பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்

பாதல் சர்க்காருடைய மறைவுக்குப் பிறகு அவர் குறித்து வெளிப்படுத்தப்படும் பல்வேறு உணர்வுகள் பாதல் சர்க்காரின் பொருத்தப்பாடு இன்றைய சிக்கலான சமூக கலாச்சார சூழலில் எப்படி வைத்து மதிப்பிடப்படுகிறது என்பது குறித்த அடிப்படையான பல கேள்விகளை எழுப்புகின்றன. ஏற்கனவே பாதல் சர்க்காரின் நாடகப் பட்டறையில் பங்கேற்றவரும் நாடகச் செயல்பாட்டாளருமான அ.மங்கை பங்கேற்ற குழுக்களின் நிலைப்பாடுகள் பற்றி 1993ம் ஆண்டிலேயே தன்னுடைய கட்டுரையில் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். தன்னுடைய படைப்புச் செயல்பாடுகளை காலவோட்டத்தில் பொருத்திப் பார்த்துத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டேயிருக்கும் ஒரு கலைஞனின் மனநிலையே பாதல் சர்க்காருடையது. தன்னுடைய பிரசித்தி பெற்ற இருத்தலியல் தாக்கத்தில் விளைந்த ‘ஏவம் இந்திரஜித்’ நாடகத்தையே ஒரு மாறிய மனநிலையில் நிராகரித்தவர் அவர். தன்னுடைய ஆரம்ப கால மூன்றாம் அரங்க விளக்க நாடகங்களான மிச்சில்[ஊர்வலம்], போமா, சுகபாட்ய பாரதேர் இதிஹாஸ்[இன்பமயமான இந்திய வரலாறு] ஆகிய நாடகங்களில் வெளிப்படும் விமர்சனங்களும், வகைப்படுத்தல் களும் இன்றைய யதார்த்தத்தை விளக்கப் போதுமானவையாக இல்லை என்றே பிற்காலங்களில் அவர் கருதினார். கூர்மையும் உயிர்ப்பும் அற்ற செயல்பாடுகளை கண்மூடித்தனமாகத் தொடர்ந்துகொண்டிருப்பதைவிட ஒரு அர்த்தமுள்ள மௌனத் தையே அவர் தேர்வு செய்தார். வெறுமைக்கும், நிகழ்வின் அர்த்தமற்ற தன்மைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டி ருக்கிறது வாழ்க்கை என்று ஜெனேயின் நாடகத்தில் வரும் யேவர் பாத்திரம் கூறுகிறது.

கலைஞனின் செயல்பாடுகளின் தளங்கள் மாறிக்கொண்டி ருப்பது என்பது மிகவும் இயல்பானது. பாதல் சர்க்கார் தன்னுடைய பின்னாட்களில் நாடகங்கள் நிகழ்த்துதலைவிட நாடக வாசிப்பிலும் பயணத்திலும் உலகத் ஹ்டொடர்பு மொழி குறித்த தன்னுடைய ஆக்கங்களிலும் நேரத்தைச் செலவிட்டதை நாம் பார்க்கவேண்டும். மனிதனையும் சூழலையும் குறித்த மதிப்பீடுகள் மாற்றமடைந்துகொண்டுவருவதை அங்கீகரிக்கும் நிலையிலேயே இடதுசாரி சிந்தனை நியோ மார்க்சியம், எக்ஸிஸ்டென்ஷியலிஸம், போஸ்ட் மாடர்னிஸம் ஆகியவை களுடன் தன்னுடைய உரையாடல் தளங்களை விரிவுபடுத்திக் கொண்டது. மாற்றங்களை ஏற்காத அடிப்படைவாதம் பாசிஸத்துக்கும், அதிகார மேலாண்மைக்குமே வழிவகுக்கும் என்பதையே வங்காளத்தில் அடிப்படைவாத மார்க்சியத்தின் வீழ்ச்சி காட்டுகிறது. பாதல் சர்க்காரும் அந்த வீழ்ச்சியைத் தன் கண் முன்னாலேயே பார்த்து அதைப் பொறுக்கமாட்டாது உயிர் துறந்திருக்கலாம்.[தேர்தல் முடிவுகள் வெளியான 13.5.2011 அன்று]. தமிழ்நாட்டிலும் தன்னுடைய பொய்ம்மையான சொல்லாடல்கள் காலாவதி ஆகிப் போனதை கருணாநிதி உணரத் தவறியதே அவருடைய வீழ்ச்சிக்கான காரணங்களில் முக்கியமானது என்பதை நாம் அறிய முடியும்.

