‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி

>>>
லிப்ஸ்டிக் அணிந்த பெண்மணி

>>>
ம.ந.ராமசாமிக்கும் எனக்குமான நட்பு பல பத்தாண்டுகள் கடந்தது. ஒருவகையில் பழம் திரைப்படங்களின் காதல் காட்சி போல என இதை, இந்த நட்பைச் சொல்லிவிடலாம். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் டமாலென்று அவனும் அவளும் மோதிக்கொண்டு சண்டைவெடிக்கும். பிறகு மெல்ல அவனைப் பார்க்க அவளுள் வெட்கம் பூசிய சந்தோஷம் வரும். ம.ந.ரா. எனக்குப் பரிச்சயம் ஆனபோது எனக்கு அவர்மீது பல கடுமையான விமரிசனங்கள் இருந்தன. சில இன்னும் இருக்கின்றன.
அவரது பெரும்பாலான கதைகள் எனக்கு சிவப்புச்சாயம் பூசிய லிப்ஸ்டிக் பெண்மணியை நினைவு படுத்துகின்றன. ‘அலிபாபாவும் 40 அரசியல்வாதிகளும்’ போன்ற கேவா கலர்த் திரைப்படங்களைப் போல அவர் எழுத்தில் எப்பவுமே ஒரு சிவப்புத் தீற்றல் பின்புலம், கான்வாஸ் இருக்கிறது. செம்மண் விளைச்சல்கள் ம.ந.ரா. கதைகள். அதில் ம.ந.ரா. பாணி என்று ஒன்று அமைந்திருக்கிறது. கதைக் கருவைக் கேட்ட மாத்திரத்தில் இது ம.ந.ரா. கதை தானே, என்று சொல்லிவிடக் கூடிய ஓர் அம்சம், முத்திரை அதில் நமக்கு வாய்க்கிறது.
அது, அந்த முத்திரை எனது எழுதுமுறையோடு ஒவ்வாதது. தேவையும் இல்லை தான்.
‘அக்பர் சாஸ்திரி’ என்று ஒரு கதை. ஆயுத பூஜை அன்று சாக்லேட்டுகளைப் படையலாகப் பரப்பி நைவேத்தியம் பண்ணி ஆராதனை காட்டும் ஒரு முஸ்லிமின் கதை. இதில் பிரசாதம் என்பது சாக்லேட், என்பது ம.ந.ரா. இழுக்கும் வம்பு, என்றால் அதில் முஸ்லிம் பூஜை செய்வது வன்முறை. யாராவது வந்து என்னுடன் சண்டை போடுங்களேன், என நெஞ்சை நிமிர்த்திக் காட்டும் WWF வம்பு.
அவர் எழுதவந்த தமது வசந்த காலத்தில் இந்த மோஸ்தர் கொஞ்சம் அதிகம். காரம் தூக்கலான ஆந்திரா சமையல். அக்கிரகாரத்துப் பெண் கற்பிழந்து வீடு திரும்பினால் அவள் அம்மாவோ, நார்மடிப் பாட்டியோ அவள் தலையில் ஒரு செம்பு ஜலம் ஊற்றி, எல்லாம் சரியாயிட்டதுடி, என தெம்பு சொல்லி வீட்டுக்குள் அழைத்துக்கொள்ளும் புரட்சி காலம். ஏன் அக்கிரகாரப் பெண் கற்பிழக்க வேண்டும் தெரியவில்லை. கிரகப் பிரவேச வைபவத்தன்று வாத்தியார் புண்ணியாக வசனம் செய்த செம்புத் தீர்த்தத்தை மாவிலையில் எடுத்து அறை அறையாக ப்ரோஷணம் பண்ணி, சுத்தி செய்வார். அந்தத் தாக்கம் இது. இன்னுஞ் சிலர் விலைமாதர்களுக்கு வக்காலத்து வாங்கித் திரிந்தார்கள். அவர்கள்காட்டும் கணிகையர் ஆக்ரோஷமாய் லட்சியம் பேசினார்கள். இவர்களுக்கு தண்டனை வழங்குகிறீர்கள், இவர்களை இப்படி ஆக்கிய சமுதாயத்துக்கு என்ன தண்டனை?… என எழுத்தாளர் பொங்கிய காலம். உங்களில் யார் தவறு செய்யாதவரோ, அவரே இவளை தண்டிக்கத் தகைமை கொண்டவர், என்பது பைபிள்.
