பரிசுத்தம் போற்றப்படும்

கனவு திறவோன்

 

இங்கே

சிலுவையைச்சுமந்து

உதிரம் சிந்தி

தூங்கினால் தான்

பரிசுத்தம் மெச்சப்படும்.

 

எனக்கான சிலுவையை

நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

அப்பாவோ எனக்காக

மாப்பிள்ளைப் பார்த்துக்

கொண்டிருக்கிறார்.

கிடைத்ததும்

தட்சணையாய்க் கட்டிலும்

தந்து

என்னைப்

பலி தந்தால்

என் பரிசுத்தம்

நாட்டப்படும்

 

வெள்ளிக் காசுகளுக்காய்க்

காட்டித் தரும்

யூதாஸ் தரகர்களும்

கசப்பான காடியோடு

வரும் இனப் போராளிகளும்

என் சிலுவையைச் சிங்காரிப்பார்கள்.

 

யூத சிலுவையில்

ஆணிகள் அறையப்பட்டன.

நான் சுமந்து செல்லும்

கட்டிலில்

மலர்கள்

அலங்கரித்து

என்னை வீழ்த்துவார்கள்.

நானோ சொல்வேன்…

‘தாயே இனி இவன் தான் உன் மருமகன்’

 

இங்கே

சிலுவையைச் சுமந்து

உதிரம் சிந்தி

தூங்கினால் தான்

பரிசுத்தம் போற்றப்படும்.

 

– கனவு திறவோன்

 

Series Navigationதொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்“என்னால் முடியாது”