவிட்டாலும், நான் ஒன்றும் வேலையே இல்லாமல் முழு ஓய்வுடன் இல்லை.

‘அவசர வேலை இல்லைதான். ஆனால் என் ஆபீசர் வேலைகள் கொடுத்துவிட்டுத்தான் டூர் போயிருக்கிறார், இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்கள்.’

‘பெண்ணுரிமை பற்றியெல்லாம் நிறையவே எழுதுகிறீர்கள்.  பெண்களின் துயரங்கள் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்லுவது எல்லாமே சரி என்று சொல்ல முடியவில்லை. கோபித்துக்கொள்ளக் கூடாது.’

‘பரவாயில்லை. சொல்லுங்கள்.’

‘பல பெண்கள் இன்று அரசு அலுவலகங்களிலும், தனியாரின் கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிறார்கள்.  இதன் விளைவாக இங்கெல்லாம் டிசிப்ளின் கெட்டுப் போகிறது….’

‘எப்படி?’

‘வேலையில் முனைப்பாக ஆழ முடியாமல் ஆண்கள் டிஸ்டர்ப் ஆகிறார்கள். அவர்களின் கவனம் சிதறுகிறது. நம் ஆஃபீசிலேயே எத்தனை லவ் மேரேஜஸ் நடந்திருக்கின்றன, தெரியுமா?’

    ’அதில் நமக்கென்ன ஆட்சேபணை? அது அவர்களின் சொந்த விஷயம்!’

    ’ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ் வேலைகளை யெல்லாம் பெண்டிங்கில் வைத்துவிட்டு, இவர்கள் லவ் லெட்டர்ஸ் அல்லவா எழுதி ஆஃபீஸ் ஃபைல்களில் வைத்து எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கொள்ளுகிறார்கள்!”

    ’நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’

 

    பொங்கிவந்த சிரிப்பை யடக்கிக்கொண்டு சொன்னேன்: “நீங்கள் சொல்லுவது ரொம்பவே சரி.  ஆண்களும் பெண்கலும் இணைந்து வேலை செய்யும்போது, டிசிப்ளின் கெட்டுத்தான் போகிறது. இதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. இனிமேல் ஒவ்வோர் ஆண் ஊழியரும் ரிடைர் ஆனதும் அவரது இடத்தில் ஒரு பெண்ணையே வேலைக்கு எடுப்பது என்று ரூல் கொண்டுவரலாம். இதன் விளைவாக அனைத்து ஆண்களும் ரிடைர் ஆனதும் அவர்களின் இடங்களில் பெண்கள் வேலைக்கு வந்து விடுவார்கள். பெண்கள் ரிடைர் ஆக்னதும் அவர்களின் இடங்களிலும் பெண்களையே ரெக்ரூட் பண்ணலாம். காலப்போக்கில், ஆண் ஊழியர்களே இருக்க மாட்டார்கள். எல்லாருமே பெண்கள் என்று ஆகிவிடும்போது, ஆண்களின் கவனம் சிதறுவது, ஒழுங்கும் கட்டுப்பாடும் குலைந்து இண்டிசிப்ளீன் ஏற்படுவது இதெல்லாம் போய்விடும்.  நல்ல ஐடியா தானே இது?’ – இப்படி நான் சொன்னதும், அந்தத் தலைமை எழுத்தர் – என்னை உதைக்க முடியாமல் – தாம் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்புறமாக உதைத்துக்கொண்டு எழுந்து என்னை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

    அவர் தலை மறைந்ததும்,    எனது அறையில் நான் ஒற்றை ஆளாய் இருந்ததையும் மறந்து வய்விட்டுப் பெரிதாய்ச் சிரித்துவிட்டேன்.

………

………

Series Navigationதமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்புதிண்ணையின் இலக்கியத் தடம் -3