சமுதாயம் தரங்கெட்டு தள்ளாடிக் கொண்டிருக்கையில் ம.ந.ரா. போன்ற மகான்கள் அவதாரம் எடுக்க நேர்ந்து விடுகிறது. எழுத என உட்கார்ந்தால் சாமி வந்தாப்போல ஒரு கிறுகிறுப்பும் கண் சிவப்பும் அவர்களை இயக்குகிறதோ என்னவோ. எனக்கு ம.ந.ரா.வைப் பத்திரிகைகளில் வாசித்ததை விட, அவரது முதல் சிறுகதைத் தொகுதியில் தான் பிடி, அறிமுகம் கிடைத்தது. தனித்தனியே அவ்வப்போது வெளியாகும் பத்திரிகைக் கதைகளில் ஒரு எழுத்தாளன் பல்லாக்கு பவனி வந்துவிடலாம். அவன் கதைகள் பலவும் ஒரே கூரையில் அடங்கும் போது தான் அவனை எடைபோட முடியும்.
அவரது முதல் சிறுகதைத் தொகுதி ‘வாழத் துடிப்பவர்கள்.’ தலைப்பே எனக்கு ஏனோ நிலத்தில் விழுந்த மீனை ஞாபகப்படுத்தி விட்டது. துக்க ஜீவிகளை அவரது பெருங்கருணை அள்ளியெடுத்து ஆதுரத்தோடு உச்சி மோந்தது. நான் அப்போது ‘நிஜம்’ என சிற்றிதழ் ஒன்று துவங்கினேன். ரெண்டே இதழ்கள் தாம் அது வெளியானது. அது ஏன் நின்றது? அது இந்த ராமாயணத்தின், ம.ந.ராமாயணத்தின் கிளைக் கதை. இப்போது வேணாம் அது.
‘நிஜம்’ இதழில் ‘வாழத் துடிப்பவர்கள்’ கதைகளை நான் கடுமையாய் விமரிசித்து மதிப்புரை தந்திருந்தேன். நானும் இந்த உலகத்துக்குப் புதுசு. எனக்கும் கையில் கம்பு கிடைத்தால் சும்மாவாச்சும் சுழற்றிப் பார்க்கிற ஆசை. பிரமைகள் இயக்குகிற வேளை எனக்கும் இருந்திருக்கலாம்.
பிற்பாடு வல்லிக்கண்ணனை நான் சந்திக்கிறேன். யாருக்கோ போஸ்ட் கார்டு எழுதிக் கொண்டிருந்தவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். ம.ந.ரா.வின் ‘வாழத் துடிப்பவர்கள்’ பற்றிய என் மதிப்புரையை அவர் வாசித்திருந்தார். ”எங்களுக்கெல்லாம்அவர் கதைகள் சரியாக இருப்பதாகத் தான் படுகிறது” என்றார். அதைப்பற்றி எனக்குதான் போஸ்டு கார்டு எழுதிக் கொண்டிருந்தாரோ என்னவோ.
இப்போது ஒரு யூகம் எனக்குக் கிடைத்தது. என்ன அது? இந்தக் கதைகளை வாசிப்பதில் எனக்கு ஒரு ‘தலைமுறைச் சிக்கல்’ இருக்கிறது. அப்படி என்றால் என்ன? இப்போதும் கூட சிவாஜி படம் தொலைக்காட்சியில் பார்த்தால் விக்கி விக்கி அழும் மகாத்மாக்கள் உளர். நமக்கு தான் அழுகை வர மாட்டேன் என்கிறது. நிறைய பாவப்பட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு அவலம் நேர்ந்து விடுகிறது. இதில் சக எழுத்தாளனாக நான் அவர்கள் சார்ந்து வருத்தப்படுகிறேன்.
என்ன அவலம் அது, ம.ந.ரா. இந்தத் தொகுப்பில் பதினெட்டு ஆண்டுகளில் தாம் எழுதிய கதைகளைத் தொகுத்திருந்தார். ராமரின் வனவாசத்துக்கும் பெரிய ராமாயணக் கதை இது. அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிக்கொணர அவர் இத்தனை காலம் காத்திருக்க, மெனக்கெட வேண்டியிருந்திருக்கிறது. முதல் தொகுப்பு என்கிற அளவில் தமக்கு வரவு சொல்லிய கதைகளை யெல்லாம் ஒன்று திரட்டி நெல்லிமூட்டையாய் இதில் கட்டியிருக்கிறார்.
