படிக்கலாம் வாங்க.. 2 – நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

Spread the love

நூல் : இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி

ஆசிரியர்:      என் . மணி

 

” விசன் 2023 “ திட்டம் பற்றி இப்போதெல்லாம் அதிகம் பேசப்படுகிறது. கறும்பலகை பாடம் போய் எட்டாக்கனியாக இருந்ததெல்லாம் மடிக்கணியாக வந்து விட்டது. கிராமப்பள்ளிகளுக்கு மாணவர்கள் போகும் சிரமம் நீங்க மிதிவண்டிகள் வந்து விட்டன.முன்பு வகுப்பில் பத்துப் பேர் இருந்தால் ஒரு ஜாமெட்ரி பாக்ஸ் அபூர்வம். இப்போது புத்தகம், சீருடை இலவசம். மடிக்கணிணியில் உலகத்தையே பார்க்கும் லாவகம். 2023 தனி நபர் வருமானம் 4லட்சத்து 50 ஆயிரம் ஆக்கும் திட்டங்கள். 2020ல் இந்தியா வல்லரசாகி விட்டபின் இதெல்லாம் சகஜமோ என்னமோ. வெளிநாட்டினரின் முதலீடு கல்வித்துறையில். உயர்கல்விக்குப் போகிறவர்கள் 12% என இருக்கையில் 2% வெளிநாடு போகிற மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டி நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.” குலோபல் மெத்தாடலஜி “ என்று ஏகத்துக்கும்  பிரச்சாரம்.

 

மறுபுறம் கல்வி உரிமைச் சட்டம்   நடைமுறைப்படுத்தப்படலிருக்கும் சிக்கல்கள் அசர வைக்கின்றன. கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கே கல்வி உரிமை என்பதில் குழப்பம் இல்லை. அதே சமயம் பள்ளிகளில் இடை நின்றவர்கள் பற்றிய புள்ளி விபரக் கணக்குகளும் அவர்களின் நிஜக்கதைகளும் பள்ளி விட்டுத் துரத்தப்பட்டவர்கள் என்பதையே காட்டுகின்றன.பள்ளிகளிலேயே   ஆரம்பிக்கும் ஜாதீய வன்முறை, படிப்பு, ஒழுக்கம் எனபதை வலியுறுத்தி நடத்தப்படும் தண்டனை வன்முறைகள் குழந்தைகளை பள்ளிகளில் இருந்துத் துரத்துகின்றன. அந்த வகையில் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளைத் தேடிச் சென்று    அவர்களுக்கு கல்வி நிராகரிக்கப்பட்ட கதைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சார்ந்த மணி இந்நூலில் தொகுத்திருக்கிறார். அக்குழந்தைகளின் வார்த்தைகளிலேயே பதிவு செய்திருக்கிறார். ஒவ்வொரு குழந்தையின் குடும்பப் பின்னணி வறுமை நிலை பல கதைகள் சொல்கின்றன. டிசி இல்லாத காரணத்தால் பல குழந்தைகள் துரத்தப்படுகிறார்கள். ( டி சி தேவையில்லை என்பது வேறு விசயம். ) இரவுப்பள்ளிகளுக்கு ஆர்வமாய் செல்பவர்கள் குடும்பச் சூழல் காரணமாக  அதையும் கை விட வேண்டியிருக்கிறது.போதைக்கு பலியாகிப் போன அப்பாக்கள். குழந்தைகளை விட்டு வேறு புது உறவுகளுடன் தஞ்சமாகி விடும் அம்மாகள்,பகுதி நேர வேலை செய்து விட்டு  பள்ளிக்குச் செல்கிறவர்கள். கணக்கும் ஆங்கிலமும் அவர்களுள்  ஏற்படுத்தி விடும் மனத்தடைகள் ஏராளம்.இருப்பிடம், சுகாதாரம், ஆரோக்கியம் ஏதுமின்றி வளர்க்கப்ப்டும் குழந்தைகள்.,உழைத்து விட்டு வேலைக்குப் போகிற சிறார்கள் மத்தியில் புழங்கும் சேமிப்புப் பழக்கம், ஆசியர்களின் அணுகுமுறையே பலசமயங்களில் மாணவர்களை பள்ளிகளில் இருந்து துரத்துவது, நிலைமை சரியில்லை என்று குடும்பச்சூழல் பார்த்து பள்ளிகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும் குழந்தைகள்.,ஒரு குழந்தை இன்னும் பிறந்து விட்டால் முந்தைய குழந்தையின் கல்வி  தடைபடுவது, பள்ளியிலும் , வீட்டிலும் விளையாட்டை மறந்து விட்ட குழந்தைகள் என்ரு பல விதமான குழந்தைகளின் வாழ்க்கையை மணி இந்நூலில் சொல்கிறார். அவர்களின் இருப்பிடங்கள். வேலைக்குச் செல்லும் இடங்கள், இரவுப் பள்ளிகள் என்று அவர்களைத் தேடிச் சென்று  அவர்களின் கதைகளைக் கேட்டு பதிவு செய்திருகிறார்.  கல்வி உரிமை  மறுக்கப்பட்டவர்களின் கதைகளாக இவை நீள்கின்றன. இடைநிற்றல், வறுமையை புறம் தள்ளி விட்டு அவர்கள் கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் பற்றி தொடர்ந்து தனது இயக்க செயல்பாடுகளின் மூலம்  பணி புரிந்து வரும் மணி அவர்கள் தனது செயல்பாட்டின்  ஓர் அங்கமாக இந்நூலை  கள ஆய்வுப்பணிகளின் பதிவாய் வெளியிட்டிருக்கிறார். மணி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் . மாற்றுக்கல்விக்கான நுல்களின்  வாசிப்பு முகாமைத் தொடர்ந்து நடத்தி வருபவர்.. பொருளாதாரத் துறைப் பேராசிரியர்.கல்வி உரிமைச் சட்ட்த்தின்  அவசியம் பற்றித் தெரிந்து கொள்ள இன்னுமொரு கள ரீதியான பதிவாய் இந்நூல் விரிந்துள்ளது. ( 48 பக்கங்கள் ரூ 25: வெளியீடு புக்ஸ் பார் சில்ரன், 24332424 விற்பனை : பாரதி புத்தகாலயம், சென்னை )

 

 

 

– சுப்ரபாரதிமணியன் (  9486101003  )

Series Navigationநோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!கமலா இந்திரஜித் கதைகள்முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைநவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்மருமகளின் மர்மம் – 12