நெய்தல்-கிழவற்கு உரைத்த பத்து

இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களும் தலைமகனுக்குச் சொல்லப்படுவதாகும். தலைவனானவன் ‘கிழவன்’ என்னும் உரிமைப் பெயரோடு சுட்டப்படுவதால் இது கிழவற்கு உரைத்த பத்து எனப் பெயர் பெற்றது.
கிழவற்கு உரைத்த பத்து—1

கண்டிகும் அல்லமோ. கொண்க நின்கேளே!
முண்டகக் கோதை நனையத்
தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் தோளே!
[முண்டகம்=சுழிமுள்ளி என்னும் ஒருவகைப் பூ; பௌவம்=கடல்]

அவன் இப்பக் கட்டினவளை உட்டுட்டு வேற ஒருத்தியோட போயிட்டான். கொஞ்ச நாள்ல அவன் திரும்பி கட்டினவகிட்டயே போகப்போறான். இது அவளுக்குத் தெரிஞ்சிசிடுத்து. அப்ப அவ அவன்கிட்ட சொல்ற பாட்டு இது.
கொண்கனேன்னு அவ அவனைக் கூப்பிடறா;
“அன்னிக்கு கழிமுள்ளிப் பூவாலான மாலயைப் போட்டுக்கிட்டு தன் கூந்தல் எல்லாம் நனைஞ்சு போகுமாறு கடல்ல பாஞ்சு நீராடினாளே ஒருத்தி; அவ ஒனக்கு ஒறவுதானே? அவளை நாமும் அன்னிக்குப் பாத்தோமே?’ இதான் பாட்டோட பொருள்.
அந்தக் காலத்துல கழிமுண்டகப் பூவால மாலை தொடுத்துப் போட்டுக்கிட்டு கடல்ல நீராடறது வழக்கம். ”அணிமலர் முண்டகத் தாய் பூங்கோதை, மணிமருள் ஐம்பால் வண்டு பாடத் தைஇத், துணிநீர்ப் பௌவம் துணையோடாடி”ன்னு நற்றிணையில கூட வருது. கட்டினவ தன்னை அழகாப் பூமாலை சூட்டிக்கிட்டு தன் தலைக் கூந்தல் எல்லாம் நனைய ஒன்னைப் பிரிஞ்சிருந்ததால மனம் வருந்தி தனியா நீராடினாளே அவளை நாமும் பாத்தோமே! நீயும் அன்னிக்கி அவளைப் பாத்து மயங்கிப் போனியேன்னு அவ சொல்றா; எப்படியும் அவன் தன்னை உட்டுட்டுப் போயிடுவான்னு அவளுக்குத் தெரிஞ்சதை மறைவாச் சொல்றா
கிழவற்கு உரைத்த பத்து—2
கண்டிகும் அல்லமோ கொண்க! நின்கேளே?
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே!
[உயர்மணல்=மணல்மேடு; ஒள்ளிழை=எளிதாகத் தெரியும் ஒளி மிகுந்த ஓர் நகை; வெள்ளாங்குருகு=கடற்பறவை இனத்தைச் சேர்ந்த ஒரு பறவை]

இதுவும் போன பாட்டு மாதிரிதான். அவன் கட்டினவ ஒரு நாள் கடற்கரைக்கு வரா; அப்ப அவ போட்டிருந்த நகை ஒண்ணு மணல் மேட்டுல விழுந்து போச்சு; அவளுக்கு ரொம்ப வருத்தமா போச்சு; அங்க இருந்த வெள்ளாங்குருகு கிட்டப் போயி, “ நீ என் நகையைப் பாத்தியா”ன்னு கேக்கறா? அப்படிக் கேக்கற அவளை அன்னிக்கு நீயும் நானும் பாத்தோமே” ன்னு அவன் சேத்துகிட்டவ சொல்றா.
வெள்ளாங்குருகு எங்காவது நகையைத் தேடித் தருமா? தராது; அதேபோல நீ என்னை உட்டுட்டு அங்க போறதும் நடக்காதுன்னு அவ மறைமுகமா சொல்றா.
கிழவற்கு உரைத்த பத்து—3
கண்டிகும் அல்லமோ, கொண்க!நின் கேளே?
ஒண்ணுதல் ஆயர் ஆர்ப்பத்
தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே!
[ஆயர்=ஆய மகளிர்; ஆர்ப்ப= ஆரவாரித்து ஒலி எழுப்ப]

போன பாட்டு மாதிரியேதான் இதுவும். அவ கேக்கறா.
”கொண்கணே! நல்லா வெள்ளையா அழகா நெத்தி இருக்கற எல்லா ஆயர் பெண்களும் நல்லா கூக்குரல் எழுப்ப குளிர்ச்சியான் கடலிலே அலையில பாஞ்சு நீராடற உன் ஒறவுக்காரியை நாமும் பாத்தோமே?”
எல்லாரும் பாத்தங்க நானும்தான் பாத்தேன்; நீ ஏன் இல்லன்னு பொய் சொல்றன்னு அவ மறைமுகமா கேக்கறா.
கிழவற்கு உரைத்த பத்து—4
கண்டிகும் அல்லமோ கொண்க! நின்கேளே!
வண்டற் பாவை வௌவலின்
நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே!
[வண்டற்பாவை=மணலால் செய்யப்பட்ட பாவை; வௌவல்=கவர்ந்து போதல் நுண்பொடி=நுண்ணிய பொடி மணல்; அளை=அள்ளித்தூற்றி]
அவன் கட்டினவ கிட்டப் போகப் போறான்னு தெரிஞ்சதும் அவ சொல்ற பாட்டுத்தான் இதுவும்.
”கொண்கணே! அவ ஒரு நாள் மணல்ல பாவை கட்டி வெளயாடிக்கிட்டு இருந்தா; கடல்லேந்து அலை வந்து அதை அழிச்சுப்போச்சு. அதால அவளுக்குக் கோபம் வந்துடுச்சு; என் பாவையை அழிச்ச இந்தக் கடலையே தூர்ந்து போக வச்சிருவேன்னு மணலை வாரி வாரிக் கடல்ல போடறா’; அப்படிப்பட்டவள நாமும் பாத்தோமே”
மணற்பாவையைக் கடல் அழிச்சதுக்கே அவ்வளவு கோபம் வந்திடிச்சு அவளுக்கு. நீயும் கொடுமை செஞ்சா அவ சும்மா இருப்பாளா? அதால நீ போயிடுன்னு சொன்னான்னு வச்சுக்கலாம்.
கிழவற்கு உரைத்த பத்து—5
கண்டிகும் அல்லமோ, கொண்க!—நின்கேளே?
தெண்டிரை பாவ வௌவ
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!