எங்களுக்கு இல்லை இந்த அவலம். ஒரு வருடம், அல்லது அடுத்த வருடத்திலேயே எங்கள் கதைகள் நூல் வடிவம் பெற்றுவிடுகின்றன. தீபாவளி மெருகு குலையாத சட்டைகள் அவை. இவற்றுக்கான விமரிசனங்களையும் நாங்கள் கதை எழுதிய அதே வீர்யத்துடன் எதிர்கொள்ள வாய்த்து விடுகிறது. தாத்தா, மகன், பேரன், கொள்ளுப் பேரன் என அத்தனை பேரையும் ஒண்ணா உட்கார வைத்து எடுத்த குரூப் ஃபோட்டோ போல ஒரு சிறுகதைத் தொகுப்பு எங்களுக்கு ஆகாது. தனித் தனி ஆல்பங்கள் அவை.
குறிப்பாக இதில் ஒரு விஷயம் இருக்கிறது. நான் முதலில் எழுதிய விஷயங்களுக்கும், பத்து வருடத்தில் எழுதும் இப்போதைய விஷயத்துக்குமே எனக்குள்ளேயே கருத்து அளவில் மாற்றங்கள் உண்டு. வளர்ச்சியும் உண்டு. முன் சொன்ன விஷயங்களை மறுத்தும் நான் சிந்திக்க ஆரம்பிக்கிறது உண்டு. இப்படி காலத்தால் சிதறுண்ட கதைகளைச் சேர்க்கையில் ஒன்றுக்கொன்று நடையிலும், கருத்தளவிலும், சொல்முறையிலும், பார்க்கும் கோணத்திலுமே ஒட்டாமல் போகிற வாய்ப்பு உண்டு. கதைத் தொகுதி நவக்கிரக சந்நிதி போல ஆகிவிட வாய்ப்பு உண்டு. பதினெட்டு வருடமாக எடுத்த படம் எப்படி இருக்கும்? அதன் கதாநாயகி சில இடங்களில் குண்டாகவும், சில இடங்களில் ஒல்லியாயும் இருப்பாள்…
நான் வந்துபோனதை யிட்டு வலலிக்கண்ணன் ம.ந.ரா.வுக்கு போஸ்ட் கார்டு எழுதியிருக்கலாம்.
வல்லிக்கண்ணன் சொன்னது சரி. இந்த முற்போக்கு வட்டாரக் கதைகளை வாசிக்க அடிப்படையில் ஒரு வாசிப்புமுறை தேவைப்படுகிறது. வேறொரு வாழ்க்கைச் சூழலை அவர்கள் விவாதம் என முன் வைக்கிறார்கள். கிளர்த்திப் பரத்துகிறார்கள். ஜாதிக் கொடுமை என அவர்கள் அரிவாளும் முறுக்கு மீசையுமாய்க் கதைகள் சொல்கிற போது, அது எங்களுக்குப் புதிய விஷயமாய் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் ஜாதி பார்க்காத, பார்க்கத் தெரியாத ஒரு சமூகத்துப் பிரஜைகள். பள்ளியிலும் கல்லூரியிலும் எங்களுடன் வாசித்தவர்களின், பழகியவர்களின் ஜாதியே தெரியாமல் நாங்கள் அன்பும் நட்புமாய்ப் பழகினோம். வாத்தியாரைக் கிண்டல் அடிப்பதில், பட்டப்பேர் வைப்பதில் நாங்கள் அத்தனை ஒற்றுமை பாராட்டினோம்.
ம.ந.ரா. சொல்லும் சமூகக் கொடுமைகள் எங்களுக்குப் புதிதாய் இருந்தன. எங்களுக்கு அவை நாடக மிகை நவிற்சியாய்ப் பட்டன. இதைப்போலவே அவருக்கும் எங்கள் கதைகள் சுகப் பிரசவங்களாய் அலுப்பு தட்டியிருக்கலாம். சிசேரியன் கேசுகள் டாக்டருக்கு ஒளிவட்ட வாய்ப்பு அளிக்கின்றன. என் கதைகளை வாசித்துவிட்டு அவரும் காரசாரமாக எனக்கு எழுதினார். நானும் அவரை அத்தனை விமரிசனம் பண்ணிவிட்டு வேறு மாதிரியாய் அவர் எனக்கு எழுதுவார் என எதிர்பார்க்கவில்லை. என் கதைகள் பற்றி. என்னைப் பற்றிய அவர் விமரிசனம் ராமாயணத்தின் இன்னொரு கிளைக்கதை. இப்போது வேணாம்.
