பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 22 in the series 18 மே 2014

கோவை திருமூர்த்தி

சுப்ரபாரதிமணியன் தமிழகம் அறிந்த ஒரு மிகச்சிறந்த படைப்பாளி. பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். சிறுவர் கதைகளை எழுதி இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும்.

அண்மையில் எழுத்தாளர் எஸ்.வி.வேணுகோபால் ஒரு பிரபல பத்திரிக்கையில் சிறுவர் இலக்கியம் பற்றி எழுதியிருந்தார். அதில், சில நண்பர்கள் கேட்டார்களாம். “எப்படி சிறுவர்களின் / குழந்தைகளின் நிலைக்கு இறங்கி எழுத முடிகிறது” என்று, “உண்மையில் குழந்தைகள்தான் மேல்நிலையில் இருக்கின்றனர், நாம்தான் நம் சமூகத்தின் தாக்கத்தினால் கீழே இருக்கிறோம். அவர்கள் நிலைக்கு உயர்வது சாதாரண விசயம் அல்ல” என்று பதில் கூறினாராம்.

அனைவரும் எட்டவியலாத அந்த உயரத்தை சுப்ரபாரதிமணியன் வட்டார மொழியின் துணையோடு லாவகமாக எட்டி இருக்கிறார் என்பதை இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.

அரசிளங்குமரி படத்தில் எம்.ஜி.ஆர் ஆறு மாதக் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு “சின்னப் பயலே, சின்னப்பயலே சேதி கேளுடா” என்ற பட்டுக்கோட்டையின் பாடலைப் பாடுவார்.

சமூகவியல், இயக்கவியல், மார்க்சியம் ஆகியவற்றை அந்த ஆறுமாதக் குழந்தைக்குக் கூறுவார். குழந்தையிடம் கூறுவதுபோல் பெரியவர்களுக்குக் கூறும் இந்த உத்தியை சுப்ரபாரதிமணியன் வேறு கோணத்தில் கையாண்டு இருக்கிறார்.

இவரின் கதைகள் பெரியவர்கள் சிறுவர்களுக்குக் கூறுவதாக இல்லாமல் சிறுவர்கள் பெரியவர்களுக்குக் கூறி வழிநடத்துவதுபோல் அமைந்திருக்கின்றன. உண்மையில் சமகாலம் அப்படித்தான் உள்ளதா? ஆய்வுக்குரியது..

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கற்றவர்கள் வாழ்க்கைக்கான கல்வியைப் பெற்றிருந்தார்கள், (அதில் சில குறைபாடுகள் இருக்கலாம்) சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், இலக்கியம், மனிதநேயம், அரசியல் நேர்மை, உண்மை, நாணயம் பற்றிய ஏதோ ஒரு பார்வையும் சிந்தனையும் இருந்தது.

அண்மைக்காலங்களில் குறிப்பாக +2 போன்ற நிலைவந்தபோது அதிலும் குறிப்பாக உலகமயச்சூழலில், கல்வி, பிழைப்புக்கான கல்வியாக மாறிப்போனது. பழைய எஸ்எஸ்எல்சி காலத்தில் நண்பனாக இருந்தவன் +2வில் போட்டியாளனாக மாறிவிட்டான். சமூகம், இயற்கை, சுற்றுச்சூழல், இலக்கியம் சார்ந்த அறிவு அவசியம் அற்றதாகிவிட்டது.

நாம் வாழும் சமூகத்தை இயற்கையை, இலக்கியத்தை, அரசியலை, சுற்றுச்சூழலை, நேர்மையை, சகமனிதர்களை நேசித்து வந்த ஒரு மனிதன் தன் கண்முன்னே இளையசமுதாயம் எந்தவிதமான சமூக உணர்வும் இன்றி திரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆவேசம் அடைகிறது. அந்த ஆவேசம் விவேகம் நிறைந்த கதைகளாய் வடிகின்றன.ங

இந்தக் கதைகளில் மகன்கள் தந்தையர்களுக்குச் சொல்லுகின்ற செய்திகள், உண்மையில் நொய்யலை நதியாக அனுபவித்தவர்கள், சாக்கடையாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நதியின் தூய்மையைக் கூறும் ஏக்கங்கள்தாம்.

மரம் நடுவிழாத் தலைவர் அமைச்சரிடம் கூறினார், “இந்த இடம் மிகவும் ராசியான இடம், இங்கேயே மரம் நடுங்கள்”

“எப்படி ராசியானது என்கிறீர்கள்?”

“இதுவரை பதினேழு அமைச்சர்கள் இதே இடத்தில்தான் நட்டார்கள்”

நட்ட மரங்களை விட வெட்டப்பட்ட மரங்களே அதிகம்.

பாரம்பரிய நகரத்தை விடுங்கள். புதிய குடியிப்புகள் அமைக்கும்போது பூங்காவுக்கும், பொதுஇடமாகவும் 40% ஒதுக்கீடு செய்ய வேண்டுமே. மொத்தத்தில் நகரத்தின் பரப்பளவில் 40 சதம் பூங்காவாகவும் பொது இடமாகவும் மாறி இருக்கவேண்டிய அந்த இடங்கள் என்னவாயின என்ற கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது “பசுமைப்பூங்கா” என்ற கதை.

குடி, சூது, உயிர்க்கொலை ஆகிய சமூகக் கேடுகள் சங்கமிக்கும் இடமாக சேவல்கட்டு இருப்பதை “பந்தயம்” வெளிச்சம் போடுகிறது.

குடி சமூக அந்தஸ்த்தின் ஒரு குறியீடாகவம், சேவல்கட்டு அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு விளையாட்டாகவும் மாற்றம் பெற்றுவிட்ட இத்தருணத்தில் இந்தக் கதை குடிக்கும், சூதுக்கும், உயிர்க்கொலைக்கும் எதிரான சிந்தனை கொண்ட மனங்களை கொஞ்சம் இதமாகவும் வருடிச் செல்கிறது. செய்திகளையும் வரலாறுகளையும், அறிவுகளையும் இணைத்துச் செல்கின்றன இக்கதைகள்.

( பசுமைப் பூங்கா – சுப்ரபாரதிமணியனின் சிறுவர் கதைகள் ரூ 5/ வெளியீடு: கனவு, திருப்பூர் )

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *