நேர்மையின் தரிசனம் கண்டேன்

கோ. மன்றவாணன்

      எழுத்தாளர் வளவ. துரையன் அய்யா அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய துணைவியார் அலர்மேல் மங்கை அவர்கள் இரு தட்டுகளில் கடலைக் கேக்குகளும் ஓமப் பொடியும் கொண்டுவந்து வைத்தார். சாப்பிட்ட படியே பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் இடையே சில நோட்டுப் புத்தகங்களை எடுத்துவந்து காட்டினார். அவர் 1996 முதல் நடத்திவரும் இலக்கியச் சோலை அமைப்பின் வரவு செலவுக் கணக்கு விவரங்களை விடுபாடு ஏதும் இல்லாமல் எழுதி வைத்திருந்தார். பற்றாக்குறை இருக்கும் என்று எண்ணிக் கடைசிப் பகுதியைப் பார்த்தேன். இருப்புத் தொகை இருந்தது.

      இதுவரை 191 இலக்கிய நிகழ்வுகளை நடத்தி உள்ளார். எந்த ஆடம்பரமும் இன்றி எளிமையாகவே விழாக்களை நடத்துவார். வருகையாளர்களுக்குத் தேநீர், காராசேவு கொடுப்பார். நாட்குறிப்பேடு ஒன்று சுற்றுக்கு வரும். அதில் வருகை தந்தோர் கையொப்பம் இடுவதோடு தன்விருப்பத்தின் பேரில் பத்து ரூபாய் இருபது ரூபாய் என நன்கொடை எழுதுவார்கள். எப்போதாவது நன்கொடையாக நூறு ரூபாய் எழுதும் ஓரிருவர் இருப்பார்கள். அந்தத் தொகையைக் கொண்டே கூட்டச் செலவைச் சரிகட்டுவார். (தற்போது அந்த நிதியையும் பெறுவதில்லை) கூட்டம் முடிவதற்குள் ரசீதுகள் அவரவர் கைக்கு வந்து சேர்ந்துவிடும். இன்றைய காலத்தில் பத்து ரூபாய்க்கும் ரசீது தருவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதற்கும் கணக்கு எழுதிப் பாதுகாப்பதைக் கண்டு கண்ணை அகல விரித்திருக்கிறேன். ஆக இலக்கியச் சோலையின் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கான கணக்கு விவர நோட்டுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கிறார்.

      இப்போது எனக்குச் சர்க்கரை இல்லாத காபியும் அவருக்குச் சர்க்கரை போட்ட காபியும் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா. இருவரும் பருகினோம். அடுத்ததாக மற்றொரு நோட்டுப் புத்தகத்தைக் காட்டினார். அவர் நடத்தி வரும் சங்கு காலாண்டு இதழின் வரவு செலவுக் கணக்கு விவரங்கள் அதில் இருந்தன.

      அவரை யாரும் கணக்குக் கேட்கவில்லை. சிறிய இலக்கிய அமைப்பாக இருந்தாலும் அதன்நிதி பொதுநிதி ஆகும். பொதுநிதியில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது என்று கணக்கு எழுதி, இத்தனை ஆண்டுகாலமாகப் பாதுகாத்தும் வருகிறார். பொதுவாழ்க்கை என்பது திறந்த ஏடாக இருக்க வேண்டும் என்பது அவருடைய எண்ணம். இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது எங்கெங்கோ சென்றன என் எண்ணங்கள்.

      அரசியல் கூட்டங்கள், கோவில் விழாக்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், பொதுநிகழ்ச்சிகள் என ஏராளமான நிகழ்வுகள் நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பொதுமக்களிடம் இருந்தே நிதி திரட்டுகின்றனர். நிகழ்ச்சி முடிந்தபின் யாராவது கணக்குக் காட்டி நீங்கள் பார்த்தது உண்டா? கேட்டது உண்டா? கைப்பணம் போட்டுத்தான் நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். அந்தக் கணக்கையாவது காட்டியது உண்டா? ஆனாலும் விதிவிலக்காக ஓரிரு நேர்மையர் எங்காவது இருக்கலாம். “கடவுளைப்போல்” அவர்கள் நம் கண்களுக்குத் தெரிய மாட்டார்கள்.

      பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துபவர்களுக்குப் போதுமான நிதி கிடைப்பதில்லை. கடைசி நேரத்தில் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவிப்பவர்கள் பலரை நான் அறிந்திருக்கிறேன். நிர்வாகிகள் தம் கைப்பணம் போட்டே செலவைச் சரிசெய்வார்கள். எனினும் சில பெரிய அமைப்புகள் நிறைய வசூல் செய்வார்கள். கணக்கு எழுத மாட்டார்கள். தமிழ் தெரிந்த அவர்களுக்குக் கணக்குத் தெரிவதில்லை.

      புது எழுத்தாளர் ஒருவர் புத்தகம் எழுதினார். அதை ஒரு பொது அமைப்பின் மூலமாக வெளியிட விரும்பினார். தலைவரைப் பார்த்தார். அவரோ மனக்கணக்குப் போட்டுப் பார்த்து விழா நடத்த பெருந்தொகை கேட்டார். “இவ்வளவு ஆகுமா” என்று எழுத்தாளர் தயங்கினாலும் புகழுக்காக முழுத்தொகையும் கொடுத்தார். தலைவரோ ஒவ்வொரு செலவுக்கும் அமைப்பின் பிற நிர்வாகிகளிடமும் ஊர் பெரிய மனிதர்களிடமும் நிதிகேட்டுப் பெற்றார். மிகவும் சிறப்பாக விழா நடந்தது. கூட்டத்தில் தலைவர் பேசும்போது, விழாச்செலவை முழுவதுமாக எழுத்தாளரே ஏற்றுக்கொண்டார் என்று எங்கும் சொல்லவில்லை. அமைப்பே முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டு அந்த எளியவருக்கு விழா நடத்துவது போல் சாமர்த்தியமாகப் பேசி அமர்ந்தார். அந்த விழாவைச் சொல்லித் தான் யார் யாரிடமிருந்து நிதி பெற்றாரோ அவர்களின் பெயர்களையும் “அவர்களே இவர்களே” வரிசையில்கூட  விளிக்கவில்லை.

      அரசியல் கட்சியினர் அடிக்கடி நிதிவசூல் செய்வார்கள். அவர்களிடத்தில் கணக்குக் கேட்டால் கட்சியைவிட்டு நீக்கி விடுவார்கள். கட்சித் தலைமையே தேர்தல் நிதியாக 100, 500, 1000, 5000, 10,000, 25,000, 50,000, 1.00,000 எனத் தொகையைக் குறிப்பிட்டே நன்கொடைச் சீட்டுப் புத்தகங்கள் அச்சடித்துத் தந்து வசூல் செய்யச் சொல்வார்கள். அந்த நன்கொடைச் சீட்டு இரு பிரதிகள் கொண்டதாக இருக்கும். ஒரு பிரதியைக் கிழித்துக் கொடையாளரிடம் கொடுக்க வேண்டும். அதன் மறுபிரதி நன்கொடைப் புத்தகத்தோடு பிணைக்கப் பட்டிருக்கும். குறிப்பிட்ட தேதியில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் நடத்தி ஒரு பெருந்தொகையை அளிப்பார்கள். ஆனால் மறுபிரதிகள் அடங்கிய நன்கொடைப் புத்தகங்களைச் சரிவர ஒப்படைக்க மாட்டார்கள். இத்தனைக்கும் வசூல் பணத்தில் 10 சதவீதம் செலவுக்காக எடுத்துக்கொள்ளுமாறு தலைமையே அனுமதிக்கும். அப்படி இருந்தும் வசூல் செய்த / வசூல் செய்யாத நன்கொடைப் புத்தகங்களைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போய் ஓய்ந்துவிடும் தலைமை.

      போலி ரசீதுகள் தயாரித்துப் பொய்க்கணக்கு எழுதி மெய்கொழுக்கும் வல்லவர்கள் பல்வேறு அமைப்புகளில் இருக்கிறார்கள். அவர்களைப் புத்திசாலிகள் என்று சமூகம் புகழ்ந்துரைக்கும்.