‘வாழத் துடிப்பவர்கள்’ பற்றிய என் புத்தக விமரிசனத்தை ம.ந.ரா. மௌனமாக எதிர்கொண்டார். பிறகு நிறைய நாங்கள் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். என் கதைகளை அவர் வாசித்தார். அவர் கதைகளை என்னுடன் பரிமாறிக் கொண்டார். ஒரு வேடிக்கை போல, இரண்டு சந்தர்ப்பங்களில் அவரது இரு கதைகளை, ”நீங்கள் இதை இப்படிச் சொல்லியிருக்கலாம், என் பாணி இது,” என நானும் அதே கருவை வைத்து கதை எழுதிக் காட்டினேன்.
‘சிறு வரலாறு – சிறுகதை அல்ல’ என ஒரு கதை. சினிமாவில் பெரிய வாய்ப்பு தேடிக்கொண்டிக்கும் உதிரி நடிகை ஒருத்திக்கு நடனம் சொல்லித் தரும் மாஸ்டர் பற்றிய கதை. மாஸ்டர் அவளது அண்ணனிடம் சம்பளம் என்று கேட்கிறபோது அவன், சம்பளமா? வேணா அவளை அனுபவிச்சிருங்க, என்பதாக கதையை அவர் முடிப்பார். இந்தக் கதையை நான் ‘ரசாபாசம்’ என எழுதி குங்குமம் இதழில் வெளியானது. அநத டான்ஸ் மாஸ்டர் வேலைக்கு பங்கம் வந்துவிடும் பயத்திலேயே பிரம்மச்சர்ய விரதத்தை வேறு வழியில்லாமல் காப்பாற்றி வந்தவன், என்கிற பாத்திர வார்ப்பு செய்திருந்தேன். இறுதியில் நிலைமை கட்டுமீறி அந்தப் பெண்ணே அவனுடன் நெருக்கமாய் வரும் சமயத்தில் அவள் அண்ணன் திடுமென்று கதவைத் திறந்து வீட்டினுள் பிரவேசிக்கிறான். ‘நீங்கதானா?’ என்றபடி திரும்ப கதவைச் சாத்திவிட்டுப் போய்விடுகிறான், என்கிறதாக என் கதை முடிந்தது.
ரெண்டாவது கதை சந்திரமதி. சன்டே இந்தியனில் ம.ந.ரா. எழுதியது. வீட்டில் மூத்தவன் பைத்தியமாகி, அடுத்தவளின் கல்யாணம் தடைப்பட்டுக் கொண்டே போகும். அப்பா இவன் இடைஞ்சலைப் பொறுக்க முடியாமல் ஒரு மீனவனிடம் பணம் கொடுத்து இவனைக் கடலில் தள்ளிவிட்டுவிடச் சொல்லி அனுப்புவார். கடற்கரையில் அவர் மீனவனுக்காகக் காத்திருக்கும் போது, வெகு நேரம் கழித்து கரையேறி வந்தது, மீனவன் அல்ல, அந்த பைத்தியம், என்கிறதாக ம.ந.ரா. கதை முடியும். என் கதை ‘மேளா’ கல்கியில் வந்திருந்தது. வடநாடு நோக்கிப் போகும் ரயிலேறி ஊர் தாண்டி பாஷை தெரியாத எதோ ஊரில் திருவிழாக் கூட்டத்தில் அவனை விட்டுவிட்டு அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தபோதுதான் அப்பா கவனிப்பார். அவர் பர்ஸ் திருடு போயிருக்கும். வீடு திரும்ப சல்லிக் காசு இல்லாத நிலையில் ரெண்டு நாள் மூணு நாள் திண்டாடி எப்படியோ ஊர் வந்து சேர்ந்து, அவர் தன் வீட்டுக் கதவைத் தட்டினால், வந்து திறந்தது அந்தப் பைத்தியம் – இது என் முடிவு.
இங்கே இரு விவரங்கள் சொல்லிவிடலாம். இவை ம.ந.ரா.வுடன் பேசி அவருக்குத் தெரிந்து நான் எழுதி அவருக்குக் காட்டிய கதைகள். இரண்டாவது, இவ்விரு கதைகளிலுமே ம.,ந.ரா.வின் கதைமுறுக்கம் காண்க் கிடைக்கிறது அல்லவா?
இன்னொரு விவரமும் சொல்லலாம். இஸட் பிளஸ் – குங்குமம் இதழில் நான் எழுதிய இன்னொரு கதை. மந்திரிமார்களின் பாதுகாப்புக்கு என மெய்க்காப்பாளனாக கையில் துப்பாக்கி ஏந்தி அவர்களுக்குப் பின்னால் நின்றபடி கூட்டத்தையே சந்தேகமாய் உற்று நோட்டம் பார்க்கிற ஒருவனின் கதை அது. அரசியல்வாதி மேடையில் சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும், அதைக் கேட்டு கூட்டமே ஹோவென்று சிரித்தாலும் அவன் அப்படியே இறுக்கமாய் முழு விரைப்பாய் நிற்பான். இந்த என் கதைக் கருவைக் கேட்டதும் ம.ந.ரா. இதன் கடைசிப் பகுதியை உடனே தொலைபேசி உரையாடலின் போது சொன்னார். கைதேர்ந்த ரௌடி அமைச்சராகி வருகிறான். ஏய் எனக்கா பாதுகாப்பு தர்றே நீயி? என்னை யார் என்ன செய்துவிட முடியும்?… எனப் பேசுகிறான். நான் கவனம் மிக்கவன் ஐயா. உங்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிப்பேன், என்று பாதுகாவலன் சொன்னபோது. கிழிச்சே, இந்தா இது உன் பர்ஸ் தானே? – என்று நீட்டுவதாக ம.ந.ரா. முடிவு உரைத்தார். இந்த முடிவை அப்படியே என் கதையில் நான் பயன்படுத்தியதையும் அறியத் தருகிறேன்.
ஒரு பயணம் என்றால், காலப்போக்கில் அதில் ரசனையும், நல்லனுபவங்களும், மகிழ்ச்சிகளும் கிடைக்கவே செய்யும். ‘வாழத் துடிப்பவர்கள்’ தொகுதியில் தான் ம.ந.ரா. எழுதிய ‘யன்மே மாதா’ கதையை வாசிக்க நேர்ந்தது. தமிழின் முக்கியமான கதைகளில் ஒன்றாக இன்றும் எல்லாரும் அதை நினைவுகூர்கிறார்கள். தன் தாய்க்கு திவசம் போடும் ஒருவன் அந்த மந்திரங்களின் அர்த்தம் கேட்டுக் கேட்டு மந்திரங்கள் சொல்லி வருகிறான். யன்மே மாதா, என அதில் ஒரு மநதிரம். என் தாய் ஒருவேளை எதாவது அசந்தர்ப்பத்தில் தன் பத்தினித்தன்மையை இழந்திருந்தாலும்… என வரும். அந்த மந்திரத்தை அவன் சொல்லாமல் மறுத்து விடுகிறான். மனிதன் காடுகளில் வாழ்ந்த காலத்தில் ஒருவேளை அது சரியான மந்திரமாய் இருக்கலாம், என் தாய் பத்தினி, என அவன் அந்த மந்திரத்தை மறுத்துவிடுகிற போது, சாஸ்திரிகள், நீ திவசம் பண்ணாமல் உன்னிடம் நான் தட்சிணை வாங்க என் மனம் இடம் தரவில்லை, என எழுந்து போகிறார். வெயிலில் காய்ந்த திருநீற்றுப் பட்டையாய் பளிச்சென அமைந்த கதை. பூடகம் இல்லை. ஒளிவு இல்லை மறைவு இல்லை. அதேசமயம் இதில் ஒரு சுடும் உண்மை இருந்தது. சாஸ்திரி பாத்திரத்தையும் பண்புடன் உயர்த்திப் பிடித்த பொறுப்பான எழுத்தாக இது எனக்குப் பட்டது.
ம.ந.ரா. கதைகள் ஒரு வாதத் தீவிரம் (அது தீவிர வாதம் அல்ல!) சார்ந்த சுழிப்புடன் இயங்குகிறதை அவர் விரும்புகிறார். எனது பல்வேறு திரட்டு நூல்களிலும் நான் அவரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். எனது ‘பரிவாரம்’ திரட்டில் அவரது ‘புழு’ கதை வெளிவந்தது. காலில் புண் ஆழப்பட்டு சதைக்குழி விழுந்த ஒருத்தனின் உடம்போடு புழு ஒன்று வளர ஆரம்பித்து அவனோடு உசாவ ஆரம்பித்த கதை. உலகக் கதைகளின் தரத்தில் இதை நன் நேர்த்தியுடன் அவர் செய்திருந்தார். …. நிசத்தில் இந்தக் கதையை அருவருப்பு தட்டாத சுவாரஸ்யத்துடன் எழுதியதே சவால்தான். சங்கீதக் கதைகளை நான் தொகுத்து ‘ஜுகல்பந்தி’ வெளியிட்டபோது, இசைக்கு மொழி அவசியம் இல்லை, என்கிறதாக விவாதம் கிளர்த்தும் ஒரு கதையைப் பங்களித்தார். மொழி வேண்டாம் என்பது அதிகபட்ச உரிமை கோரலாகவே இன்றும் நான் நினைக்கிறேன். என்றாலும் விவாதங்களை நானும் வரவேற்று அந்தக் கதையை வெளியிட்டேன்.
‘மொட்டு’ போன்ற அபூர்வமான கதைகளை அவர் தந்திருக்கிறார். இதயத்தில் கோளாறு வந்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள விருக்கிற ஒரு இளவயதுப் பெண்ணுக்கும், பக்கத்துவீட்டு வேலைகிடைக்காத இளைஞனுக்குமான சின்ன சிநேகம் பற்றிய கதை. உயிர் பிழைக்க மாட்டோம் என்கிற அவள் பயம். அறுவைச் சிகிச்சை சிறப்பாக முடிந்து அவள் வாழ்வில் நம்பிக்கைப் படுகிற போது அவனது சிநேகத்தை அவள் அலட்சிக்கிறாள். இதில் ம.ந.ரா.வின் முத்திரை என்ன என்றால், அந்த இளைஞன் அவளை சரியாகப் புரிந்து கொள்கிறான் என்பதே. இளமையும் மீதி வாழ்க்கையும் கனவுகளும் உள்ள அவள் தன்னை இன்னும் சிறகு விரித்துக் கொள்வதே முறை, என அவன் அவளைப் புரிந்துகொண்டு விலகுகிறான். இவ்வளவு ஞீளிளிவி ஙிகிசிரிகான விரிந்த மனதை எல்லா எழுத்தாளர்களிடமும் நாம் காணக் கிடைக்கிறதா என்ன?
ம.ந.ரா. இந்நாட்களில் என்னுடன் நெருக்கமாகி விட்டார். கடிதங்களில் நாங்கள் முட்டிமோதிக் கொண்டோம். என்றாலும் அவர் கதைகளின் முதல் வாசகனாக என்னை அவர் வரித்தது ஆச்சர்யம். எனது ‘படகுத்துறை’ சிறுகதைத் தொகுதியை நான் அவருக்கு சமர்ப்பணம் செய்தேன். அடுத்து அவரது புத்தகங்களை நான் வேறு வேறு பதிப்பகங்களுக்கு பரிந்துரை செய்தேன். உதயகண்ணனின் பதிப்புகளுக்கு நான் நெறியாள்கை செய்து தருகிறேன். அவ்வகையில் ம.ந.ரா. புத்தகங்களையும் நிறைய நான் சிந்தனைக் கட்டுக்கோப்பு சரிபார்த்திருக்கிறேன். நெறியாள்கை அற்புதமான பணி. எனக்கு அது பிடிக்கும். நெறியாள்கை என்றால் அடுத்தவர் கருத்தை வெட்டி வீழ்த்தி என் கருத்தளவில் அந்தப் படைப்பை உருமாற்றுவது அல்ல. அப்படிச் செய்திருந்தால் ம.ந.ரா.வின் அடையாளங்கள் காணாமல் போயிருக்கும். நெறியாள்கை அது அல்ல. அவரவர் படைப்பில் அவரவர் கருத்தை உக்கிரப்படுத்துவதும், அவரவர் பாணியை மெருகேற்றுவதும் ஆகும். என்னிடம் புத்தகங்கள் கேட்ட அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (அறிவுலகின் திறவுகோல்), நிவேதிதா (புதிய இலக்கு புதிய தடம்), மற்றும் நிவேதிதா புத்தகப் பூங்கா (வண்டினமே வருக) ஆகிய என் பதிப்பகங்களில் ம.ந.ரா. நூல்களும் வெளியாயின. எந்த எழுத்தாளனுக்குமே தொடர்ந்த வாய்ப்புகள், ஊக்கம் மிக அவசியம். என் யோசனைகளை ம.ந.ரா. கிட்டத்தட்ட ஆணையாகவே சிரமேற்கொண்டது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. அடிப்படையில் என்மீது அவர்கொண்ட நம்பிக்கையும் பரிவும் அதில் நான் கண்டேன்.
