பரகாலநாயகியும் தாயாரும்

Spread the love

           

                        பரகாலநாயகி ஒருநாள் தோழியுடன் பூக்கொய்யப் புறப்பட்டாள். இதையறிந்த பெருமான் வேட்டை யாடுபவர் போல அங்கு வந்தார்.

             மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ

          மகரம் சேர் குழை இருபாடு இலங்கியாட

          எய்வண்ண வெஞ்சிலையே துணையாக

                [திருநெடுந்தாண்டகம் 21] 2072

பரகாலநாயகி முன் நின்றார் கை வண்ணம் தாமரை; வாய் கமலம், கண்ணிணையும் அரவிந்தம்; அடியும் அஃதே! அவ்  வண்ணத்தவர் நிலைமை கண்டு மயங்குகிறாள். பரகால நாயகி.

தோழி, குறிப்பறிந்து விலகிச்செல்கிறாள்

                            பின்னர் தோழியிடம், பரகால நாயகி,”

             செய் வளவில் என் மனமும் கண்ணும் ஓடி

             எம்பெருமான் திருவடிக் கீழணைய, இப்பால்

             கைவளையும் மேகலையும் காணேன்; கண்டேன்

             மகரக் குழையிரண்டும் நான்கு தோளும்!

                   [திருநெடுந்தாண்டகம் 22] 2073

தோழீ! அவர் வந்து நின்ற அளவில் என் கண்ணும் மனமும் என்னை விட்டு ஓடிச்சென்று அப்பெருமான் அடிகளில் பொருந் தின.  அவ்வளவுதான்; என் கைகளில் அணிந்திருந்த வளையல் களையும் என் மேகலையையும் காணவில்லை!

             உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து என்

          ஒளிவளையும் மாநிறமும் கொண்டான்

          ஓரு கையில் சங்கு ஒரு கை மற்றாழியேந்தி

          உலகுண்ட பெரு வாயன் இங்கே வந்து என்

          பொரு கயற்கண் நீரரும்பப் புலவி தந்து போயினார்.

                [திருநெடுந்தாண்டகம் 23] 2074

                         அவர் பிரிந்த போதே என் கைவளையல் களும் கையை விட்டு நழுவின என் கைக்கடங்காமல்! அவன் தான் கைக்கடங்காமல் போனான் என்றால் என் கைக் கடங்கின வளைகளும் அல்லவா அடங்காமல் போய்விட்டன! அவன் வந்து    கலந்ததால் நான் பெற்ற பேறு இது தானோ? என்று வினா எழுப்பு கிறாள். இது மட்டுமா?

           மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும்

                        கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்

         தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கு

                    மகரம் சேர் குழையும் காட்டி

         என் நலனும் என் நிறைவும் கொண்டு

                              என்னையாளும் கொண்டு

           பொன்னலர்ந்த நருஞ்செருந்திப் பொழிலினூடே

                                 போயினார்

                   [திருநெடுந்தாண்டகம் 25] 2076

என்று தோழியிடம் தன் அனுபவத்தைச் சொல்கிறாள். இதனால் அவளுக்கு ஆற்றாமையும் சோர்வும் ஏற்பட தன் நிலையை எடுத்துச் சொல்லி வரும்படி சில வண்டுகளைத் தூதாக விடுத்துப் பார்க்கலாம் என்று வண்டுகளை அழைக்கிறாள்.

         பூமருவி இனிதமர்ந்து பொழிலார்ந்த அறுகால

              சிறுவண்டே! தொழுதேன் உன்னை

                 அணியழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று

       நீ, மருவி அஞ்சாதே நின்று, ஓர் மாது

            நின் நயந்தாளென்று இறையே இயம்பிக்  காணே

                  வண்டே! நீயும் உன் பெடையும்

                   [திருநெடுந்தாண்டகம் 26] 2077

சேர்ந்து பூக்களிலுள்ள தேனைப் பருகுவது போல் நானும் என் தலைவனிடம் சேர நீ உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறாள். அடுத்ததாக நாரையைப் பார்க்கிறாள். உடனே இதையும் அனுப்பிப் பார்க்கலாமே என்று எண்ணி

              செங்கால மட நாராய்! இன்றே சென்று என்

            செங்கண்மாலுக்கு, என் காதல் துணைவர்க்கு

                உரைத்தியாகில் இதுவொப்பது

                           எமக்கின்பமில்லை நாளும்

            பைங்கான மீதொல்லாம் உளதேயாக பழனமீன்

               கவர்ந்துண்ணத் தருவன் தந்தால்

            இங்கேவந்து இனிதிருந்து உன் பெடையும் நீயும்

                   இரு நிலத்தில் இனிதின்பம் எய்தலாமே!

                    [திருநெடுந்தாண்டகம் 27] 2078

என்று ஆசை காட்டுகிறாள்.

                          பரகால நாயகி இப்படித் தவிப்பதை யும் புள்ளினங்களையும் வண்டையும் தூதுவிடத் துணிந்ததையும்

கண்ட அவள் தாயார் கட்டுவிச்சியிடம் குறி கேட்கிறாள்.

         பட்டுடுக்கும் அயர்த்திரங்கும் பாவை பேணாள்

             பனிநெடுங்கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள்

       எள் துணைப்போதும் என் குடங்காலில் இருக்ககில்லாள்

              எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்

       மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்

               மடமானை இது செய்தார் யார்?

                   [திருநெடுந்தாண்டகம் 11] 2062

         ”கட்டுவிச்சி, சொல்லென்னச் சொன்னாள், நங்காய்!

               கடல்வண்ணர் இது செய்தார் காப்பார் ஆரே!

                             2062

                            தன் மகளை இந்நோய் செய்தவன் யார் என்று கேட்ட தாயாருக்கு கட்டுவிச்சி சொன்னது அதிர்ச்சியைத் தந்தது. கடல் வண்ணனே காரணம் என்றால் யார்தான் காப்பாற்ற

முடியும் என்று திகைக்கிறாள் தாயார்.

                       பரகாலநாயகி, தான் வளர்த்த கிளிக்குப் பெருமானின் திருநாமத்தைச் சொல்லப் பயிற்றுவித்திருந்தாள்.

இப்பொழுதோ கண்ணீர் பெருக நிற்கிறாள் அடிக்கடி பெருமூச்சு விடுகிறாள். மயங்குகிறாள். பெருமானின் பல ஊர்களையும் பெயர் களையும் சொல்லிச் சொல்லிப் பிதற்றிக் கொண்டேயிருக்கிறாள்.

              சொல்லெடுத்துத் தன் கிளியைச் சொல்லேயென்று

               துணைமேல் துளி சோரச் சோர்கின்றாளே

                   [திருநெடுந்தாண்டகம் 13] 2064

                            தன் தலைவிபடும் பாட்டின் காரணத்தை

அறியாத கிளி இவள் முன்பு கற்பித்த திருநாமங்களைச் சொல்லத் தொடங்குகிறது. என் மகளோ கிளியை வணங்கி, “ எம்பெருமான் நாமம் சொன்ன உன்னை வளர்த்த பயனை அடைந்தேன்” என் கிறாள்! பின் வீணையை மீட்டி அவனுடைய திரு நாமங்களைப் பாடத் தொடங்கினாள். இதோடு நின்றாளா? அவன் உகந்தருளிய

திருத்தலங்களான திருக்குடந்தை, திருத்தண்கா, திருக்கோவலூர் முதலிய ஊர்களைப்பாடிக் கூத்தாடத்தொடங்கி விட்டாள்!

                                  இதைக் கண்டு பொறுக்காத தாயார்,

மகளே! இது நம் குலத்திற்குத் தகுந்ததோ? என்று கேட்க, மகளோ

திருநரையூரையும் பாடத் தொடங்கி விட்டாள்! தாயார் எவ் வளவோ சொல்லியும் பரகாலநாயகி கேட்காத நிலையில் மகளை, நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்று வினவ அவளோ திருவரங்கமெங்கே? என்றாள். உடனே ‘நீர்வண்ணன் திருநீர்மலைக்கே போவேன் என்கிறாள். அடக்கம் அற்றுப் போனால் இப்படித்தான் பிதற்றுவார்களோ? என்று அதிசயிக் கிறாள் தாயார்.

                   “பெரிய பிராட்டியார், அகலகில்லேன் என்று அப் பெருமானின் திருமார்பில் நித்யவாசம் பண்ணுவதைக் கண்ட பின்னும்

          அற்றாள், நிறையழிந்தாள் ஆவிக்கின்றாள்

                   அணியரங்கமாடுதுமோ! தோழீ?

                   [திருநெடுந்தாண்டகம்19] 2070

என்கிறாள். பெற்றவள் ’’என் பேச்சைக் கொஞ்சமும் கேட்பதே யில்லை’’ என்று பொருமுகிறாள்

                            இறுதியில் ஒருவாறு மனம் தேறி,

பெருமானின் திருநாமங்களையே இடைவிடாமல் நினைக்கவும் சொல்லவும் செய்யும் இப்பெண்ணை பெரும் பாக்கியம் உடைய வள் என்றே சொல்லலாம். வேறு என்ன சொல்ல?

            பாராளன், பாரிடந்து பாரை உண்டு பாருமிழ்ந்து

                   பாரளந்து, பாரையாண்ட

          பேராளன் பேரோதும் பெண்ணை, மண்மேல்

                [திருநெடுந்தாண்டகம் 20] 2071

                          பெருந்தவத்தாள் என்றல்லால் பேசலாமோ?

என்று மனச்சமாதனம் அடைகிறாள் தாயார்.

========================================================================

Series Navigationகவிதைகள்ஒப்பீடு ஏது?