      தொண்டுநலம் கொண்டவர்கள் சேர்ந்து இருநாள் பயிற்சி வகுப்பு ஒன்றை நடத்தினார்கள். பயிற்சி நடந்த இடத்துக்கு வாடகை இல்லை. தங்கும் இடமும் அதுவே. பயிற்றுநர்களுக்கு ஊதியம் இல்லை. ஆகின்ற மொத்த செலவைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்கள். முன்னதாக ஐநூறு ரூபாய் செலுத்தச் சொன்னார்கள். தோராயமாக எழுநூற்று ஐம்பது ரூபாய் தலைக்கு வரும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். பயிற்சியில் பலர் சேர்ந்தார்கள். இரண்டாம் நாள் பகல்வேளையோடு பயிற்சியை நிறைவு செய்துவிட்டார்கள். மொத்தமாக ஐந்து வேளை உணவு மட்டுமே தந்தார்கள். முடிவில் பகிர்வுத் தொகையாகத் தலைக்கு ரூபாய் இரண்டாயிரம் கேட்டார்கள். கணக்குக் கேட்டதற்கு மின்னஞ்சலில் அனுப்புகிறோம் என்று புன்னகை தவழச் சொன்னார்கள். பத்துநாள் கழித்து மின்னஞ்சல் வந்தது. மூன்று வரிகளில் கணக்கு எழுதி முடித்துவிட்டார்கள். மொத்த வரவு இவ்வளவு. மொத்த செலவு இவ்வளவு. மீதித் தொகை பத்தாயிரம். அந்தப் பத்தாயிரத்தையும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டார்கள். எது எதற்கு என்ன செலவு என்று சொல்லவே இல்லை.

      கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி தமிழ்ப்பணி அறக்கட்டளை ஒன்று இருந்தது. அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். அந்தத் தொகையை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்திருந்தார்கள். அறக்கட்டளை மூலம் தமிழ்ப்பணிகள் நடந்தன. சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அமைப்புக்குள் கருத்து வேறுபாடு ஒன்று நிலவியது. அதன் காரணமாக அந்த அறக்கட்டளையை க.பொ.இளம்வழுதி கலைத்துவிட்டார். அனைத்து உறுப்பினர்களையும் தேடிச் சென்று அவர்கள் அளித்த தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

      நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு இது.  அவர் “மன்றம்” என்ற பெயரில் இதழ் நடத்தினார். அந்த இதழ் நின்று போனபோது, அதன் சந்தாதாரர்கள் அனைவருக்கும் உரிய தொகையைக் கணக்கீடு செய்து பணவிடை செய்துவிட்டார்.

      நான் கல்லூரியில் படிக்கின்ற போது முத்து. குணசேகரன்  என்றொரு தமிழ்ப்பேராசிரியர் இருந்தார். அப்போதைய வணிகவியல் பாடத் திட்டத்தில் தமிழ் இல்லை என்பதால் அவரிடத்தில் படிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு அமையவில்லை. பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உடையவர் என்பதால் அவரிடத்தில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

      தமிழ்ப்பெரு மன்றம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். அவர் தலைவர். நான் செயலாளர். இராமலிங்கம் என்ற தங்கத்தமிழன் என்பவர் பொருளாளர். செயலாளராக இருந்த நான், காலணி விற்பகம் ஒன்றில் பகுதி நேரப் பணியாளராக இருந்தேன். இராமலிங்கமோ இரும்புக் கடையில் முழுநேரப் பணியாளராக இருந்தார். நாங்கள் அணிந்திருந்த உடைகளும் எங்கள் முகங்களும் எங்கள் வறுமையை ஊருக்குச் சொல்லும்.

      தமிழ்ப்பெரு மன்றத்தின் மூலம் பல தரம்மிகுந்த இலக்கியக் கூட்டங்களை நடத்தினோம் என்றால் சரியில்லை. நடத்தினார் என்பதுதான் சரி. அன்றைய தமிழகத்தின் ஆளுமைகளை அழைத்துப் பேச வைத்தார். கூட்ட ஏற்பாடுகளைப் பெரிய அளவில் செய்தார். இப்படி நிகழ்ச்சி நடத்துவதற்குப் பணம் இல்லாமல் முடியாது. பேராசிரியர் என்னை உடன் அழைத்துச் சென்று நிதி கேட்பார். நகரில் உள்ள பெரிய மனிதர்களிடத்தில் அவருக்கு போதிய அறிமுகம் இல்லை. பேராசிரியர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதனால் கடற்கரை கிராமங்களில் இருந்த படகு முதலாளிகளை அவர் அறிந்து வைத்திருந்தார். தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் படகு முதலாளிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனாலும் வீடுதேடிச் சென்று அவர்களைச் சந்திப்பார். நானும் உடன் இருப்பேன். நிகழ்ச்சியின் அழைப்பிதழைக் கொடுத்து நிதிஉதவி செய்யச் சொல்வார். மீனவர் சமுதாய மக்களிடத்தில் அவருக்கு ஒரு மரியாதை இருந்தது. அதனால் நூறு ரூபாய்க்குக் குறையாமல் பலர் கொடுத்தார்கள். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது பெருந்தொகை. வசூல் செய்யக் காலையில் புறப்படும் நாங்கள் மாலையில்தான் வீடு திரும்புவோம். வெயிலில் நடந்தே செல்வோம். பேராசிரியர் தலையில் கைக்குட்டையைக் கட்டிக்கொள்வார். மதியம் இரண்டு மணிவாக்கில் பசி வரத்தானே செய்யும். தன் பணத்தில் ஒரு ரூபாய்க்குக் கொய்யாப்பழம் வாங்குவார். நாங்கள் இருவரும் சாப்பிட்டுப் பசியாறுவோம். மீண்டும் வசூலுக்குச் செல்வோம்.

      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் கவனிப்போம். விளம்பரத் தட்டிகள் தயார் செய்து தெரு முனைகளில் கட்டுவோம். பேராசிரியரே மரத்தின் மீது ஏறிக் கட்டுவார். நான் கீழிருந்து உதவுவேன். நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ், ஒலி ஒளி அமைப்பு உள்ளிட்ட செலவுகள் என்னென்ன என்பதை உடனுக்குடன் குறித்துக்கொண்டே வரச்சொல்வார். நானும் அவ்வாறே செய்வேன். நிகழ்ச்சிக்கு முதல்நாளே மறுநாள் நடக்க இருக்கும் நிகழ்வின் வரவு செலவு அறிக்கையை எழுதி அச்சிடக் கொடுத்துவிடுவோம். அச்சகத்தினரும் எழுத்துக் கோர்த்துத் தயாராக  வைத்து விடுவார்கள். நிகழ்வின் காலைவரை ஏதேனும் செலவு இருந்தால் அதனையும் மெய்ப்புப் பார்க்கும்போது சேர்த்துவிடுவோம். அந்த வரவு செலவு அறிக்கையின் அச்சுச் செலவையும் குறித்துவிடுவோம். யார் யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்ற வரவு விபரமும் நிகழ்ச்சிக்கான செலவு விபரமும் அதில் இருக்கும். மீதித் தொகை விவரமும் இருக்கும். மதியம் மூன்று மணியளவில் வரவு செலவு அறிக்கை அச்சாகிவிடும். அதனை நான் வாங்கி வருவேன்.

      விழா நடந்துகொண்டு இருக்கும்போதே அச்சிட்ட வரவு செலவு அறிக்கையை வருகையாளர்களிடம் வழங்கச் சொல்வார். நானும் வழங்குவேன். விழா முடிந்தவுடன் விருந்தினர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் செலவில் விருந்து அளிப்பார்.

      எப்படி நிதிவசூல் செய்யச் சென்றோமோ அதுபோலவே மறுநாள் என்னை அழைத்துக்கொண்டு செல்வார். யார் யார் நிதி கொடுத்தார்களோ அவர்களின் வீடுதேடிச் சென்று சந்தித்து வரவு செலவு அறிக்கையைக் கொடுத்து நன்றி கூறுவார்.

      இப்படி ஒருவரை யாரேனும் கண்டதுண்டா? அந்தப் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுவாழ்வில் முத்து. குணசேகரன்கள் தேவைப்படுகிறார்கள்.

Series Navigationப.தனஞ்ஜெயன் கவிதைகள்காலம் மாறிய போது …