பயனுள்ள பொருள்

மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் அடிக்கடி அரை நிர்வாணப் பக்கிரி என்ற வார்த்தை அடிப்பட்டுக கொண்டிருந்தது. அப்பப்ப! அவரது தொனியின் தோரணையில் தான் எவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது. யாரைப் பற்றி அவர் அப்படிப் பேசுகிறார்? அதே கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திய நாட்டுப் பிதா அண்ணல் காந்தி மகானைப் பற்றித்தான் அவர் அப்படி அவதூறு பேசிக் கொண்டு வந்தார்.

1931-ம் ஆண்டு இந்தியச் சுதந்திரம் பற்றிப் பேச்சு வார்த்தைகள் நடத்த வட்டமேஜை மாநாடு கூட்டப் பெற்றது. அதில் கலந்து கொள்ள அண்ணலவர்கள் இங்கிலாந்து சென்றார். இடுப்பில் முழத் துண்டு மட்டுமே உடுத்தியிருந்த அண்ணலவர்களை வெள்ளைக்காரர்கள் எல்லோரும் விநோதமாய்ப் பார்த்தார்கள். உலகப் புகழ் பெற்ற சர்ச்சில் அவரை அரை நிர்வாணப் பக்கிரி என்றார்.

அரசரைச் சந்தித்துப் பேசவேண்டுமென்றால் கண்ணியமான உடுப்போடு தான் வர வேண்டும் என்று பல வெள்ளைக்காரப் பிரமுகர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், அண்ணலவர்கள், “இந்திய மக்களின் இல்லாமையைப் பிரதிபலிக்கவே இவ்வாடை உடுத்துள்ளேன். அரசரை வேண்டுமானால் பார்க்காமல் திரும்பத் தயார். ஆனால் ஆடையை மாற்றிக் கொள்ள முடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.

இங்கிலாந்தில் படித்துப் பாரிஸ்டர் பட்டம் பெற்ற அண்ணலவர்கள் கோட்டும் சூட்டுமாக வெள்ளைக்கார பாணியில் அல்லவா காட்சியளிக்க வேண்டும்! ஆனால் ஏன் அரை நிர்வாணப் பக்கிரி ஆனார்?

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழிலை முடித்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்து அரசியலில் தன்னை அர்பணித்துக் கொண்ட போது, நாடு முழுவதும் சுற்றிய அண்ணலவர்கள் தமிழ் நாட்டுக்கும் வந்தார். மதுரை மாவட்டத்தில் கிராம மக்கள் எப்படி அரைத் துண்டும் அரை வயிற்றுக் கஞ்சியுமாய் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை நேருக்கு நேர் கண்ட போது, “எனக்கு எதற்கு கோட்டும் சூட்டும்? இனிமேல் நானும் இவர்களைப் போலவே காட்சியளிப்பேன்!” என்ற உறுதி பூண்டு அதைச் செயலிலும் காட்டினார். அந்த உறுதியை அரசரைப் பார்ப்பதற்காக மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?

கடைசியில் அண்ணலவர்கள் அரை நிர்வாணப் பக்கிரியாகவே அரசரைச் சந்தித்துப் பேசினார். ஆனால் பேச்சு வார்த்தைகள் பலன் தரவில்லை. வெள்ளைக்காரர்களுக்கு மிகவும் திருப்தி! இருந்தாலும் அரைத் துண்டோடு அரசரைச் சந்தித்துவிட்டாரே என்று அவர் மேல் கடும் வெறுப்பு.
இதன் பிறகு அண்ணலவர்கள் இந்தியா திரும்பக் கப்பல் ஏறினார். இந்தச் சூழ்நிலையில் தான் முன் சொன்னதுபோல் வெள்ளைக்காரர் அண்ணவலர்களைப் பற்றி அவதூறாகப் பேசிக் கொண்டு வந்தார்.

கப்பல் அலெக்ஸாண்டிரியா விட்டுப் புறப்பட்ட பின்பு ஒரு நாள் அந்த வெள்ளைக்காரர் அண்ணலவர்களை அவரது அறைக்கே சென்று சந்தித்தார். புன்முறுவலோடு வரவேற்புக் கூறிய அண்ணலவர்கள், “வந்த காரியம் என்னவோ?” என்று கேட்க, “ஒன்றுமில்லை! உங்களைப் பற்றி நான் ஒரு கவிதை எழுதியுள்ளேன்! அது பற்றி உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன்!” என்றவாறு, அழகாக அடுக்கப்பட்டு ஒரு மூலையில் குண்டூசியால் குத்தப் பெற்றிருந்த காகிதக் கற்றை ஒன்றை அண்ணலவர்களிடம் கொடுத்தார் வெள்ளைக்காரர்.

“நன்றி!” என்றவாறு அதை வாங்கிக் கொண்ட அண்ணலவர்கள் அமைதியாப் படிக்கலுற்றார். அழகான ஆங்கிலக் கவிதைதான். ஆனால்.. வெறுப்பென்னும் நஞ்சை வரிக்கு வரி உருக்கி வார்த்திருந்தார் வெள்ளைக்காரர். கன்னாபின்னாவென்று அண்ணலவர்களுக்குச் சரியான அர்ச்சனை. “பரதேசிப் பக்கிரிக்குப் பயந்தா சூரியனே அஸ்மதிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுத்துவிடப் போகிறது?” என்பது போன்ற கடுமையான விமர்சனங்கள்.

புன்முறுவல் மாறாத முகத்துடன் அனைத்தையும் படித்து முடித்த அண்ணலவர்கள் முடிவில், “உங்கள் பொன்னான நேரத்தைப் பயன்படுத்தி என்னைப் பற்றி வர்ணித்துள்ளீர்கள்! அதற்காக நன்றி!” என்றார். கோபமான பதிலை எதிர் பாhத்து வந்த வெள்ளைக்காரருக்கு அமைதியான பதிலைக் கேட்க எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு, “உங்களுக்குப் பயனுள்ள பகுதி ஏதேனும் இருந்ததா?” என்று கேட்டார்.

“பயனுள்ள பகுதிதானே! ஒன்றே ஒன்று மட்டும் என் கண்ணில் பட்டது!” என்று பதிலளித்தார் அண்ணலவர்கள்.

“அப்படியா? அது என்ன என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று ஆவலை அடக்கமுடியாதவராகக் கேட்டார் வெள்ளைக்காரர்.

“ஓ! தாராளமாகத் தெரிந்து கொள்ளலாமே!” என்றவாறு காகிதக் கற்றையின் மூலையில் குத்தப்பெற்றிருந்த குண்டூசியைப் பிரித்து எடுத்து, “இதோ.. இந்தக் குண்டூசி தான் பயனுள்ள பொருள்!” என்று அமைதியாகக் காட்டினார் அண்ணலவர்கள்.

பயனில்லாத காகிதக் கற்றை வெள்ளைக்காரரின் கண் முன்னாலேயே குப்பைத தொட்டிக்குள் சென்றது.

Series Navigationமூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)