பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

author
0 minutes, 5 seconds Read
This entry is part 28 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)

காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

 

கே.எஸ்.சுதாகர்

 

தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்து வருகின்றது.

 

இதுவரை காலமும் நடந்த விழாக்களில் இலங்கையிலிருந்து தி.ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், தேவகெளரி, உடுவை.எஸ்.தில்லை நடராஜா, தெளிவத்தை ஜோசப், லலிதா.நடராஜா ஆகியோரும் டென்மார்க்கிலிருந்து வி. ஜீவகுமாரன், அமெரிக்காவிலிருந்து வேலுப்பிள்ளை.பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழகத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளி எஸ்.வைதீஸ்வரன், ஜேர்மனியிலிருந்து எழுத்தாளரும் ஓவியரும் ‘வெற்றிமணி’, ‘சிவத்தமிழ்’ இதழ்களின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இதுவரை நடந்த எழுத்தாளர் விழாக்களின்போது ஐந்து புத்தகங்களை வெளியிட்டிருந்தன. 20 எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி ‘உயிர்ப்பு’ என்ற சிறுகதைத்தொகுதியும், 42 கவிஞர்களின் கவிதைகளைத் தாங்கி ‘வானவில்’ என்ற கவிதைத் தொகுதியும், சிசு.நாகேந்திரனின் ‘பிறந்த மண்ணும் புகலிடமும்’ கட்டுரைத் தொகுதி, கே.எஸ்.சுதாகரின் ‘எங்கே போகிறோம்’ சிறுகதைத்தொகுதி, ஆவூரான் சந்திரனின் ‘ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுதி ஆகியவை சங்க வெளியீடாக வந்துள்ளன. தவிர ‘பூமராங்’ என்றொரு மலரையும் வெளியிட்டிருந்தார்கள். அத்துடன் 2001  இல் நடந்த முதலாவது எழுத்தாளர்விழாவின் போது ‘மல்லிகை அவுஸ்திரேலிய சிறப்புமலரும்’,  2004 ஆம்  ஆண்டு ‘ஞானம் அவுஸ்திரேலியா எழுத்தாளர்விழா சிறப்பிதழும்’, 2012 இல் ‘ஜீவநதி அவுஸ்திரேலியா சிறப்புமலர்‘வெளியிடப்பட்டன.

 

இவை தவிர ஓவியக்கண்காட்சி, ஓவியப்போட்டி, புத்தகக்கண்காட்சி, மறைந்த எழுத்தாளர்களின் ஒளிப்படக்கண்காட்சி, குறும்படங்கள், நாட்டுக்கூத்து, நடனம், நாடகம், வில்லிசை, சிறுவர் நாடகம்  என்பனவும் நடத்தப்ப்ட்டுள்ளன.

 

இம்முறை சிட்னியில் இந்த விழா 20.04.2013  அன்று, அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் தலைமையில் முழுநாள் நிகழ்வாக நடைபெற இருக்கின்றது. ‘தமிழ் இனி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் – ‘தமிழ் வளர்ச்சியில் இசையும் கலையும்’, ‘இணையமும் தமிழ் இசைவும்’, ‘தமிழ்க் கல்வியில் அடுத்த கட்டம்’ என்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது.

 

மற்றும் அறிமுகத்துடன் ‘தமிழ் இனி’ என்ற குறும் திரைப்படம், சங்க உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைத்தொகுதி ‘மறுவளம்’  நூல் வெளியீடு, சஞ்சிகை – நூல் அறிமுகங்கள், ‘சொல்ல நினைக்கிறேன்’ என்ற தலைப்பில் கவியரங்கம், கோகிலா மகேந்திரன் எழுதி தயாரிக்கும் நாடகம் என்பன இடம்பெறும்.

 

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)

 

காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை

Series Navigationஅக்னிப்பிரவேசம்-30 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்ஒரு காதல் குறிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *