பாற்கடல்

குமரி எஸ். நீலகண்டன்

இப்பொதெல்லாம் பறவைகளின்

சப்தம் எப்போதும்

தெளிவாய் கேட்கின்றது.

சூரிய ஒளிகள் தடையின்றி

பூமியில் விழுகின்றன..

காற்று சுதந்திரமாய்

உலாவிற்று.

மலைப்பாம்பாய்

நெளிந்த நெடுஞ்சாலைகள்

நிம்மதியாய்

சப்தமின்றி தூங்கின.

தெரு நாய்கள்

வாலாட்ட மனிதர்களின்றி

அலைந்தன.

பூனைகள் கைக்குழந்தைகளாய்

அலறின.

ஊரே அடங்கிற்று.

அஞ்சி நடுங்கினர்

மனிதர்கள்

தன்னையும் தன்னை சுற்றி

இருப்பவர்களையும் கண்டு…

எல்லாவற்றிற்கும் அஞ்சினர்

காண்பவற்றையும்

காணாதவற்றையும் மனதில் கண்டு…

ஓடி ஒளிந்து கொண்டனர்

மனிதர்கள் உள்ளே உள்ளே…

அகமும் தெரியவில்லை

முகமும் தெரியவில்லை.

ஊகானிலிருந்து ஒரு அணுவினும்

சிறு துளி விஷம்

உலகத்தை சுத்தம் செய்ய

துள்ளிப் பாய்ந்தது.

அந்த விஷக் கடலில்

பள்ளி கொண்டு பார்க்கிறான்

எமதர்மன்.

punarthan@gmail.com

Series Navigationகரோனா வைரஸ் பற்றி என் மகள் உரையாடிய ஒளிப்படக் காட்சிதமிழின் சுழி