படைப்பும் பொறுப்பேற்பும்

லதா ராமகிருஷ்ணன்

 

சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை.

 

அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வ தன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ என்று கூறியது ஞாபகம் வருகிறது.

 

காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் சினிமாவில் கதாநாயகனாக வரும் காவல்துறை அதிகாரி தன்னந்தனியாகப் போய் வீரபராக்கிரமம் செய்து இருபதுபேர் அடங்கிய சமூக விரோதிகள் குழாமை நையப்புடைப்பதாய் திரும் பத் திரும்பக் காட்டப்படுகிறது. ஆனால், உண்மையில் ஒரு குழுவாகச் செயல்படுவதுதான் காவல்துறையின் வழக்கம். அப்படி யில்லாமல் வெள்ளித் திரையில் காட்டப்படும் காவல்துறை வீரநாயக பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு தனியாகப்போய் இன்னலில் மாட்டிக்கொண்டவர்கள், இன்னுயிர் நீத்தவர்கள் உண்டு என்று தனது பேட்டி யில் சுட்டியிருந்தார்.

 

சமூகப் பிரச்சினைகளை உண்மையான அக்கறையோடு அதற்கேற்ற கலாபூர்வமான நேர்த்தியோடு கையாண்ட தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

 

பெண்ணியம் பேசிக்கொண்டே பெண்ணை பண்டமாக பாவிக்கும் படங்கள்தான் அதிகம்.

 

மாற்று சினிமா என்பது வேறு பல மொழிகளில் குறிப்பிடத்தக்க தனியான இடத்தைத் தனக்கென நிறுவிக்கொண்டதைப்போல், ஒரு நீள்தொடர் முயற்சியாய் இருந்ததைப் போல தமிழில் இருந்ததில்லை; இன்றளவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழில் black and white பாத்திரங்களே பரவாயில்லை என்னுமளவுக்குத்தான் grey shade பாத்திரங்கள் (உ-ம் நாயகன்) காணக்கிடைத்துள்ளன.

 

இயக்குனர் பாரதிராஜா போன்றவர்கள் வீட்டுக்குள்ளேயே சோபாவில் அமர்ந்து கொண்டு கதாபாத்திரங்கள் பக்கம்பக்கமாக வசனம் பேசிவந்த வழக்கத்தை மாற்றி வெளிப்புறப் படப்பிடிப்பைக் கொண்டுவந்தார் என்பதைத் தாண்டி கலாபூர்வமான படம் எதையும் எடுத்துவிடவில்லை. மேலும், இவர்கள் காட்டிய கிராமங்களும் உண்மை யான கிராமங்களை, கிராம வாழ்க்கையை பிரதிபலிக்கவில்லை என்ற விமர்சனமும் அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் இருந்தது. கிராமத்து மக்களெல்லாம் வெள்ளந்தி மனிதர்கள் – பட்டணம் போனால் கெட்டுப்போய்விடுவார்கள் என்பதான சித்தரிப்பே அதிகம் இருந்தது.

 

படிப்பு, படித்தவர்கள் பற்றியெல்லாம் ஒரு எதிர்மறையான கருத்துகளையே இவர்களு டைய படங்கள் அதிகம் முன் வைத்தன. பாரதிராஜாவின் படமொன்றில் பட்டதாரி இளைஞனிடம் வேலைக்கான நேர்காணல் என்ற பெயரில் அபத்தமாகக் கேள்விகள் கேட்கப்படும். ஆத்திரமுறூம் நாயகன் தன் பட்டப்படிப்புச் சான்றிதழை யெல்லாம் கிழித்தெறிவான். இதேமாதி கே.பாலச்சந்தர் படத்திலும் உண்டு. ஒன்று, ஒரு வேலைக்கான நேர்காணல்கள் எல்லாமே இத்தனை அபத்தமாக நடத்தப்பட வழி யில்லை. இன்னொன்று, அப்படியே ஓரிடத்தில் அபத்தமாக கேள்வி கேட்டாலும் அதற்காக தன் படிப்புச் சான்றிதழ்களைக் கிழித்தெறிய வேண்டுமா? அது யாருக்கு நஷ்டம்?  அவர்களைப் படிக்கவைக்க அவர்களது வீட்டார் எத்தனை கஷ்டப்பட்டிருப் பார்கள். இப்படி ‘வெத்து ஆவேசக்காரர்களாக’ இளைய சமுதாயத்தினரைக் காட்டிக் காட்டியே, மாணவர்களென்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று இப்படி உருவேற்றியே திரையுலகவாதிகள் தங்கள் கஜானாக்களை நிரப்பிக்கொண்டார்கள்.

 

இன்று இந்த ‘ட்ரெண்ட்’ தொலைக்காட்சி மெகா தொடர்களில் நீரூற்றி வளர்க்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு தொடரில் டாக்டர் ஒருத்தி கொலை செய்வது உட்பட அனைத்துவிதமான கொடூரங்களையும் செய்கிறாள், செய்கிறாள், செய்துகொண்டே யிருக்கிறாள். ஒரு தொடரில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய கதாபாத்திரம் அத்தனை கேவலமான வில்லியாக வருகிறாள். இது போதாதென்று, எம்பிஏ படித்த பெண்ணை அவள் அண்ணன் படிக்காத ஒருவருக்குத் திருமணம் செய்துவிடுகிறார். இந்தப் பெண்ணை மாமியார் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்த திமிர் என்று குத்திக் கிழிக்கிறாள். 50 குடங்களுக்கு மேல் தண்ணீர் இழுக்கச் செய்கிறாள். மருமகளோ மாமியாரிடம் நல்ல பெயர் வாங்க நாயாய் உழைக்கிறாள். இந்தத் தொடர்களிலெல்லாம் மிக குரூரமான வசைபாடல்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இறுதியில் ’எல்லாம் உன் நன்மைக்காகத்தான் செய்தேன்’ என்ற ஒரே ‘அரைத்த மாவு’ வாசகத்தில் எல்லோரும் ஒன்றுசேர்ந்துவிடுவார்கள். ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று வள்ளுவர் சொன்னதைப் பற்றி யாருக்கு என்ன கவலை? வள்ளுவர் விழா கொண்டாட இந்த சேனல் களெல்லாம் தவறுவதேயில்லை.

 

அதேபோல்தான் சாதி மறுப்பு பேசுவதான பாவனையில் ஒரு படத்தின் இறுதிக் காட்சியில் காதாநாயகி தன் கழுத்திலிருந்த சிலுவையையும் கதாநாயகன் தன் பூணூலையும் கழட்டிப் போட்டு கைகோர்த்து ஓடிவிடுவதாகக் காட்டப்படும். அதற்கு எதிர்வினையாக பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அப்படிச் செய்வதன் அபத்தங்கள் சுட்டப்படும்.

 

மேடையில் ஒரு இளம் கதாநாயகி ஆங்கிலத்தில் பேசியதற்காக அங்கேயே அந்தப் பெண்ணைத் திட்டி அவமானப்படுத்திய பாரதிராஜா சமயம் கிடைக்கும்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசுவதைத் தவறாமல் செய்வார்.

 

தமிழ் என்று முழங்குவார்கள், உழவு என்று முழங்குவார்கள், பண்பாடு, பாரம்பரியம் என்று பாட்டும் வசனமுமாகக் கலக்குவார்கள். ஆனால் அவர்கள் வீட்டுப் பிள்ளை களையெல்லாம் அயல்நாட்டில் படிக்கவைத்துக்கொண்டிருப்பார்கள். ‘லேட்டஸ்ட் மாடர்ன் டிரஸ், ஃபேஸ் லிஃப்ட் சகிதம் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

 

‘மாஸ்டர்’ படம் பார்க்க நேர்ந்தபோது உண்மையிலேயே ‘நொந்து நூலாகிப்’ போனது என் மனம். இளங்குற்றவாளிகள் கஞ்சா கடத்தலுக்காகப் பயன்படுத்தப்படுவது பற்றிப் பேசும் படம். எத்தனை சமூகப்பிரக்ஞையோடு கையாளப்பட்டிருக்கவேண்டிய கதைக் கரு. ஆனால் வழக்கமான ‘கதாநாயகரின் வீரபராக்கிரம(இதில் அவ்வப்போது புட்டி யைத் திறந்து மதுவருந்துவதும் அடங்கும்) அடிதடி கொலைக்குத்துகளோடு சுபமாய் முடிந்துவிட்டது. இப்படித்தான் தமிழில் கதாநாயக வழிபாடே பிரதானமாக அமைகின்றன படங்கள்.

 

இந்தப் படங்களுக்கான ‘பிரமோஷன்’ வேலைகளை ஜரூராகப் பார்க்க ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொள்வார்கள். படைப்புச் சுதந்திரம் என்று முழங்குபவர்கள் அதுகுறித்த எதிர்-விமர்சனங்களை தர்க்கபூர்வமாக முன்வைக்கும் சுதந்திரமும் உண்டு என்பதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்?

 

திரையுலகவாதிகள் SELF-APPOINTED CHAMPIONS ஆக மற்ற துறையினரையெல்லாம் கேள்விக்குட்படுத்துவார்கள், அவர்களைப் பற்றிய பொதுப்படையான எதிர்மறைக் கருத்துகளை உருவாக்குவார்கள். மொந்தைகளாகச் சித்தரிப்பார்கள். ஆனால், தங்கள் துறை சார்ந்த அவலங்களை, அத்துமீறல்களை மறந்தும் பேசமாட்டார்கள்.

 

சினிமாத்துறை சார்ந்த ’அசிங்கங்களை’ சித்தரித்து, மேலோட்டமாக அல்லாமல் ஆழமாக அலசி படங்கள் வந்திருக்கின்றனவோ தமிழில்?

Series Navigationஎன் பயணத்தின் முடிவுசுமை