நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்

This entry is part 4 of 33 in the series 19 மே 2013

 

    சமீபத்தில் பெய்த கோடை மழையில் (பருவமழை என்பது இல்லாமல் போய் விட்டது. குறைந்த காற்றழுத்த மண்டலங்களாலேயே மழை என்றாகி விட்டது) கொங்கு மண்டலத்தின் நகரங்களில் மழை அளவு அதிகமாக இருந்தது. நகரங்களைச் சுற்றியுள்ள பல ஆயிரம் அடிகளுக்கு ஆழ்குழாய்கள் போட்ட விவசாயம் செய்து வரும் நகரங்களைச் சுற்றியுள்ள விவசாயப் பகுதிகளில் மழை அளவு குறைவாக இருந்தது.

    நிலத்தடி நீர் அதிகம் இருக்கும் பகுதிகளில் மழையின் அளவும் அதிகமாக இருக்கிறது. நகரப் பகுதிகளில் மழை அளவு அதிகமாக இருப்பதற்குக் காரணம் நகரங்களில் நிலத்தடி நீர் அளவு அதிகரித்திருப்பது என்றத் தகவல் ஆச்சர்யமளிக்கலாம். கொங்கு நகரங்களில் சமீப ஆண்டுகளின் அபரிமிதமான மக்கள் குடியிருப்பாலும், அதிக மக்கள் தொகையாலும்-வெளியேறும் கழிவு நீர் போன்றவை நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்திருக்கின்றன. சாயப்பட்டறைகளின் சாயக் கழிவுகளின் வெளியேற்றமும், சாய நீரும் நிலத்தடி நீரோடு கலந்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்துள்ளன.

    ஆனால் இவ்வகை நிலத்தடி நீர் எந்த வகை உபயோகத்திற்கும் லாயக்கற்றது. உப்புத்தன்மை அதிகமாக இருப்பது. நிலத்தடி நீர் அளவு அதிகம் என்பதால் நகரப் பகுதிகளில் சமீபமாய் மழை அளவும் சமீப ஆண்டுகளில் அதிகரித்திருக்கிறது. இது எந்த வகையிலும் பயனற்றதாகவே போய் விடுகிறது.

    நீர் இருந்தும் பலனில்லாமல் போகிற நீர் பாலைத் தன்மையால் இவ்வகை மழைப்பொழிவும் பயனற்றதாகவே அமைந்து விடுகிறது.

    பரவலாக சமமான மழை என்பது இல்லாமல் போய்விட்டது. நீர் வழித் தடங்களுக்கு இடையிலான முகட்டுப்பகுதி என்பது பராமரிக்கப்படுவது அவசியம். முகட்டுப் பகுதியில் முன்பு மழைப் பொழிவு அதிகமாக இருந்தது. நதிப்பகுதிகளில் குறைவாக இருந்தது. முகட்டுப் பகுதியிலிருந்து சரிந்து வரும் நீர் வழித்தடங்களைச் சுலபமாகச் சென்றடையும். மண்ணிற்கு கீழ் அமைந்த பாறையமைப்பு (மென்மையானப் பாறைகளும், கடினப் பாறைகளும் உயர்ந்தும் தாழ்ந்தும் பரவி நிற்பது) நீர் ஓட்டத்திற்கு ஏதுவாக இருந்திருக்கிறது.

    முகட்டுப் பகுதியில் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சப்பட்டதால் தாழ்வுப் பகுதியிலிருந்து உயரமானப் பகுதியில் நிலத்தடி மட்டத்திற்கு நீர் செல்கிற வாய்ப்பு இன்று அதிகரித்து விட்டது. இதன் விளைவாய் நீர்க்கால்களின் திசை மாறல் சுலபமாகி விட்டது. சுற்றுப்பகுதியில் மாசு நீர் இருந்தால் நல்ல நிலப்பகுதிக்கும் இதன் காரணமாக மாசு நீர் ஊடுருவுகிறது. இதனால் மாசும் பரவுகிறது. ஆயிரம் அடி ஆழ்குழாய் கிணறு போட்டு விவசாயம் செய்கிற நிலத்திற்கு இந்த நீர் ஊடுருவுகிறது. விவசாய நிலப்பகுதி முன்பு மாசற்ற நீர் கொண்டதாக இருந்த போதிலும் இவ்வகை ஊடுருவலால் மாசடைந்த நீர் கொண்ட பகுதியாகி விடுகிறது. ஆழ்குழாய் கிணறு மூலம் நீரை குறைத்து விவசாயம் செய்கிறவன் நிலம் மாசுபட்டு பயிர்கள் புது மாசு நீராய் கருவி விடுகின்றன. வெளிப்படையாக நீர் உள்ளப் பகுதி என்று தோன்றினாலும் பயிர்கள் விளைச்சலின்மைக்குக் காரணங்களாகி விடுகின்றன.

    நொய்யல் நதிப்பகுதிகளில் இருக்கும் சாயப்பட்டறைகள் 50 கி.மீ. நீளம் 20 கி.மீ. அகலம் என்று 1000 சதுர கி.மீ. பரப்பிற்கு நீரையும், நிலத்தடி மட்டத்தையும் மாசுபடுத்திவிட்டன. பவானி நதிக்கும், நொய்யல் நதிக்கும் இடையிலான 55 கி.மீ. தூரமும் இவ்வகை ஊடுருவலால் மாசடைந்து விட்டது. நொய்யல் நதிக்கு 25 கி.மீ. தூரத்தில் உள்ள அமராவதி நதியும்; நொய்யல் கோவையிலிருந்து பயணம் செய்ய கொடுமுடி தென்பகுதிக்குப் பின் காவேரியில் கலக்குமிடம் வரைக்கும் இவ்வகையில் சுலபமாக மாசுபட்டு விட்டது. சாயத் தண்ணீரால் நிலத்தடி நீர் மட்டம், அதிகரித்து இவ்வகைப் பகுதிகளில் மழைப் பொழிவு சற்று அதிகம் இருந்தாலும் பயனற்றதாகவே இருக்கிறது.

    இயற்கை சமச்சீர் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவதும், இயற்கை தன்னை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக் குறைவதும், நீர் வழித்தடங்கள் முகட்டுப் பகுதிகளுக்கு மாற்றப்படாததும், முகட்டுப் பகுதிகளிலிருந்து நீரை உறிஞ்சி வெளியேற்றப்படுவதும் அபாயகரமானவையாக அமைந்து விட்டன.

    இயற்கை வேளாண்மை சார்ந்த வா.செ. சாமியப்பன் போன்றவர்கள் மேட்டுப் பகுதிகளில் நதிநீர்த்தடங்கள் காக்கப்பட வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்தி வருகிறார்கள். பூமியின் நிலப்பரப்பில் காடகள் அழிந்துவரும் நிலை காரணமாக மழை சுலபமாக ஆவியாகி விடுகிறது. மழையைக் கவரும் மரங்களாக பால் வடியும் மரங்கள் எண்ணப்படுவதால் ஆலமரங்களை நட்டனர். ஓர் ஆலமரம் பத்து மரங்களுக்கு ஈடு. ஆல மரங்கள் குறியீடுகளாய் வானத்தை நோக்கி எங்கும் விரிந்திருந்த காலம் கனவாகி விட்டது. நல்ல மழைப் பொழிவைப் போல. நீர் இருந்தும் பயனில்லாது போகிற நீர்பாலைத் தன்மையால் நகரங்கள் தத்தளிக்கின்றன.

subrabharathi@gmail.com

Series Navigationபின்னற்தூக்குமருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *