நுகராத வாசனை…………

நேற்கொழு தாசன்

மலர் உதிரும் ஓசையொன்றால்
குலைந்து போனவன்
தனக்கான கல்லறையை செதுக்கத்தொடங்கினான்.

தேர்ந்த ஓரிடத்தில்
நிறங்களை ஒதுக்கி
மௌனப்பாறைகளால் சுவர்களையும்,
நிர்வாணத்தை நிகழ்த்தி
தனிமையால் புதர்களையும்
உருவாக்கினான் முதலில்.

இருளடர்ந்த சுவருக்குள்
வாசங்கள் நுழைந்துவிடாதிருக்க
வேர்களையெல்லாம் களையத்தொடங்கியவன்
கிளைகளின் ஈரலிப்பில்
பூர்விகத்தை கழுவிக்கொண்ட கணத்தில்
மொட்டொன்று அவிழ்ந்ததை உணர்ந்தான்.

கல்லறையின் வாசலில்
இறகொன்று கிடந்தது
பறத்தல் பற்றிய கனவோடு…..

ஆக்கம்; நேற்கொழு தாசன்

வல்வை
Series Navigationஅகாலம்குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்