நீங்காத நினைவுகள் – 3

Spread the love

முக்கியத்துவம் இல்லாதவையானாலும், சில நினைவுகள் நம் மனங்களை விட்டு நீங்குவதேயில்லை. சில நினைவுகளை மற்றவர்களுடன் உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ளும் போது நம்மைப் பற்றிய சிலவற்றைச் சொல்ல நேர்ந்து விடுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க முடிவதில்லை. சில நேரங்களில் கொஞ்சம் தற்பெருமையாக நம்மைப் பற்றிப் பேசுவதிலோ எழுதுவதிலோ இந்தப் பகிர்தல் முடிந்துவிடுகிறது. இது பற்றிய கூச்சம் ஏற்பட்டாலும், இந்த நிலை தவிர்க்க முடியாத தாகிவிடுகிறது. இப்போது சொல்லப் போகும் விஷயமும் அப்படிப்பட்டதுதான் என்பதால் தான் இந்தப் புலம்பல் முன்னுரை! (இனி எழுதப் போகும் சில கட்டுரைகளிலோ – அல்லது பல கட்டுரைகளிலோ – இந்நிலை ஏற்படவே செய்யும் என்பதால், இதை அவை எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு பொதுவான முன்னுரையாக எடுத்துக் கொள்ளவும்.)
அமரர் சாவி அவர்கள் மிகுந்த நகைச் சுவை உணர்வு உள்ளவர் என்பது அவரை அறிந்தவர்களுக்கும், அவரை அறிந்தவர்களை அறிந்தவர்களுக்கும் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
‘டெபொனேர்’ – Debonair – எனும் ஆங்கிலப் பத்திரிகை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது இப்போது வந்துகொண்டிருக்கிறதா நின்றுவிட்டதா என்று தெரியாது. அந்த இதழில் நடுப்பக்கம் மிகவும் ‘புகழ்’ வாய்ந்தது. ஆண்-பெண்ணுடைய (அல்லது பெண்ணுடையது மட்டும்) முக்காலுக்கும் மேற்பட்ட நிர்வாணப் படம் அந்தப் பக்கத்தில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இதனால் நேரில் சென்று இதை வெளிப்படையாகக் கடைகளிலிருந்து வாங்குவதற்கு யாருமே (அந்தக் காலத்தில்) தயங்குவார்கள். ஒருமுறை சாவி அவர்கள் எழுதிவந்த கேள்வி-பதில் பகுதிக்குக் குறும்புக்காரர் ஒருவர், ‘டெபொனேர் படிப்பீர்களா? அப்படியானால், முதலில் அதில் எந்தப் பக்கம் பார்ப்பீர்கள்?’ என்று கேட்டிருந்தார். ‘முதலில் “அக்கம் பக்கம்” பார்ப்பேன்!’ என்று சாவி அவர்கள் அவரைவிடவும் அதிகக் குறும்புடன் பதில் சொல்லியிருந்தார். இதைப் படித்தவர்கள் மறந்திருக்கவே மாட்டார்கள்.
இது போன்று சமயோசிதமான நகைச்சுவை சிலருக்குத்தான் கைவரும். இப்படிப்பட்ட நகைச்சுவை யாளரை, நானே ஒரு முறை சிரிக்க வைத்துவிட்டேன் என்பதில் எனக்குச் சிறிது பெருமைதான். ஒரு முறை சாவி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நான் வந்ததை அவர் கவனித்திருந்திருப்பாரா என்னும் ஐயம் எனக்கு இருந்தது. கூட்டம் நீண்ட நேரம் நடக்கும் போல் இருந்தது. ஏழரை மணிக்கு மேல் தங்க முடியாத நிலை. யாரேனும் ஒருவர் ஒலிபெருக்கியின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருக்கையில் எழுந்து வெளியேறுவது நாகரிகமில்லை என்றெண்ணியதால் அடுத்த பேச்சாளர் மேடைக்கு வரும் முன் கிளம்பிவிட எண்ணி எழுந்த போது ஒரு நண்பர் குறுக்கிட்டு என்னுடன் பேசத் தொடங்கியதால் அதைச் செய்ய முடியாது போனது.
மறு நாள் சாவி அவர்களிடம் நான் கூட்டத்துக்கு வந்திருந்தது பற்றியும் ஆனால் என் வீடு வெகு தொலைவில் இருந்தால் பாதியில் கிளம்பிவிட்டதையும் அவரிடம் கூறினேன். “நான் கிளம்பினப்ப,‘அடுத்து பகீரதன் பேசுவார்’ னு அறிவிப்பாளர் சொன்னதுமே எனக்குப் ‘பகீர்’னுது. ஏன்னா அவர் நிறைய நேரம் பேசுவார்னு கேள்வி’ என்று நான் தொடங்கியதுமே சாவி குபீர் என்று சத்தம்போட்டுச் சிரித்தார். பொதுவாக அவர் அப்படிச் சிரிப்பது அரிது என்றும் புன்னகையே பெரும்பாலும் அவரது எதிரொலியாக இருக்குமென்றும் மறு நாள் ஒருவர் எனக்குச் சொன்ன போது எனக்குப் பெருமையாகத்தான் இருந்தது.

இதற்கும் முன்னால் ஒரு முறை அவரைச் சிரிக்க வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பெரியவர்க்கான எனது முதல் கதை ஆனந்த விகடனில்தான் வெளிவந்தது. ஆனால், ‘ஆனந்த விகடன் பெரிய பத்திரிகை. அதில் எல்லாம் நம் கதையைப் போட மாட்டார்கள்’ என்றெண்ணிய நான் “அரியும் சிவனும் ஒண்ணு” எனும் தலைப்பிட்ட அதை முதலில் சாவி ஆசிரியராக இருந்த தினம்ணி கதிருக்குத்தான் அனுப்பி யிருந்தேன். ஆனால் பத்தே நாள்களுள் அது எனக்குத் திரும்பிவிட்டது. என்னுள் பெரும் ஏமாற்றமும் விரக்தியும் ஏற்பட்டன. அதை மீண்டும் சாவி அவர்களுக்கு அனுப்பினேன். அது நிராகரிக்கக்கூடிய கதையன்று என்றும், எனவே கவனமாய் மறுபரிசீலனை செய்யுமாறும் வேண்டி அத்துடன் ஒரு கடிதமும் வைத்திருந்தேன். ‘அதிகப் பிரசங்கி’ என்று நினைத்தாரோ என்னவோ, மறு அஞ்சலில் அதைத் திருப்பி யனுப்பிவிட்டார். அதன் பின் சற்றே அவநம்பிக்கையுடன் நான் ஆனந்த விகடனுக்கு அனுப்பிய அது சில நாளில் அதில் வெளியாகிவிட்டது. இதைச் சாவி அவர்கள் கவனித்திருந்திருக்க வேண்டும். தவிர, அந்தக் கால கட்டத்தில் (1968) அது பெரிதும் பேசப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டதால், அதைத் தாமே படித்துப் பாராது உதவி ஆசிரியரின் கருத்தின்படி அதைத் திருப்பியது அவரை உறுத்தியிருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ, தினமணி கதிருக்குக் கதை கேட்டுச் சாவி அவர்களே கையெழுத்திட்டிருந்த கடிதம் எனக்குச் சில நாளில் வந்தது. நானும் அனுப்பிவைத்தேன்.
அதன் பின் சில நாளில் தினமணி கதிரின் நாவல் போட்டியில் கலந்துகொண்டு நான் அனுப்பிய ‘துருவங்கள் சந்தித்த போது…’ எனும் நாவல் மூன்றாம் பரிசைப் பெற்றது. இதன் பின் சில நாள் கழித்து, அபர்ணா நாயுடு எனும் புனைபெயரில் எழுதிவந்த தினமணி கதிரின் உதவி ஆசிரியர் கண்ணன் ஒரு கதை விஷயமாய் என்னோடு தொலை பேசும்போது, ‘உங்கள் அலுவலகம் எங்கள் அலுவலகத்திலிருந்து பத்தே நிமிட நடைத் தொலைவில் இருக்கும் போது, நீங்கள் சாவியைச் சந்திக்காமல் இருக்கிறீர்களே! பரிசு கிடைத்த பிறகாவது வந்து பார்க்க வேண்டாமா?’ என்றார். இதெல்லாம் எனக்குத் தெரியாத – அல்லது தோன்றாத – விஷயம். எனினும் மறு நாள் பிற்பகலில் வரலாமா என்று கேட்டேன். ‘ அவர் கண்ணில் அறுவைச் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் உள்ளார். பிறகு ஒரு நாள் வாருங்கள். நானே அவரைக் கேட்டுச் சொல்லுகிறேன்,’ என்றார்.
