”பங்கயக் கண்ணான்”

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

 

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

     செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

     செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

     தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

     எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

     நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!

     சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

     பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். 

”பங்கயக் கண்ணான்”

                                      வளவ. துரையன்

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்!

சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பதினான்காம் பாசுரம் இது. மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று உள்ளே உறங்குகின்ற பெண்களை எழுப்பும் ஆயர்குலச் சிறுமிகள் இப்பாசுரத்திலும் ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

அவள் எப்படிப்பட்டவள் தெரியுமா? இவர்கள் செய்யும் எல்லாக் காரியங்களிலும் தானே முன் வந்து நிற்பவள். இந்த மார்கழி நோன்பு நோற்பதற்கும் உங்களை எல்லாம் நானே வந்து எழுப்புகிறேன் என்று முன்னம் மொழிந்தவள். ஆனால் தான் சொன்னதை மறந்து அவள் இன்னமும் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவள் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். ‘யார் அது?என்ன?’ என்று அவள் கேட்கிறாள்.

”மார்கழி நோன்பு நோற்கப் போக வேண்டும். எழுந்திரு; பொழுது விடிந்து விட்டது. நாங்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே கிடக்க நீ இன்னும் உள்ளே கிடந்து உறங்குகிறாயே?”

”பொழுது விடிந்து விட்டதா? இல்லையே; விடிந்தது என்பதற்கு என்ன அடையாளம்?”

”செங்கழுநீர்ப் பூக்கள் மலரத் தொடங்கி விட்டன. ஆம்பல் மலர்கள் குவிய ஆரம்பித்து விட்டன.”

என்று ஓர் அடையாளத்தைச் சொல்கிறர்கள். ஆம்பல் மலரானது சூரியன் வரவு கண்டால் குவிவது சந்திரன் வந்தால் மலர்வது எனும் இயல்பு உடையது. ஆனால் செங்கழுநீர்ப் பூக்களோ இதற்கு நேர்மாறாக கதிரவனின் வரவு கண்டு மலரக் கூடியவை.

”அவளோ, மலர்ந்திருப்பவை செங்கழுநீர்ப் பூக்களல்ல; என்னைக் காண வேண்டும் என்ற ஆனந்தத்தாலே என் இல்லத்திற்கு வந்த உங்கள் கண்கள். அதுபோல நான் உங்களிடம் இதுவரை பேசாததால் ஏற்பட்ட வெறுப்பால் உங்களின் வாய்கள் மூடிஉள்ளன. அதையே நீங்கள் ஆம்பல் மலர்கள் குவிந்ததாகக் கருதுகிறீர்கள் போலும்” என்று பதிலுரைத்தாள்.

உடனே இவர்கள், “இங்கே இருப்பவற்றை நாங்கள் சொல்லவில்லை. நம் ஆயர் பாடி வயல்களில் உள்ள மலர்களைத்தான் சொல்கிறோம்” என்றனர்.

”நீங்கள் இரவெல்லாம் கண்ணன் நினைவால் உறங்க மாட்டீர்கள் வயல்களுக்குச் சென்று மலர வேண்டியவனற்றை மலரச் செய்தும் குவிய வேண்டியனவற்றைக் குவியச் செய்தும் இருப்பீர்கள். இதுதானே உங்களுக்கு வேலை”

“சரி, இதோ பார்; வயல்களை விட்டுவிடு; நாங்கள் எளிதில் இறங்க முடியாதபடிக்கு ஆழமாகவும் அகலமாகவும் இருக்கும்ஒரு சில தோட்டக் குளங்களில் உள்ள பூக்களெல்லாம் மலர்ந்தும் குவிந்தும் உள்ளன.”

அவள் மிகவும் சாமர்த்தியமாகப் பேசுகிறாள்.

“நீங்கள் குளத்தின் தண்ணீரைப் பார்க்கின்றீர்கள்; அதில் உங்கள் கண்களும் வாய்களும் பிரதிபலிக்கின்றன. அவை உங்களுக்கு ஆம்பலும் செங்கழுநீர்ப் பூக்களூமாகத் தெரிகின்றன” என்று கூறுகிறாள்.