காடு என்கிற பாடுபொருளில் நான் எழுதச்சொல்லி அவர் செய்தளித்த நாவல் ‘மந்த்ர புஷ்பம்’. எத்தனை விதமான மரங்களை அவர் அதில் சொல்லி குணாம்சப் படுத்தியிருந்தார். வேத காலமும் குருகுலவாசக் கல்வியும் செறிந்த நாவல். இசை பற்றி அவர் நிறைய என்னுடன் பேசுவார். ‘நாதலயம்’ என ஓர் இசைக் கலைஞி பற்றி அவர் எழுதிய நாவல் அநேக இசைக் குறிப்புகள் கொண்டது. ‘நம்பிக்கை’ என ஓர் ஆத்திக நாத்திக முட்டுமோதல் குறுநாவல் தந்தார். அது இரண்டாம் பதிப்பாக ‘தூணிலும் இல்லை துரும்பிலும் இல்லை’ என வெளியானது. அந்த நூலுக்கு ‘மனிதலாயம்’ என்கிற முன்னுரை தந்திருக்கிறேன். கடவுள் நம்பிக்கை உள்ள இளைஞன் ஒருவன். பெரியவர் ஒருவர் தமது வாதங்களால் அவனது கடவுள் நம்பிக்கையைத் தகர்க்கிறார். ஆனால் ஒரு நம்பிக்கையை அப்புறப்படுத்துகையில் மனிதனுக்கு வெற்றிடம் வந்துவிடக் கூடாது, என்பதைப் பெரியவர் கவனிக்கத் தவறுகிறார். முன்னெப்போதும் காணாத இந்த அடுத்தகட்டத் தெளிவு ம.ந.ராவிடம் என்னைக் கவர்ந்தது. என்னை விமரிசக நிலையில் இருந்து, வாசக நிலைக்கு, சக நிலைக்கு, சகஜ நிலைக்கு இப்படியான அவரது படைப்புகள் கொணர்ந்து விடுகின்றன. அவரிடம் கூற விஷயங்கள் இருக்கின்றன. எனக்கும் அவரிடம் கேட்டுக்கொள்ள இருக்கிறது.
புரட்சித்தினவு, வம்பு சார்ந்த கதைவளாகத்தில் இருந்து மேல்தளத்துக்கு அவரது பயணம் வந்தடைந்திருப்பதாக நான் உணர்ந்த கணம் அது. ஜுகல்பந்தி சங்கீதக் கதைகளுக்கு அடுத்து நான் ‘அமிர்தம்’ என உணவு சார்ந்த கதைகளைத் திரட்டியபோது, ‘மந்திரம்’ என ஒரு கதை தந்தார். ஒரு மேல்சாதி இளைஞன் மெஸ்சில் சாப்பிடும்போது தினசரி சாப்பிடுமுன்னால், ஒரு மந்திரம் சொல்லி, இந்த உணவைத் தனக்கு அருளிய கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுச் சாப்பிடுவான். அதைப் பார்த்த வேறுசாதி இளைஞன் தானும் மந்திரம்போல, இதை விளைவித்துத் தந்த குடியானவன், இதை தன் வாய்வரை கொணர்ந்த வணிகர் என நன்றி சொலலி உணவுகொள்வதாக ம.ந.ரா. கதைத்தார். பழைய வம்பின் சுருதிப் பிசிர் இதில் இல்லை. கையாளலில் நல்ல நிதானம் கைவந்த கதை இது.