அதன் பின் ஒரு நாள் அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். தினமணி கதிருக்கு மட்டுமே எழுதச் சம்மதித்தால் தொடர்ந்து என் கதைகளைப் போடுவதாய்ச் சொன்னார். முடியாது என்று சொல்ல முடியாமல் சம்மதித்தேன். ஆனால், நான் ஐந்தாறு கதைகளை அனுப்பினால் அவற்றில் ஒன்று மட்டுமே ஏற்கப்பட்டது. நிராகரிக்கப்பட்டவற்றை வேறு எந்த இதழுக்கும் அனுப்ப முடியாத நிலையில் அந்த ஏற்பாடு எனக்குச் சரியாகத் தோன்றாததால், நான் அது இயலாததன் காரணத்தைச் சொல்லி அந்த வாய்மொழி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டேன். சாவி அவர்கள், ‘எது எப்படி இருந்தாலும், நீங்கள் சிறந்த எழுத்தாளர். நான் உங்களுக்குப் பெரிதாய் ஏதேனும் கூடிய விரைவில் செய்வேன்’ என்றார்.
அதன் பிறகு, முதல் பரிசுக் கதை, இரண்டாம் பரிசுக்கதை ஆகியவை தினமணி கதிரில் வரிசையாக வெளி வந்தன. பின்னர் மூன்றாம் பரிசு பெற்ற என் கதை வெளியாயிற்று. கதையின் ஓர் அத்தியாயம் வெளியான போது, கதையின் பெயர் மிகச் சிறிய எழுத்துகளிலும், எனது பெயர் மிகப் பெரிய கொட்டை எழுத்துகளிலும் அச்சாகி யிருந்ததன. உடனே அவருக்குத் தொலை பேசினேன்: “எனக்கு ஏதோ பெரிதாய்ச் செய்யப் போவதாய் அன்று சொன்னீர்களே! அது இதுதானா?” என்று நான் கேட்டதும் சாவிக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
என் தொடர்கதை வெளிவந்து முடிந்ததும் வாசகர் ஒருவர், “நடுவர்கள் அனைவரும் வயதானவர்களாக இல்லாமல் இருந்திருந்தால், முதல் பரிசுக்கு உரிய கதை மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட பரிதாபத்திலிருந்து தப்பி யிருக்கும்” என்று எழுதியிருந்த விமரிசனக் கடிதத்தைப் பெருந்தன்மையுடன் வெளியிட்டிருந்தார். (மூன்று நடுவர்களில் அவரும் ஒருவர்.)
எங்கள் வீட்டில் பஜ்ஜி போடும் போதெல்லாம் நான் சாவி அவர்களை நினைத்துக் கொள்ளுகிறேன். ‘பஜ்ஜி போடும்போது காய் மீந்து போகக் கூடாது. அதே போல் பஜ்ஜி மாவும் மீந்து போகக்கூடாது. இரண்டுமே மீந்து போகாமல் பஜ்ஜி தயாரிக்கும் பெண்ணே கெட்டிக்காரி’ என்று அவர் சொல்லியுள்ளது நினைவுக்கு வரும். ( ‘நீ எப்படி?’ என்று கேட்டுவிடாதீர்கள்.)
அவரது நகைச் சுவைக்குக் கட்டியம் கூறும் நாவல் ‘வாஷிங்டனில் திருமணம்’ என்பது அனைவருக்கும் தெரியும். தெரியாதவர்கள் வாங்கிப் படித்து, மகிழ்ந்து சிரிக்கவும்.
jothigirija@live.com

Series Navigationஅவசரம்அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி