பாரதியின் காதலி ?

 

Barathiyar & Chellamma

முருகபூபதி

 

 

மகா கவி     சுப்பிரமணிய     பாரதியாருக்கு     காதலி     இருந்தாளா?

கவிஞர்கள்     மென்மையான     இயல்புள்ளவர்கள்.     உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு     காதலி     இல்லையாயினும்    ஒருதலைப்பட்சமாகவேனும்  காதல்     இருந்திருக்கலாம்.

1882 இல்     டிசம்பர்   மாதம் 11 ஆம்   திகதி     எட்டயபுரத்தில்   சுப்பையா   என்ற   செல்லப்பெயரில்    பிறந்தவர்   1921 செப்டெம்பர்   12  ஆம் திகதி திருவல்லிக்கேணியில்   உலக மகாகவியாக     மறைந்தார்.

1897   இல்   தனது   பதினான்காவது   வயதில்     ஏழு   வயதுச்சிறுமி  செல்லம்மாவை     மணந்தார்.

சுமார்   39   வயதுகூட   நிறைவுறாத     வயதில் – அற்பாயுளில்     மறைந்தவர் – எட்டயபுரம்,     காசி,     மதுரை,   சென்னை,     புதுச்சேரி,     கடயம், திருவல்லிக்கேணி     என்று   தனது     குறைந்த   வயதிலேயே   ஊர்     ஊராக  அலைந்து     அலைந்து     வறுமையுடனும்     பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும்      எதிராகப்     போராடினார்.     இடையில்     கடலூரில்     கைதாகி     விளக்கமறியலிலும்     34   நாட்கள் தடுத்தும்வைக்கப்பட்டவர்.

அதனால்     அவருக்கு     காதலிக்க     நேரமில்லை    என்ற முடிவுக்கு   நாம்     வந்துவிடலாம்.

ஆனால்,       எட்டயபுரத்தில்     பால்யவயதில்     வயல்வெளிகள்,     நீரோடைகள்,      குளங்கள்     என   அலைந்து     திரிந்து     பறவைகளின் குரலில்   மனதை     பறிகொடுத்து     இயற்கையை   ரசித்தவாறு உல்லாசமாக   ஓடிவிளையாடியவேளையில்     அவருக்கும்     ஒரு தலைப்பட்சமான     காதல்     ஒருத்தி மீதிருந்ததாக   சில     ஆய்வாளர்கள் கருதினாலும்     ஊர்ஜிதப்படுத்த     முடியவில்லை.

பாரதியார்     காலை   வேளையில்     கொல்லைக்குச்சென்று     சிரமபரிகாரம் செய்துவிட்டு     நிர்வாணமாக     நின்று   சூரிய     நமஸ்காரம்     செய்வார் என்று     அவரது     பால்யகாலத்தோழர்     ஒருவர்     கூறிய     தகவல் பதிவாகியிருக்கிறது.

பாரதி   திரைப்படத்தை   எடுத்தவர்கள்   ( இத்திரைப்படத்திற்கு பின்னணியிலிருந்து     ஆலோசனை   வழங்கியவர்கள்     எழுத்தாளர்கள்  சுஜாதா     மற்றும்     ராஜம் கிருஷ்ணன்)     பாரதியின்   குறிப்பிட்ட   நிர்வாண கோலத்தை     பூடகமாகவே     படத்தில்     காண்பிக்கின்றார்கள்.

பாரதி – நிற்பதுவோ     நடப்பதுவோ   பாடல்     கட்சியின்     இறுதியில்     ஒரு நீர்வீழ்ச்சியில்   நீராடும்   பொழுது     அவரது     இடையிலிருக்கும்     ஆடை அவரையறியாமலேயே     கழன்று   நீரோடு       ஓடிவிடுகிறது.     (படத்தை மீண்டும்     ஒரு     தடவை     பாருங்கள்)

பாரதியின்   கண்ணம்மா       யார்?

நினையே ரதியென்று     நினைக்கிறேனடி….

காற்று     வெளியிடைக்   கண்ணம்மா     நின்றன்     காதலை யெண்ணிக்களிக்கின்றேன்.

திருவே     நினைக்காதல்     கொண்டேனே…

வீணையடி   நீ   எனக்கு   மேவும்   விரல்     நான்   உனக்கு…

முதலான     பாடல்களில்   பாரதியின்     காதல்     உணர்வை   நாம் காணலாம்.

அவற்றுள் –     உன்   கண்ணில்   நீர்     வழிந்தால்     என்     நெஞ்சில்     உதிரம் கொட்டுதடி     என்ற     வாக்கியம்     அதி உச்சம்.

பாரதி     படத்தில்   ஒரு   சிறுமி     கன்றுக்குட்டியுடன்     வருவாள்.   அவளை     மறைந்திருந்து     பார்க்கும்     சிறுவன்   பாரதி     அவளது     பாடலில் சொக்கிப்போவான்.

பாடல்:     மயில்போல   பொண்ணு     ஒண்ணு….கிளி போல   பேச்சு ஒண்ணு…

படத்தின்     இயக்குனர்     ஞானசேகரன்     பாரதியின்     இளைமைக்கால காதலை   பூடகமாகச்   சொன்னாரா?

எவரும்     எதிர்பாராத     நிலையில்     அந்தச்சிறுமியின்     நினைவோடு     சிறுமி செல்லம்மாவை     மணமேடையில்     திடீரென     முத்தமிட்டாரா?

எட்டயபுரம்     வீதிகளில்   மனைவி     செல்லம்மாவின்     தோளில் கைபோட்டும்     கைகோர்த்தும்     காதல்   உணர்வோடு     ஊர்பார்த்திருக்க அழைத்துச்சென்றாரா?

எனினும்   பாரதிக்கு     உலகம்     அறிந்த   ஒரு     காதலி   இருந்தாள்.

அவள்     பெயர்    தமிழ்.

         —.0—

 

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்