இந்த இடத்தில்,

          நெல்லில் குவளை கண்காட்ட

நீரில் குமுதம் வாய்காட்ட

அல்லிக் கமலம் முகங்காட்டும்

கழனி யழுந்தூர் நின்றானை

வல்லிப் பொதும்பில் குயில்கூவும்

மங்கை வேந்தன் பரகாலன்

சொல்லில் பொலிந்த தமிழ்மாலை

சொல்லப் பாவம் நில்லாவே

எனும் திருமங்கை ஆழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறது.

     ”சரி நீயே சென்று வேண்டுமானால் அந்தக் குளத்து நீரில் பார்”

என்று சொன்னதற்கு அவளோ, “நீங்களே அவற்றையும் மலர்த்தி இருப்பீர்கள்” என்றாள். அவள் வாய்க்கு எப்படியாவது மறுமொழி கூறவேண்டும் என்று இவர்கள்,

“இதோபார் சூரியனும் நுழைய முடியாத உன்னுடைய தோட்டத்துக் குளத்தின் மலர்கள் கூட மலர்ந்து விட்டனவே; சேதனமான அவை கூட தன் கருமங்களைச் செய்யத் தொடங்கி விட்டன.ஆனால் நீ உன் கருமங்களைச் சேய்ய எழ வேண்டாமா” என்கிறார்கள்.

இந்த இடத்தில் ஓர் ஐயம் எழலாம். இவர்களோ வீட்டு வாயிலில் நிற்கிறார்கள். இவர்களுக்கு எப்படி தோட்டத்துக் குளம் பார்வையில் தெரியும்? ஆனால் இவர்கள் பொய் சொல்லத் தெரியாதவர்க ளாயிற்றே?

இதைத்தான் அனுமான ஞானம் என்பாரகள். அதாவது ஊகித்து அறிவது. புகை என்ற ஒன்று வந்தால் அங்கே நெருப்பு உண்டு என்று அறிவதைப் போல வழியில் உள்ள எல்லாக் குளங்களிலும் உள்ள மலர்கள் மலர்ந்திருக்கின்றன. அதேபோல அவள் வீட்டுத் தோட்டத் தின் குளத்துப் பூக்களும் மலர்ந்திருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதிலும் ’உங்கள் புழக்கடை’ என்று உள்ளே உறங்குபவளை வேறுபடுத்திச் சொல்வதையும் இங்கு பார்க்கிறோம்.

வெளியில் இருப்பவர்கள் சிறந்த பாகவதர்கள். நான் எனது மற்றும் நீர் நுமது என்பதையெல்லாம் தவிர்த்தவர்கள். அப்படி ‘நீர் நுமதென்றிவை வேர் முதல் மாய்த்து இருப்பவர்கள் ‘உங்கள், எங்கள்’ என்று பிரித்துச் சொல்லலாமா என்றால் நம்முடைய தேகம் மற்றும் செல்வம் இவற்றால்தான் அஹங்கார மமகாரங்கள் கொள்ளக் கூடாது. பகவத் பாகவத சம்பந்தத்தால் அவை கொள்ளலாம்” என்பது பூர்வ ஆச்சாரியார்கள் கருத்தாகும்.

”அபிமான துங்கன் என்று கூறும் அல்வழக்கொன்றும் இல்லா அணி கோட்டியூர்கோன் அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே! நானும் உனக்குப் பழ அடியேன்” எனும் பெரியாழ்வார் அருளிச் செயல் இங்கு நோக்கத்தக்கது.

உள்ளே இருப்பவள் எழுந்து வரவில்லையே என்ற கோபத்திலும் சொல்வதாகக் கொள்ளலாம். பாகவதர்கள் மேல் உள்ள அன்பினால் கோபிக்கவும் உரிமை உண்டு.

”வாசிவல்லீர் இந்தளூரீர்! வாழ்ந்தே போம் நீர்” என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரம் இங்கே குறிக்கத் தக்கது.

உள்ளே இருப்பவள்,

”இப்போது நீங்கள் எல்லாரும் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்கின்ற விருப்பத்தால் மலர்கள் மலர்ந்துவிட்டன என்று சொல்கிறீர்கள். பொழுது விடிந்து விட்டது என்பதற்கு வேறு அடையாளம் சொல்லுங்கள்” என்கிறாள்.

உடனே இவர்கள்

”விடியற் காலையில் காவி வஸ்திரம் தரித்துக் கொண்டு வெண்மையான பல்லை உடையவர்களாயிருக்கும் சன்யாஸிகள் தங்கள் திருக்கோயிலுக்குச் சங்கூதப் போகின்றனர். எனவே நீ எழுந்து வா” என்கின்றனர்

எப்பொழுதும் சன்யாசிகளின் ஆடை சிவப்பாய் இருக்க வேண்டும். அவர்கள் பற்களும் வெண்மையாய் இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தாம்பூலம் போன்றவற்றை விலக்க வேண்டும்.

இந்த இடத்தில் எம்பார் சொல்லும் வியாக்கியானம் சற்று கவனிக்கத் தக்கது.

சன்யாசிகளின் உடல் பற்றிய அடையாளங்களை மட்டும் சொல்வதனாலும், தங்கள் திருக்கோயில் என்று அவர்களை வேறுபடுத்திச் சொல்வதாலும் இது கபடமான வேடதாரிகளைப்பற்றியது” என்பார் அவர்.

மேலும் அவர் ஒரு கதையையும் கூறுவார்.

ஒரு வேஷதாரியான சன்யாசி காவிரி ஆற்றைக் கடக்கப் பரிசில் ஏறிப் போகிறான். அப்பரிசலில் மனிதர்களும் குதிரையும் கூட இருந்தனவாம். நடு ஆற்றுக்குப் பரிசில் போனபோது, அவன் காவேரி தேவிக்குச் சங்கூதுகிறேன் என்று சங்கை எடுத்து ஊதினான். உடனே பரிசிலில் இருந்த குதிரை மிரண்டு போக அது தாவிக்குதித்து மனிதர்களை மிதிக்கப் பரிசில் கவிழ அனைவரும் மாண்டனராம்.

ஆனால் திருமலை நம்பிகளோ, “ சன்யாச ஆஸ்ரமத்தில் இருக்கும் மஹான்கள் காலையில் எழுந்து அனுஷ்டானம் பண்ணுகிறார்கள்” என்று சொல்வதோடு “தமோகுணம் நிறந்த சன்யாசிகளைச் சொல்லி, உள்ளே உறங்கும் சாத்வீக குணங்களை உடையவர்களை எழுப்பக் கூடாது” என்றும் சொல்வார்.

சங்கூதுவதைச் சொல்வதனால் மணியடித்தல் போன்ற வேறு உப காரியங்களையும் சொல்வதாகப் பொருள் கொள்ளலாம். சங்கு என்பதைச் சாவி என்று பொருள் கொண்டு அவர்கள் கோயிலைத் திறக்கப் போகிறார்கள் என்றும் கொள்ளலாம்.

எம்பார் சொல்வதற்குப் பதிலாக உள்ளே இருப்பவள்,

”வேஷதாரிகளான சன்யாசிகள் அரசனின் தண்டனைக்குப் பயந்து செல்கின்றனர். அது விடிவுக்கு அடையாளம் அன்று.” என்றும்

திருமலை நம்பிகள் சொல்வதற்குப் பதிலாக “அவர்களெல்லாம் “தெரிந்தெழுதி வாசித்தும் கேட்டு வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் போது” என்கிறபடி எப்போதும் திருமாலை எண்ணி இருப்பவர்கள். எப்போதாவது பகவத் விஷயங்களில் ஈடுபட்டவர்களைத்தான் இந்த அடையாளத்தைச் சொல்லி எழுப்பலாம்.”என்றும் கூறிவிடுகிறாள்.

இப்படி தங்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் அவள் பதில், சொல்வதை கேட்ட இவர்கள், ’

நீ நேற்று என்ன சொன்னாய் தெரியுமா? நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புகிறேன் என்றாய். ஆனால் இப்போது நாங்கள் வந்து எழுப்பியும் இப்படி எல்லாவற்றிற்கும் பேசிக் கொண்டிருப்பது உனக்கு அழகா?” என்று கேட்கிறார்கள்.

’வாய் பேசும்’ என்று சொன்ன படியால் “கெட்டவர்கள்தான் வாயினால் ஒன்று சொல்வார்கள்; செயலில் வேறொன்றைச் செய்வார்கள். உன்னைப் போன்ற நல்லவர்கள் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா?” என்று பொருள் கொள்ளலாம்.

’நங்காய்’ என்று அழைப்பதால் நீ மிகவும் அழகானவள்; அதற்கேற்ப உன் பேச்சு இருக்க வேண்டாமா? ‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே’ என்று சொன்ன நீ இப்படிஇருக்கலாமா? என்று பொருள் கொள்ளலாம்.

”நீ பகவானைப் பெற்று பூர்ணையாயிருக்கிறாய்; நாங்களும் பெறவேண்டாமா? எழுந்து வா” என்று வேண்டுகிறார்கள்.

அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இவர்களுக்குச் சற்று சினம் வருகிறது. “இவ்வளவு  சொல்லியும் நீ எழவில்லையே;  பொழுது விடிந்த பின்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே! உனக்கு வெட்கமில்லையா? பூசணிக்குக் கூட சற்று சுரணை உண்டு. உனக்கு அது கூட இல்லையா? அல்லது நீ இருக்கும் ஊரில் பூசணி காயாதோ?” என்று கேட்டவர்கள் அடுத்து மேலும் பேசுகிறார்கள்.

”நாங்கள் எது சொன்னாலும் அதற்கெல்லாம் தக்கபடி நீ பதில் பேசிக்கொண்டிருக்கிறாய்.இந்த நா ஒன்றையே நீ செல்வமாக்க் கொண்டிருக்கிறாய் போலும். நல்ல நாவுடையாய்”

’நாவுடையாய்’ என்று அவளை அழைப்பதற்கு வேறொரு விளக்கமும் சொல்கிறார்கள்.

”இப்படி எல்லாம் என்னை ஏசிக் கொண்டு என்னிடம் எதற்கு வருகிறீர்கள்” என்று அவள் கேட்கிறாளாம்.

அதற்கு இவர்கள் “உன்னுடைடைய நாவின் வல்லமை அன்றோ எங்களை உன்னிடம் இழுக்கிறது. நீ எப்படிப் பேசினாலும் உன் சொற்கள் எங்கள் செவிக்கு இனிமையாகவன்றோ இருக்கின்றன. எப்படிப்பட்ட செயல்கள் செய்தாலும் நா வல்லமை கொண்டவரையன்றோ உலகம் கொண்டாடுகிறது” என்கிறார்கள்.

இப்போது உள்ளே இருப்பவள், “சரி நான் வந்து என்ன செய்ய வேண்டும்?” என்கிறாள்.

நாவுடையாய் என்பதற்கு அழகாகப் பாடக் கூடக்கூடியவள் என்றும் பொருள். எனவே உள்ளே இருப்பவளை நோக்கி, “நீ எழுந்து வந்து எங்களுடன் சேர்ந்து கிருஷ்ணனின் திருநாமங்களைப் பாட வேண்டும். இந்தக் கோஷ்டியே நீ சேர்ந்து பாடினால்தான் ஏற்றம் பெறும். எனவே சங்கையும் சக்கரத்தையும் ஏந்திய பங்கயக் கண்ணனைப் பாடுவோம் வா” என்கிறார்கள்.

சங்கு எம்பெருமானோடு அதர பந்தம் உடையது. ஆண்டாள் நாச்சியார் நாச்சியார் திருமொழியில் சங்கைக் குறித்துப் பத்துப் பாசுரங்கள் பாடி உள்ளார்.

”கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ

மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே”

என்பது குறிப்பிடத்தக்க பாசுரமாகும்.

சக்கரம் எம்பெருமான் கையை அலங்கரிப்பது. சூரிய அஸ்தமனத்திற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் என்ற அருச்சுனின் சபதம் நிறைவேற சூரியனையே மறைத்தது; ஆதிமூலமே என அழைத்த கஜேந்திர ஆழ்வாரைக் காத்தது.

அப்படிப்பட்ட சக்கரத்தைத் தன் வலக்கையிலும் சங்கினைத் தன் இடக்கையிலும் தரித்தவன்; தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவன். ”அப்படிப்பட்ட பெரியோனைப் பாடுவோம் வா” என்றழைக்கின்றனர்.

”கூராழி வெண் சங்கேந்திக் கொடியேன்பால்

வாராய் ஒருநாள் மண்ணுன் விண்ணும் மகிழவே” என்றும்

”வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்யமும் பல்லாண்டே” என்றும் ஆழ்வார் அருளிச் செய்திருப்பது நினைவு கூறத்தக்கது.

கண்ணன் பிறக்கும் போதே நான்கு திருக்கைகளுடன் சங்கு சக்கரங்களுடன் சிறைச்சாலையில் அவதரித்தான். ஆனால் ”தேவகியும் வசுதேவரும் கம்சன் உன் அவதாரத்தை அறியக் கூடாது” என்று வேண்ட அவற்றை அவன் மறைத்துக் கொண்டான். அப்படி இருக்க சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று கூறுவது எப்படிப் பொருந்தும் என ஐயம் எழலாம்.

ஆனால் கண்ணன் உகவாதார்க்கு இரு கைகளோடும் உகந்தவர்களுக்கு நான்கு கைகளோடும் எப்போதும் காட்சி அளிப்பான் என்பதற்கு பிரமாணங்கள் உள்ளதாகையால் இக்கூற்று பொருந்தும் எனலாம். மேலும்,

”நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய

கைத்தலங்கள் வந்து காணீரே” என்று அருளிச் செய்யும் அளவிற்கு யசோதைப் பிராட்டிக்கு அவன் சங்கு சக்கரங்களுடந்தான் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது. அருச்சுனன் கீதையில் கண்ணனிடம்,

”ஆயிரம் கைகளை உடையவனே! உலகையெல்லாம் உருவாக்க் கொண்டவனே! முன்னிருந்தபடியே நான்கு கைகளை உடைவனாய் மாறுக”

என்று வேண்டுவதையும் பிரமாணமாகக் கொள்ளலாம்.

சங்கு சக்கரங்களோடு சேர்த்து எம்பெருமானின் தாமரைக்கண்ணனையும் இவர்கள் அனுபவிக்கிறார்கள்.

”வெள்ளைச் சுரிசங்கொடாழியேந்தித் தாமரைக் கண்ணான்”

”சங்கு சக்கரங்களென்று கைகூப்பும்

தாமரைக் கண்ணென்றே தளரும்”

”சங்கொடு சக்கரம் கண்டுகந்தும்

தாமரைக் கண்களுக்கற்றுத் தளரும்” என்ற நம்மாழ்வாரின் அருளிச்செயல் போல இவர்கள் சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானை என்று அனுபவிக்கிறார்கள். மேலும் திருமாலின் உந்தித் தாமரையானது அவரின் கைகளில் உள்ள சக்கரத்தையும் சங்கினையும் பார்த்துத்தான் மலரும் குவியுமாம்; அதனால்தான் தாமரைக் கண்ணோடு சங்கு சக்கரங்களையும் சேர்த்துப் பாடுகிறார்கள்.

“ஆங்கு மலரும் குவியுமால் உந்திவாய்

ஓங்கு கமலத்தின் ஒண்போது—ஆங்கைத்

திகிரி சுடரென்னும் வெண்சங்கம் வானில்

பகருமதி என்றும் பார்த்து”       என்பது பாசுரம்

இப்படித் தாமரைக் கண்ணனைப் பாடும் ஆய்ப்பாடிப் பெண்களின் குரல் ஸ்ரீவைகுந்தத்தையும் எட்டிற்று என்று பாகவதம் கூறும்.

