பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்

 

தலைவர்,

இலக்கியச் சோலை,

கூத்தப்பாக்கம்,

கடலூர் 607002

[டாக்டர் குமார. சிவா எழுதிய “திரிகூடராசப்பக் கவிராயர்—ஓர் இலக்கியப் போக்கு” எனும் நூலை முன் வைத்து]

சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை பேரிலக்கியங்களுக்கு நிகரான யாப்பமைதியும், இலக்கிய வளமும், கருத்தாழமும் கொண்டவை. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை சமயச் சார்பு நோக்கில் கடவுளர் பற்றி எழுதப்பட்டுள்ளன என்றாலும் அவற்றில் காழ்ப்புணர்ச்சி இல்லை எனலாம். இன்னும் கூடத் துணிந்து சொல்ல வேண்டுமாயின் சில சிற்றிலக்கியங்கள் அப்போது ஆண்ட குறுநில மன்னர்களைப் புகழ்வதற்காகத் தோன்றியவையாகக் கூட இருந்திருக்கலாம். இந்தச் சிற்றிலக்கியங்களின் வகைகள் எத்தனை என்பது பற்றிக் கூட பலவித கருத்துகள் உள்ளன. எப்படியாயினும் சிற்றிலக்கியங்கள் அக்கால மக்களின் உணவு, உடை கடவுள் நம்பிக்கை, மற்றும் சமூகப் பாக்க வழக்கங்கள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

உலா, கலம்பகம், பரணி, அந்தாதி ஆற்றுப்படை போன்ற சிற்றிலக்கியங்களிலிருந்து வேறுபடும் இலக்கியம் பள்ளு இலக்கியமாகும். அதுவும் இந்த பள்ளு என்பது நம்மோடு மிகவும் நெருக்கமாகப் பழகி வாழும் மக்களின் வாழ்வைக் காட்டுவதால் நாம் மிகவும் விரும்பும் இலக்கியமாகவும் மாறி இருக்கிறது.

சிற்றிலக்கியங்களிலேயே பள்ளும், குறவஞ்சியும்தான் வாசிக்க இலகுவானவை. மேலும் இதுவரை 35 பள்ளி இலக்கியப் பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை பதிப்பிக்கப்பட்டன என்பது தெரியவில்லை” என்று தம் சிற்றிலக்கியங்கள் நூலில் நாஞ்சில் நாடன் கூறுகிறார்.

தமிழர் வாழ்வு பாட்டோடு இரண்டறக் கலந்ததாகும். பிறந்தவுடன் தாலாட்டிலிருந்து தொடங்கும் பாட்டு இறக்கும்போது ஒப்பாரியில் முடிகிறது. இவை தவிர அதிகமாகப் பாடுபவர்கள் தொழிலாளர்கள். பாட்டில் அவர்கள் தங்கள் உழைப்பின் வலியை மறக்கிறார்கள். வண்டி ஓட்டும் போது, ஏற்றம் இறைக்கும்போது, களை எடுக்கும் போது, நாற்று நடும்போது, அறுவடையின் போது உழவர்கள் பாடுவது வழக்கம். இது உழத்திப் பாட்டு என்று வழங்கப் பட்டதை பன்னிரு பாட்டியல் நூலிலிருந்து சான்றுடன் குமார. பத்மநாபன் விளக்குகிறார்.

நூலாசிரியர் பள்ளு இலக்கியம் தோற்றம் கொண்ட காலமான 16,17, 18-ஆம் நூற்றாண்டுகளில் இருந்த சமூக அரசியல் ஊழ்நிலைகளை பல வேறு பள்ளு இலக்கிய நூல்களின் மூலம் நன்கு ஆராய்ந்துள்ளார். நூலாசிரியரின் உழைப்பு பாராட்டுக்குரியது.

”அப்போது குழப்பமான சூழல் இருந்தது. உழவைச் செய்த பள்ளர் பெரு மக்கள் சுரண்டலுக்கு ஆளாயினர். மேலும் அவர்கள் தம் தொழிலைச் செய்யாத நிலை இருந்ததால் கிராமங்களையும் நாட்டையும் விட்டுக் கிளம்பினார்கள்.” என்று அவர் துணிந்து எழுதுகிறார்.

மேலும் ஓர் இலக்கியம் யாருக்காக அல்லது யாரைப் பற்றி எழுதப்படுகிறதோ அவர்களைச் சென்றடைய வேண்டும். எளிதில் பள்ளர்களுக்குப் புரிய வேண்டும் என்பதால்தான் இந்தப் பள்ளு இலக்கியம் நாடகக் கூறுகள் நிறைந்ததாக உள்ளது.

