நீங்காத நினைவுகள் – 7

 

    “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள கூத்து நகைப்புக்கு மட்டுமல்லாது, அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

        ஆசாரமாக இருப்பதாக, அல்லது சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக, நினைத்துக்கொண்டு, கீழ்ச் சாதியினர் என்று தங்களால் முத்திரை குத்தப்பட்ட சக-மனிதர்களை எந்த அளவுக்குத் தாங்கள் புண்படுத்தியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்?  இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்குக் காரணம், சிலநாள் முன்பு ஒரு மேட்டுக்குடி நண்பர் பிராமணர்கள் அறியாமையால் செய்த பிழை அது என்று சொல்லி அவர்களுக்கு வக்காலத்து வாங்கிப் பேசியதுதான்.

           இதில் இன்னொரு வேதனையான வேடிக்கை என்ன வென்றால், இவர்களால் இவ்வாறு சிறுமைப் படுத்தப்பட்ட “கீழ்ச் சாதி”  மக்களுக்குத் தாங்கள் அவமானப்படுத்தப் படுகிறார்கள் என்பதே பல காலம் தெரியாமல் இருந்து வந்துள்ளதுதான்.  ஏனெனில் அந்தச் சிறுமையை உணர்ந்து, சினங்கொண்டு அவர்கள் சீறி எழுந்திருந்திருப்பின், அத்தகைய பாவத்தைச் செய்துவந்த மனிதத்தன்மை யற்ற அம்மனிதர்கள் வாழ்ந்த இடங்களில் புல் முளைத்துப் போயிருந்திருக்கும்.

 

        இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்ன வென்றால், இந்த உயர்ச் சாதி மனிதர்கள், ஆசாரத்தின் பெயரால், தங்கள் சாதியைச் சேர்ந்தவர்களையும் கூட அவமனப்படுத்தி வந்துள்ளதுதான்!

        எங்கள் உறவினர் – ஒரு பெண்மணி – கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் – இருந்தார். நம்பமுடியாத அளவுக்கு ஆசாரம் கடைப்பிடித்து வந்தவர். அவர் வீட்டுத் திண்ணையில் ஒரு “பிராமணர்” வந்து உட்கார்ந்து சென்றாலும், அவர் சென்ற பின் அவர் உட்கார்ந்திருந்த இடத்தைச் சாணித் தண்ணீர் தெளித்து மெழுகுவார்.  தெருவில் நடந்து வந்த போது, எதிர்ப்பட்டிருக்கக் கூடிய பிராமணர் அல்லாதார் மீது அவர் இடித்திருக்கக் கூடுமாம்! தம் ஜாதிக்காரர்களையே இந்தப் பாடு படுத்தியவர், “தீண்டத்தகாதவர்கள்” என்று முத்திரை குத்தப்பட்டவர்களை எந்தப் பாடு படுத்தியிருக்கக் கூடியவர் என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே அருவருப்பாக இருக்கிறதல்லவா!

 

        இத்தகையோரின் செயல் மனிதத் தன்மையற்றது என்று சுட்டிக்காட்டினால், “சுத்தம்” என்பதன் கீழ் அருவருக்கத்தக்க இப்பழக்க வழக்கங்களைழ்ச் சிலர் நியாயப்படுத்தி அவற்றுக்கு வக்காலத்து வாங்குவார்கள்.

 

        தம் வீட்டுத் திண்னையில் எவரேனும் அந்நியர் வந்தமர்ந்தால், அவர் சென்ற பின் அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சாணி போட்டுத் துப்புரவு செய்யும் இந்த ஆசாரக்காரப் பெண்மணிக்கு அவருடைய கடைசி நாள்களில் என்ன நேர்ந்தது, தெரியுமா? காலஞ்சென்ற அப் பெண்மணியைக் கேவலப் படுத்தும் பொருட்டு இக்கட்டுரை எழுதப்படவில்லை.  இந்த அளவுக்கு  “ஆசாரம்” பார்க்காவிடினும், அதன் பெயரால் இன்றளவும் ‘தனியான உண்ணுமிடம்’, ‘தனியான தம்ப்ளர்-டவரா’ , ‘மறைப்புத் தட்டி’ என்றெல்லாம் தலித்துகள் விஷயத்தில் உணவு விடுதிகளில் கடைப்பிடித்து வரும் ஓட்டல் முதலாளிகள், அதே போல் தம் வீடுகளிலும், குடியிருப்புகளிலும், தெருக்களிலும், இன்ன பிற இடங்களிலும் தீண்டாமையைக் கடைப்பிடித்துவரும் மனிதர்கள், கோவில்களுள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவதை எதிர்ப்பவர்கள் முதலானோர், தம் இறுதி நாள்களில் இந்த மூதாட்டிக்கு நிகழ்ந்த அவலத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டுவதற்காகவே இது நினைவுகூரப்படுகிறது.

 

        இறுதி நாள்களின் போது இவருக்குக் கண்பார்வை போய்விட்டது. (தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கண்பார்வை போய்விடும் என்று நீதி வழங்குவதாய் யாரும் நினைத்துவிட வேண்டாம். அப்படியாயின், இந்த நாட்டில் பலகோடி மக்கள் குருடர்களாக இருப்பார்கள்.) பார்வையை இழந்த பின் தம் ஆசாரங்களைக் கடைப்பிடிக்க இந்த மூதாட்டியால் முடியாமல் போயிற்று.  பிற பிராமணர்களின் வீடுகளில் கூட அவர் உணவு உண்ண மாட்டார்.  தாமே ஆற்றுக்குப் போய்ப் புதிதாய் ‘ஓடுகால்’ பறித்து அதனின்று “மடி” யாய்ப் புதிதாய் ஊறிய நீரைச் சுமந்து கொண்டுவந்து அதைத்தான் சமைக்கப் பயன்படுத்துவார். கண்பார்வை போனதன் பின் அது அவருக்கு இயலாது போனது.  எனவே சில ஆசார வழக்கங்களை அவர் கைவிடும்படி நேர்ந்தது.

 

எங்கள் வீட்டிலிருந்து அவருக்கு அவ்வப்போது பலகாரங்கள் போவதுண்டு.  ஓர் அமாவாசை நாளன்று அவரது இரவுப் பலகாரத்துக்காக  என் அம்மா ஒரு   சம்புடத்தில் எண்ணெய்-மிளகாய்ப்பொடி தடவிய சில இட்டிலிகளைப் போட்டு என் தங்கையிடம் கொடுத்து அனுப்பினார்.

 

        எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய வெற்றிடம் உண்டு. அதில் வீடுகள் இரா. பொட்டல் வெளி. அதைக் கொட்டாரம் என்று அழைப்பார்கள். அதைக் கடந்துதான் அந்த மூதாட்டியின் வீடு இருந்த தெருவுக்குச் செல்ல வேண்டும். இட்டிலிச் சம்புடத்துடன் என் தங்கை அந்தப் பகுதியைக் கடந்துகொண்டிருந்த போது, மாடு ஒன்று எதனாலோ மிரண்டு கொட்டாரத்துள் ஓடி வந்தது கண்டு பயந்து போய் அவள் ஓடத் தொடங்கியதில், கால் தடுமாறி விழ நேர்ந்துவிட்டதால், அந்தச் சம்புடமும் தரையில் விழுந்து  உருண்டது. அதன் மூடி திறந்து கொண்டுவிட்டதால், உள்ளே இருந்த இட்டிலிகள் தெரு மண்ணில் விழுந்தன. மாடும் வேறு திக்கில் ஓடி மறைந்தது. என் தங்கை அந்த இட்டிலிகளில் ஒட்டிக்கொண்டிருந்த மணலைத் தன் பாவாடையில் துடைத்தாள். எனினும் மணல் முழுவதுமாய் நீங்கவில்லை. பின் அவற்றை மீண்டும் சம்புடத்தில் போட்டு மூடி எடுத்துக்கொண்டு அந்த மூதாட்டியின் வீட்டை யடைந்து, பயந்துகொண்டே, அதை அவரிடம் கொடுத்தாள்.

 

        அவர் சாப்பிட்ட பின் சம்புடத்தைத் திரும்ப எடுத்துப் போவதற்காக என் தங்கை காத்திருந்தாள்.  இட்டிலிகளைத்   தொட்டுத் தடவியதுமே, “இட்டிலியில மண் ஒட்டிண்டிருக்கே? கீழே போட்டுட்டு எடுத்து         ண்டு வந்தியா?” என்று அவர் வினவினார்.

        என் தங்கை நடந்தவற்றை உள்ளபடி அவரிடம் தெரிவித்தாள் – தன் பாவாடையில் அவற்றைத் துடைத்தும் அவை முற்றாகப் போகாத்து உட்பட.

 

        அவளுக்கு அடிகிடி படவில்லையே என்று விசாரித்த பின், “அதனாலென்ன? பரவால்லே. கொடத்துலேர்ந்து தண்ணீர் எடுத்து இட்டிலிகளை அலம்பிக் குடு. நான் சாப்பிடறேன்!” என்றார் அந்த மூதாட்டி!

 

        என் தங்கை அவ்வாறே செய்த பின் அவற்றை உண்டு அவர் பசியாறினார்.

 

        வீடு திரும்பிய அவள் நடந்ததையெல்லாம் எங்களுக்குத் தெரிவித்தாள்.  கேட்டதும், என் அம்மாவின் கண்களில் நீர் மல்கியது. “எப்படிப்பட்ட ஆசாரக்காரர்! கடைசியில் இப்படி ஆயிற்றே!” என்று வருந்தினார்.

 

        அப்போது அருகில் இருந்த எங்கள் அப்பாவின் கண்களும் கலங்கிவிட்டன. எனினும்,  “திண்ணையில ஒரு பிராமணன் உட்கார்ந்துட்டுப் போனாலும் அந்த இடத்துல சாணி தெளிச்சிண்டிருந்த அவளோட ஆசாரம் இப்ப எங்கே போச்சு?” என்று சொல்ல அவர் தவறவில்லை.

 

jothigirija@live.com

Series Navigationபோதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 24தூக்கு