பயங்கரம் ஸ்ரீ அண்ணங்காச்சரியார் ஸ்வாமிகள் இப்பாசுரத்திற்கு பல்வேறு  வியாக்கியானங்கள் அருளி உள்ளார். சிலவற்றைப் பார்ப்போம்.

புழைக்கடைத் தோட்டம் இருவகைப்படும். ஒன்று பகிரங்கத் தோட்டம்; மற்றொன்று அந்தரங்கத் தோட்டம். வெளிப்படையான பொருளில் பகிரங்கத் தோட்டத்தில் சாதாரண புஷ்பங்களும் கொடிகளும் மரங்களும் இருக்கும். அந்தரங்கத் தோட்ட்த்தில் திருத்துழாய், செண்பகம், மல்லிகை, செங்கழுநீர்ப்பூ, இருவாட்சி போன்ற மலர்கள் இருக்கும்.

மறை பொருளாகப் பார்த்தால் பகிரங்கத் தோட்டம் என்பது பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்றவை அடங்கியதாகும். அந்தரங்கத் தோட்டம் என்பது திவ்யார்த்தங்களான திவ்யப் பிரபங்தங்கள் கொண்டதாகும்.

தங்கள் திருக்கோயில் என்பதை மூன்றாகப் பிரிக்கலாம்.

அதாவது தங்கள் இல் என்று பிரித்து திருமந்திரம் என்றும், திரு இல் என்று பிரித்து த்வ்யம் என்றும், கோ இல் என்று பிரித்து சரம ஸ்லோகம் என்றும் பொருள் கொள்ளலாம்.

இப்பாசுரத்தில் மூன்றுவிதமான ப்ரமாணங்கள் காட்டப்படுகின்றன. ’புள்ளும் சிலம்பின காண்’ என்பதால் சப்தமும், ’உங்கள் புழக்கடை’ என்பதால் அனுமானமும் ’சங்கிடுவான் போகின்றார்’ என்பதால் ப்ரயத்தட்சமும் காட்டப்படுகின்றன. இப்பாசுரம் திருப்பாணாழ்வரை எழுப்புவதாகக் கூறுவார்கள்.

நங்காய் என்பது சிறந்த குணமுடைய ஆழ்வாரைக் குறிக்கிறது.

அடியவர்களுக்குத் தாசனாய் இருக்க வேண்டும் என்று உபதேசம் செய்துவிட்டுத் திருப்பாணாழ்வார் சாரங்க முனிவர் தோள்மீது ஏறிக் கொண்டு வந்தார் என்பதால் நாணாதாய் என்று அழைக்கிறார் ஆண்டாள்.

நாவுடையாய்—- பத்துப் பாசுரங்களில் பரமன் பெருமை பேசிய சிறந்த நாவுடையவர் திருப்பாணாழ்வார்.

பங்கயக்கண்ணானை——- பகவானின் கண்ணழகில் பெரிதும் ஈடுபட்டவர் திருப்பாணாழ்வார்.

”கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப்

பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தவனவே”

என்பது அவர் பாசுரம்.

செங்கல் பொடிக் கூரை முனிவர்கள் அணிவதாகும். ஆழ்வாருக்கு சாரங்க முனிவருடன் தொடர்பு உண்டு.

எங்களை முன்னம் எழுப்புவான்—— இறைவன் கேட்டான்.

‘அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்’ என்று பாடியதால் நீர் பாகவதரைத் தோளில் தூக்கி வருவீர் என நினைத்தோம். ஆனால் நீ சாரங்கர் தோள்மீது ஏறி வந்தீர்? முன்னம் சொன்னது என்ன ஆயிற்று”

இவ்வாறு இப்பாசுரம் பலவிதங்களில் திருப்பாணாழ்வாருடன் பொருந்துகிறது எனலாம்.

—————————————————————————————————————————————————————————

Series Navigationஉறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழாசீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​5​
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *