பயணச்சுவை ! வில்லவன் கோதை 5 . மின்வாரியத்தின் முத்துக்கள் !

Spread the love

வில்லவன் கோதை

.
பகற்பொழுது முழுதும் சாய்ந்தபோது நாங்கள் விடுதிக்குள் பிரவேசித்தோம்.
இரவுக்கான உணவாக கோதுமையில் சுடப்பட்ட சப்பாத்தியும் மைதாவில் தயாரித்த பரோட்டாவும் விடுதியில் பரிமாறப்பட்டது. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்களையெல்லாம் அகற்றிவிட்டால் கிடைப்பது மைதா என்று சொல்லக்கேட்டுருக்கிறேன். இருந்தாலும் ஒருசுவைக்காக நண்பர் ஜெகநாதன் புரோட்டாவை விரும்பிக்கேட்டார். பெரும்பாலும் வீடுகளைவிட உணவகங்களில் சிறப்பாக செய்யப்படுவதும் பெரிதாக விற்பனை ஆவதுமான ஒரு உணவு வகை பரோட்டா.
ஆனால் என்ன காரணத்தினாலோ பரிமாறப்பட்ட பரோட்டா அத்தனை நயமாக இல்லாமல் போயிற்று. விரும்பினால் விலகிப் போவதுதானே வாழ்க்கை.
உணவுக்குப்பிறகு ஒரே அறையில் அத்தனைபேரும் ஆங்காங்கே அமர்ந்தோம். பலவேறு நினைவுகள் அலசப்பட்டன.எங்களோடு பணியாற்றி எதிர்பாராமல் மறைவுற்ற பொறியாளர் ஈரோடு துரைமாரப்பன் இளம்பொறியாளர் ச . அனந்தன் ஆகியோரை நினைவு கூர்ந்தோம். நெடுநாட்கள் தகவலே இல்லாமலிருந்த நண்பர் கோவை சாமிநாதனின் இருப்பிடம் அறிந்து மகிழ்வுற்றோம்.
இதற்கிடையில் முன்னைக்காட்டிலும் என் எடை கூடியிருப்பதை நண்பர் வேதசிரோன்மணி சுட்டிக்காட்டி எச்சரித்தார். எல்லாருக்குமே அந்த அபிப்பிராயம்தான். தவறாது தொடர்ந்து நடைப்பயிர்ச்சி மேற்கொள்ள வற்புறித்தினார்கள் .பெரும்பாலான படித்தமருத்துவர்கள் படிக்காத மருத்துவர்கள் எல்லாருமே இதைத்தான் சொல்கிறார்கள்.
இயக்கம் குறைந்த வயது முதிந்தவர்களுக்கு இதுபோன்ற நடைப்பயிற்சி தவிர்க்க இயலாததுதான். ஆனால் இன்றைய இளைஞர்கள் நோக்கங்கள் எதுவுமின்றி காலையிலும் மாலையிலும் வெருமனே நடப்பது எனக்கென்னவோ சுவாரஸ்யமற்று தெரிகிறது.
இயல்பாக வாழ்வியலோடு தொடர்புமிக்க நடைபழக்கத்தை எப்போதோ நழுவவிட்டு வாழ்வுக்கே ஆதாரமான மணித்துளிகளை செலவிட்டு செயற்கையாக உலகமே இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நவீன உலகில் இயல்பாக நிகழவேண்டிய ஒவ்வொன்றுக்கும் நாம் ஒவ்வொரு விலை கொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
எங்கள் உரையாடலில் உடல் நலம் , மனநலம் சார்ந்த பல்வேறு அனுபவங்கள் ஆலோசனைகள் பகிரப்பட்டன. வெளிநாட்டு பிரயாணங்களில் இயல்பாக ஏற்படும் சிக்கல்களை விரிவாக பேசினார் வி. மணி. கருப்பர்கள் தேசங்களுக்கெல்லாம் பயணித்த கொடூரங்களை விவரித்தார் தங்கவேலு. அங்கெல்லாம் கூட நம்ம ஊர் இட்லி தோசைகள் அவ்ளவாக கிடைக்காத கஷ்டங்கள் சொல்லப்பட்டன.
வெட்டவெளியான வானமண்டலத்தில் ஒரு விமானி எப்படி சரியான பாதையில் விமானங்களை இயக்குகிறார் என்பதை நண்பர் ஜெகநாதன் விளக்கினார். கண்ணுக்கு தெரியும் கண்ணாடி வழுவழுப்பான சாலைகளிலில் இங்கிருக்கும் ஆவடிக்குப்போய் வர நான்பட்ட சிரமம் ஏனோ சம்பந்தமின்றி நினைவுக்கு வந்தது. எல்லாம் பைப்பாஸ் சாலைகள் செய்த குழப்பம்தான்.
அடுத்து பணியிலிருந்த காலங்களில் பழகிய ஒரு சில மறக்கமுடியாத மனிதர்கள் அழைக்காமலேயே உரையாடலில் நுழைந்தனர். அதேபோல் வாழ்நாளில் மறந்து தொலைக்கவேண்டிய ஒரு சில மனிதர்களின் நினைவுகளையும் எங்களால் தவிர்க்க முடியவில்லை. அவர்களால் அரசுக்கோ அரசு ஊழியர்க்கோ எந்த நன்மையும் ஏற்படாமல் போனது ஒரு துரதிஷ்டம்.
எங்கள் பணிக்காலங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தலைவராயிருந்த ( TNEB CHAIRMAN ) திரு B.விஜயராகவன் I.A.S அவர்கள் ஓர் மறக்க முடியாத அநுபவம். அவர் திருத்தியமைத்த தமிழ்நாடு மின் வாரியம் அடுத்த ஐந்தாறு தலைவர்கள் காலங்களிலும் கர்வத்தோடு நிமிர்ந்து நின்றதை இங்கே நினைவு கூரவேண்டும். நெஞ்சில் உரமும் நேர்மைத்திறனும் மிக்கவராக திகழ்ந்தவர் திரு விஜயராகவன்.
இந்த உரையாடலில் மறைந்துபோன பொறியாளர் ஈரோடு டி வி சுப்ரமணியம் ( DE / GRT / ERODE ) அவர்கள் ஒருமனதாக எங்கள் அத்தனைபேர் நெஞ்சங்களில் இன்னும் நிலைத்திருப்பதை உணரமுடிந்தது. அரசுப்பணியிலும் ஊழியர் நலனிலும் அந்த மாமனிதரின் செயல்பாடுகள் இன்னொருவர் எட்ட முடியாதவை. அவர் பெற்றிருந்த தனிநபர் ஒழுக்கம் இன்றும் காணக்கிடைக்காதது.
தமிழ்நாடு மின்வாரியத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு அவர் பெற்றிருந்த பதவியினாலா அல்லது அவருடைய தனித்தன்மையினாலா என்ற ஐயம் வெகுநாட்களாகவே எங்களுக்கிருந்தது. வாரியத்தில் அவர் பெற்றிருந்த அபரிதமான செல்வாக்கு அவருடைய தனித்தன்மையால்தான் என்பது அடுத்தவர் அவர் பதவிக்கு வந்த நொடியே வெளிப்பட்டது.
நாங்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அந்நாளில் அடித்தளமிட்டவர் மதிப்பிற்குறிய டி வி எஸ் அவர்கள். அந்த அற்புதமான மனிதரை பற்றி ஒரு நூலே எழுதவேண்டுமென்ற எண்ணம் என்நினைவுகளில் இன்னும் ஊறிக்கிடக்கிறது.
நினைவுக்கு வருகிற இன்னொரு தலைமைப் பொறியாளர் ஓய்வு பெற்ற மதிப்பிற்குறிய திரு எஸ் கே ராமசுப்ரமணியன் அவர்கள். திரையுலகின் இசைமேதை டி எம் சவுந்தர்ராஜனின் உறவுக்காரர் இவர். இவர்களோடெல்லாம் பணி செய்கிற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்த பேறு. இவர்களைப்போன்ற போற்றத்தக்க வேறுசில பொறியாளர்களும் திறன்மிக்க ஊழியர்களும் எங்கள் காலங்களில் உண்டு. வாய்ப்பு வரும்போது சொல்கிறேன்.
தமிழ்நாடு மின் வாரியம் தமிழக அரசின் மிகப்பெரிய சொத்து என்று அறுபத்தியேழில் பேறறிஞர் அண்ணா பதவியேற்றபோது சொன்னது நினைவுக்கு வருகிறது. அந்த மிகப்பெரிய சொத்து இன்று கூறுகூறாக பாகப்பிரிவினைகள் செய்யப்பெற்று கடனோடு போராடிக்கொண்டிருப்பது துரதிஷ்டம்.
( அடுத்த வாரம் மறுபடியும் பார்க்கலாம் ! )

Series Navigation