பள்ளு இலக்கியம் இடம் குறித்தும் பாட்டுடைத் தலைவன் குறித்தும் பெயர் பெற்று வழங்கப் பட்டது. பள்ளு இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளை ஆராய்ந்த நூலாசிரியர் அவை காட்டும் சிற்றரசர்கள் குறுநில மன்னர்கள், அமைச்சர்கள் முதலானோரைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இராமநாதபுரச் சீமையின் முதலமைச்சராக இருந்த முத்திருளப்பப் பிள்ளையின் அருஞ்செயல்கள் பற்றி நிறைய குறிப்பிடுகிறார், அந்த முதலமைச்சர் நாட்டை 96 மாகாணங்களாகவும், 17 தாலுக்காக்களாகவும் பிரித்து வரி விதிக்க 11 விதமான நிலவரித் திட்டங்களைக் கையாண்டதையும் நூலில் நாம் அறிய முடிகிறது.

’பள்ளர்கள்’ ஊருக்குப் புறத்தே பள்ளமான நிலப்பகுதிகளில் வாழ்ந்ததால்தான் பள்ளர் எனும் பெயர் ஏற்பட்டது எனபது புதிய செய்தியாகும். அவர்களின் சமூக வாழ்வை நூலாசிரியர் நன்கு ஆய்ந்துள்ளார். பண்ணையாரிடம் அடிமையாகவே இருந்தார்கள். பள்ளர் குடிப் பெண்கள் அறிவுள்ளவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். பண்ணையாரிடம் முறையிடும் துணிவு பெற்றிருந்திருக்கிறார்கள். பள்ளர்கள் உழவுத் தொழிலின் எல்லாவிதமான நுட்பங்களையும் அறிந்தவர்கள். மேலும் ஆசிரியர் முடிவாக “பள்ளர்கள் இல்லையென்றால் ஆண்டவனும் இல்லை; ஆண்டையும் இல்லை” என்று தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பள்ளர்களின் சமயத்தை ஆய்வு செய்த நூலாசிரியர் சில முடிவுகளை முன் வைக்கிறார். அவர்கள் காலத்தில் கிறித்துவ சமயம் வேகமாகப் பரவத் தொடங்கியது. பள்ளர்களின் தொடக்க காலம் சிறு தெய்வ வழிபாட்டில் தான் இருந்தது. பிற்காலத்தில் அதில் சைவ வைணவ வழிபாடான பெருந்தெய்வ வழிபாடு இணைக்கப்பட்டது.

“பள்ளா—ஏழு வயதினிலே—உமக்கே மனையாட்டியதாக வந்தேன்” என்று பள்ளு இலக்கியம் கூறுவதிலிருந்து அவர்களில் குழந்தை மணம் இருந்ததும்,

“அந்தமுள்ள பள்ளனுக்வுமுகு வந்த நாளில் / சீதனங் கொடுத்த வர்ணச் சேலையும் பொன் மாலைகளும் / செம்பொன் இடையாபரணமும் ரொம்பவுமுண்டு” என்பதிலிருந்து மணம் புரியும்போது மணமகள் சீதனம் கொண்டு வரும் வழக்கம் இருந்ததையும் அறிய முடிகிறது.

‘குடும்பன் ஆசையால் / பரிசங் கொடுத்துச் சரடு வரிசையாய் எனைக் கட்டினான்’ என்பதிலிருந்து மணமகனும் பரிசுகொடுத்து மணம் புரிவது நடந்தது என்பது புரிகிறது. திருமணத்தின் போது தாலிகட்டும் வழக்கம் இருந்திருக்கிறது.

பள்ளர்கள் தம் வாழ்வில் சகுனங்களை நம்பினார்கள்; அவர்கள் மூலிகைகளைத் தெரிந்து வைத்திருந்தனர்; வாழ்வில் விரதம் இருந்தனர்; தெய்வ நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பனவற்றையெல்லாம் ஆசிரியர் சான்றுகளுடன் விளக்குவது போற்றற்குரியது.

ஆக மொத்தத்தில் இந்நூல் மூலம் நாம் பண்டைய கிராமத்தின் மண்வாசனையை அறிந்து பெருமை கொள்ள முடிகிறது என்று துணிந்து கூறலாம். நூலாசிரியரின் ஆய்வு நோக்கமும் ஆய்வின் முடிவுகளும் பாராட்டுக்குரியன.

-[திரிகூடராசப்பக்கவிராயர்—ஓர் இலக்கிய நோக்கு—ஆய்வு நூல்—ஆசிரியர்—டாக்டர் குமார. பத்மநாபன்- தாரிணி பதிப்பகம்—4ஏ, ரம்யா பிளாட்ஸ்—32/79, காந்தி நகர், 4 ஆவது பிரதான சாலை—அடையார்—சென்னை- 600 020—பேசி : 99401 20341]

Series Navigationதொடுவானம் 63. வினோதமான நேர்காணல்செங்கண் விழியாவோ