இதுவும் போன் பாட்டு மாதிரிதான்.
“அவ கட்டின மணலாலான பாவையைக் கடல் வந்து கொண்டு போச்சு. அதுக்கு அவ மைதீட்டின கன்ணெல்லாம் செவந்து போற மாதிரி அழுதுகிட்டு நின்னா. அதை நாமும் பாத்தோமே?”
மணல்ல கட்டினதை அழிச்சதுக்கே அப்படி அழுதாளே! நீ அவ வாழ்வையே அழிக்கப்பாக்கறயே? அவ நெலமை என்னாகுமோன்னு தோழி சொல்ற மாதிரியும் இதை வச்சுக்கலாம்.
கிழவற்கு உரைத்த பத்து—6
கண்டிகும் அல்லமோ, கொண்க!நின் கேளே?
உண்கண் வண்டினம் மாய்ப்பத்
தெண்கடற் பெருந்திரை மூழ்கு வோளே!
[உண்கண்=மை தீட்டப்பட்ட கண்]
இதுவும் அவ சொல்ற பாட்டுதான்;
”கொண்கனே! அவளோட மை தீட்டின கண்ணை வண்டு பூவுன்னு பாத்து மயங்குது. அது அவளுக்குப் பொறுக்கலே! அதால அந்தக் கண்ணை மறைக்க ஒடனெ கடை அலையில மூழ்குறா. அப்படிப்பட்ட ஒன் ஒறவுக்காரியை நாமும் பாத்தோமே”
அவ கண்ணை வண்டு வந்து மொய்க்கறதே அவளுக்குப் பொறுக்கலே இன்னும் என்னைப் போல இருக்கறவ ஒன்னோட பழகினா அவ பொறுத்துப்பாளான்னு அவ மறைவா சொல்றா?

கிழவற்கு உரைத்த பத்து—7
கண்டிகும் அல்லமோ கொண்க! நின்கேளே?
தும்பை மாலை இளமுலை
நுண்பூண் ஆகம் விலங்கு தோளே!

”கொண்கனே! அவ மார்புல தும்பைப் பூவால கட்டின மாலை போட்டு இருக்கறா; அத்தோட அவளுக்கு இளமையான முலைகள் இருக்கு; அவ பூண் அணிந்திருக்கா; அப்படிபட்ட அவ மார்பை நீ தழுவப் போகச்சே அவ வெலகிப் போனாளே; அவளை நாங்களும் பாத்தோமே!”
அவகிட்ட போய் அவளுக்கு இன்பம் குடு; இல்லன்னா அன்னிக்கு வெலக்கினவ இன்னிக்கும் வெலக்கிடுவான்னு தோழி சொல்றாப்பல இந்தப் பாட்டை எடுத்துக்கலாம்.
கிழவற்கு உரைத்த பத்து—8
கண்டிகும் அல்லமோ கொண்க நின்கேளே?
உறாஅ வறுமுலை மடாஅ
உண்ணாப் பாவை ஊட்டு வோளே!

[உறா வறுமுலை=பால்சுரத்தலைப் பெறாத முலை; மடாஅ=வாயில் இட்டு ஊட்டுவாள்; உண்ணாப் பாவை=மரப்பாவை]

”! அவ வச்சிருக்கற மரப் பாவை சாப்பிடாது; ஆனா அவ பாலே வராத தன் முலைகளை அந்த மரப்பாவைக்கு ஊட்டி அதால மகிழ்ச்ச்சி அடைவா;’
இந்தப்பாட்டைத் தோழி சொல்றாப்பல வச்சிக்கிட்டா “அவளோட அப்படிப்பட்டப் வெளயாட்டான வீட்டு வாழ்வைக் கெடுத்திட்டியே”ன்னு அவ சொல்றதா நெனக்கலாம்.
இல்ல அவ சொல்றான்னு வச்சிக்கிட்டா, அவனைக் கட்டினவள ரொம்ப சின்னவன்னு கேலி பேசற மாதிரின்னு வச்சுக்கலாம்.
இந்தக் கிழவற்கு உரைத்த பத்தில் கடைசி ரெண்டு பாட்டுங்க கெடக்கல்ல. இந்தப் பகுதியைத் தோழி சொல்றான்னா கட்டினவள மெல்லிய மனசு கொண்டவாளாக் காட்டறான்னு வச்சுக்கலாம். இல்ல அவ சொல்றான்னு வச்சுக்கிட்டா கட்டினவள இன்னும் சிறுமியா இருக்கான்னு குத்திக் காட்டற்றான்னு வச்சுக்கலாம்.
இத்தோட கிழவற்கு உரைத்த பகுதி முடிஞ்சுபோச்சு

Series Navigationஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.தொலைந்த கவிதை