இன்று ஒரே கட்டமைப்பு, ஒட்டுமொத்த விடுதலை ஆகிய சொல்லாடல்கள் வழக்கொழிந்து போயிருப்பதையும், நுண் அரசியலுக்கான நிர்பந்தங்கள் பெருகியிருப்பதையும் உணர்ந்த நிலையிலேயே பாதல் சர்க்கார் தன்னுடைய செயல்பாடுகளை அதே நிலையில் தொடர மனமில்லாதவராக இருந்திருக்கிறார். ஆனால், மாறுதல் பற்றிய உணர்வின்றி தன்முனைப்புடன் உயிரற்ற சக்கைகளைத் தட்டையாக மறுபதிப்பு செய்துகொண் டிருப்பவர்களும், எல்லா சமரசங்களுடன் நிறுவனங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருப்பவர்களும், நிறுவனங்களாலேயே தமிழ்நாடகத்தை உய்விக்க முடியும் என்று அதன் போதகர்களாக செயல்படுபவர்களும், பிரதேச அரங்கங்கள் குறித்த எந்த ஈடுபாடும் இல்லாத ஆங்கிலச் சார்பு கொண்ட மேல்தட்டு ஆர்வலர்களும் பாதல் சர்க்காரை உரத்து உச்சரிப்பது ஒரு மிகப் பெரிய முரண். பாதல் சர்க்காருடைய நாடகங்களைப் போடுவது தான் அவருக்கான மரியாதை என்கிற நிலை இல்லை. தன்னிடம் பயிற்சி பெற்றவர்கள் மூன்றாம் அரங்க நாடகங்களைத் தான் போட வேண்டும் என்று பாதல் சர்க்கார் ஒருபோதும் விரும்பியதில்லை. உங்களுக்கான நாடகங்களை நீங்கள்தான் உருவாக்கவேண்டும் என்றே பாதல் சர்க்கார் பட்டறையின்போது கூறினார். அவருடைய பயிற்சிகளும் பொருள்களை சாராமல் உடலை நாடகத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழிமுறை களையே இலக்காகக் கொண்டிருந்தன. அலங்காரங்கள் அற்ற எளிமை அரங்கம், உறுதியான அரசியல் செயல்பாடு, வலிமையான சமூக உரையாடல் ஆகியவையே அவருடைய வலியுறுத்தல்களாக இருந்தன. ’பயிற்சி பெறுபவர்கள் இந்தச் செய்திகளை உள்வாங்கி தங்களுடைய நாடகச் செயல்பாடு களுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும், அதை அவர் நிர்பந்திக்கமுடியாது’ என்பதே பாதல் சர்க்காரின் பார்வையாக இருந்தது.

ஒரு உண்மையான ஈடுபாடும், படைப்புத் தன்மையும் கொண்டு கலைஞன் உருவாக்கிப்போகும் வடிவங்கள் ஒரு சமூகத்திற்குத் தொடர்ந்த உத்வேகம் வழங்கக்கூடியவையாக இருக்கின்றன. பாதல் சர்க்காருடன் மேற்கொண்ட உரையாடல்களின் மூலமாகவே மணிப்புரி நாடகக் கலைஞர் கன்யாலால் தன்னுடைய சூழலின் பிரத்யேகத் தன்மைக்கேற்ற அரங்க வடிவத்தையும் உத்தியையும் செயல்படுத்தினார். அவருடைய அணுகுமுறைகளால் உத்வேகம் பெற்றே வங்காளத்தின் பிரணாப் முகர்ஜி, மராட்டிய ஓஜஸ் சுனிதி ஆகிய நாடக செயல்பாட்டாளர்கள் ஒரு நெருக்கமான அரங்கச் சூழலில் சிறப்பான தனிநபர் நிகழ்வுகளை இந்தியாவெங்கும் நிகழ்த்திவருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அடக்குமுறைக் காவல் சட்டங்களுக்கு எதிராக உடலையே ஆயுதமாக முன்னிறுத்தும் நாடக உத்தியை மனித உரிமைப் போராளிகள் கையிலெடுத்துள்ளனர். பாதல் சர்க்காருடைய நாடகங்கள் தங்கள் களனை இன்று இழந்திருந்தாலும் மனித ஆற்றல்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் குறித்த அவரது ஆழ்ந்த நம்பிக்கை என்றும் உத்வேகம் அளிக்கக்கூடியது.

_ வெளி ரங்கராஜன்

Series Navigationகாமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு