பவளவண்ணனும் பச்சைவண்ணனும்

                       

                                   

       ஒரே ஒரு பாசுரம் பெற்ற திருப்பவளவண்ணம் என்னும் திவ்யதேசம் காஞ்சிபுரத்தில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து சுமார் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

”வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்

                  மல்லையாய் மதிள்கச்சியூராய் பேராய்

            கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்

                  குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்

            பங்கத்தாய்  பாற்கடலாய் பாரின் மேலாய்

                  பணிவரையி னுச்சியாய் பவள வண்ணா

            எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி

                  ஏழையேன் இங்கனமே உழிதருகேனே   

                                          [திருநெடுந்தாண்டகம் 9]

  என்று திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்த பெருமை கொண்டது இத்திவ்யதேசமாகும்.

      ”கப்பல்கள் சிறந்த இரத்தினங்களைக் கொண்டுவந்து சேர்க்கும் கடற்கரையைக் கொண்டுள்ள திருக்கடல்மல்லையில் வாழ்பவனே! அழகான பெருமை மிக்க மதில்களை உடைய காஞ்சியில் உறைபவனே! திருப்பேர்நகரில் எழுந்தருளி இருப்பவனே! கொன்றைப் பூமாலையைத் தன் மார்பில் சூட்டிக்கொண்டு மலையரசன் மகளான பார்வதிதேவியைத் தன் இடப்பாகத்தில் கொண்ட சிவனைத் தன் திருமேனியிலொரு பாகமாகக் கொண்டவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவனே! எல்லாருக்கும் நன்மை செய்து அருள் பாலிப்பவனே! குளிர்ந்த திருமலையின் உச்சியில் உறைபவனே! பவளம் போன்ற வண்ணத்தில் திருமேனியை உடையவனே! எங்கே நீ புகுந்து விட்டாய்? எம்பெருமானே! அடியேன் உம்மைத் தேடி இவ்விதமாய் அலைகின்றேனே” என்பது இப்பாசுரத்தின் பொருளாகும்.     

காஞ்சிபுராணம் இத்திவ்ய தேசத்தின் பெருமையைப் பற்றிக் கூறி இருக்கிறது. ஒருமுறை பிரமதேவன் ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தேவியார் பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. இறுதியில் தேவியார் ஒரு பெரிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அந்த யாகத்தைக் கலைக்க ஏவி விட்டார். பிரமதேவன் யாகத்தைக் காத்துத் தருமாறு பெருமாளை வேண்டினார். திருமால் அந்த அசுரர் கூட்டத்தை நொடிப்பொழுதில் வதம் செய்தார். போர்க்களத்தில் அவர் உடலில் ரத்தம் பாய்ந்தது. குருதி தோய்ந்த அந்த உடலுடன் அப்படியே அவர் காட்சி அளித்தார். ரத்தத்தின் நிறமான பவள வண்ணத்துடன் அவர் அருளிச்  செய்ததால் அவருக்குப் பவளவண்னர் என்னும் திருநாமம் வழங்கப்படுகிறது.

     மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் மூலவர் காட்சி அளிக்கிறார். தாயார் தனிக்கோயில் நாச்சியாராகப் பவள வல்லி என்னும் திருநாமத்துடன் அருள் செய்கிறார். இங்கு இருக்கும் தீர்த்தம் சக்ர தீர்த்தம் என வழங்கப்படுகிறது. இங்கு ப்ரவான விமானம் உள்ளது. பிரம்மன், பார்வதி மற்றும் அஸ்வினிதேவதைகளுக்கு இத்திவ்யதேசத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.

      மேலும் எம்பெருமானின் நிறத்தினைக்கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசம் இது மட்டுமே. இக்கோயிலுக்கு நேர் எதிர்த்திசையில் மரகதவண்ணமான பச்சை வண்ணத்துடன் பெருமாள் எழுந்தருளி உள்ள ஒரு கோயில் உள்ளது. அது பெரிய கம்மாளர் தெருவில் அமைந்துள்ளது. அங்கும் நாம் சென்று சேவித்தால்தான் வண்ண வேறுபாட்டைச் சரியாக உணரலாம்.

     அங்கிருக்கும் பச்சைவண்ணர் ஆதிசேஷன் மீது அமர்ந்த திருக்கோலத்தில் அமைந்துள்ளார். வரும் பக்தர்கள் இருவரையும் சேவிப்பதையே மரபாகக் கொண்டுள்ளனர். இவ்விரண்டு கோயில்களுமே ஸ்ரீ கரலபாடி ஆழ்வாரய்யா சாரிட்டீஸ் என்னும் அறக்கட்டளையாரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கரலபாடி அழ்ழ்வாரய்யாவின் கனவில் எம்பெருமானே தோன்றி இக்கோயில்களைப் புனரமைக்கச் சொன்னதாக ஐதீகம்.

      பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தம் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் இப்பவளவண்ணனைப் பாடுகிறார். அதாவது பகவான் ஒவ்வொரு யுகத்திற்கும் மக்கள் எந்தெந்த குணங்கள் பெற்றிருப்பவரோ அதற்கேற்ப நிறங்கள் கொண்டு காட்சி அளிப்பாராம். கிரேதாயுகம் சத்துவ குணக்காலம். அப்பொழுது பெருமாள் பால்நிறமான வெண்மை நிறம் கொண்டிருந்தார். அடுத்த திரேதாயுகக் காலத்திலும், துவாபரயுகக் காலத்திலும், மக்கள் ரஜோ மற்றும் தமோ குணங்கள் கலந்தவராய் இருந்தனர். பெருமாளும் கருநீலமும், பச்சைவண்ணமும் கலந்து காட்சி அளித்தார். கலியுகமோ தமோகுணம் கொண்டதாகும். எனவே காளமேக நிறம் கொண்டாராம். இது அவரின் பாடல்:

”கண்டறிந்தும் கேட்டறிந்தும் தொட்டறிந்தும் காதலால்

            உண்டறிந்தும் மோந்தறிந்தும் முய்யேனே—பண்டைத்

            தவளவண்ணா கார்வண்ணா சாமவண்ணா கச்சிப்

            பவளவண்ணா நின் பொற்பாதம்

“கச்சிப்பதியில் எழுந்தருளி இருக்கும் பவள வண்ணனே! உன் திருவடிகளைக் கண்களால் கண்டுணர்ந்தும், பெருமைகளைக் காதால் கேட்டுணர்ந்தும், கையால் உன் திருவுருவைத் தொட்டுணர்ந்தும், உன் பெருமை பேசும் பாசுரங்களை நாவினால் சொல்லிச் சுவைத்து அறிந்தும், உன் மேனியின் மணத்தை முகர்ந்துணர்ந்தும் நான் இன்னும் ஈடேறவில்லயே! நீதானே கடந்த யுகங்களில் எல்லாம் வெண்ணிற வண்ணனாகவும், கருநிற வண்ணனாகவும், சாமநிற வண்ணனாகவும் அருளிச்செய்தாயல்லவா” என்று இப்பாடலின் பொருளாகும்.

    இப்படி பெருமாள் பச்சை வண்ணனாகவும், பவளவண்ணனாகவும் திருக்கச்சியம்பதியில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

Series Navigationவாழ்வின் மிச்சம்அந்தநாள் நினைவில் இல்லை…..