அவரது முதல் தொகுதி ‘வாழத் துடிப்பவர்கள்’ வெளியானபோதே அவர் பதவி ஓய்வு கண்டிருந்தார். தனிமையான பெரும் பொழுதுகள் தன்மேல் கவிந்தாப் போல அவர் மூச்சுத் தவித்துக் கொண்டிருந்தார் போல. இக் காலகட்டத்தில் என் அறிமுகம், அது எத்தனை கடும் அல்லது சுடும் விமரிசனங்களுடன் என்றாலும் அவருக்கு வேண்டியிருந்ததோ எனனவோ? என்னதான் வலி என்று குழந்தை அழுதாலும், கவனிப்பார் இல்லாவிட்டால் அழவே அதற்கு போரடித்து விடும், அல்லவா? அந்த சமயம் எனக்கு எழுத்து உலகில் புதிய நட்புகள் வளர்ந்துவந்த காலம். நான் நிறைய நட்புக் கடிதங்கள் எழுதினேன். சில அ-நட்புக் கடிதங்களும். ஓர் கிறித்தவ எழுத்தாளர் எனக்கு கடிதம் எழுதுகையில், நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்கிறாப் போல, ‘இயேசு என் தெய்வம்’ என எழுதிவந்தார். அவருக்கு நான் பதில் எழுதியபோது, பிள்ளையார் சுழி இடத்தில், ‘இயேசு உன் தெய்வம்’ என எழுதி அனுப்பினேன்.
ம.ந.ரா.வின் பரந்த அனுபவம், வயசு சார்ந்த தீர்க்கம், அவர் வாழ்ந்த ஆணாதிக்க காலம் எல்லாம் பார்த்து அவர் எழுத்தில் நான் கண்ட ஆழ்மன வக்கிரப் பாத்திர வார்ப்புகள் என்னை எப்பவுமே வியப்படைய வைக்கின்றன. வாழ்க்கையோடு நெருங்கிய பரிச்சயம் அற்று இப்படிப் பாத்திரங்களை எழுத வராது. எனக்கு இன்றளவும் சில பாத்திர வார்ப்புகள் வாய்ப்பதே இல்லை. எழுதித் தோற்றும் இருக்கிறேன். ம.ந.ரா. ஆழ்மனதின் விசித்திர வக்கிரங்களைப் படம்பிடிப்பதில் வல்லவர். அவரிடம் பேசினால் சொல்வார். அவரது பெரும்பாலான கதைகள் வாழ்வின் நேரடி, அல்லது காது அனுபவத்தில் இருந்து பெறப்பட்டவை தாம். நாங்கள் அப்படி விஷயங்களை அடிவண்டலாக்கி கிடைக்கும் மதிப்பீடுகள் அடிப்படையில் ஒரு கற்பனை முலாம் பூசி மீள் உருச் செய்வோம். ம.ந.ரா. உயிரான பாத்திரங்களையே உலவ விடுவதாகச் சொன்னார். சுத்த நெய்ப் பலகாரங்கள் அவை.
தமது அருமை மனைவியுடன் திருச்சியில் ஒதுக்கமான, அமைதியான வாழ்வு வாழ்ந்து வந்தார் ம.ந.ரா. இடையில் உடல்நலக் குறைவினால் நிலைமை கட்டுமீறி ரயிலில் மருத்துவப் பாதுகாப்புடன் படுத்தபடி சென்னைக்கு தன் மகன் இல்லத்துக்கு வந்தார். ஒருமாத அளவில் அவர படுத்த படுக்கையாகவே இருந்தார். என் பதிப்பாள நண்பனிடம் சொல்லி அப்போது எங்களிடம் இருந்த ஒரு நாவலை, ‘ஓவியங்கள் நிறைந்த அறை’ என அதன் தலைப்பு, உடனே நாங்கள் வெளியிட்டோம். நானும் பதிப்பாளன் உதயகண்ணனும் அதை எடுத்துக்கொண்டு அவரை நேரில்போய் அவரது மகன் இல்லத்தில் சந்தித்தோம். சட்டென எழுந்து உட்கார்ந்து அந்த நாவலை எத்தனை ஆதுரத்துடன் பிரித்துப் பார்த்தார். அவருக்கு நாவலைப் பார்த்தது கண்கொள்ளாக் காட்சி. என்றால் எங்களுக்கு அவரை அப்போது பார்த்த காட்சியே கண் கொள்ளவில்லை.
அன்றில் இருந்து எனக்கு ஒரு சங்கல்பம். இன்றுவரை அவரை எழுதச்சொல்லி நான் தூண்டிக் கொண்டிருக்கிறேன். அந்த நிகழ்வுக்குப் பின் ஏறத்தாழ பத்து நூல்கள் வரை அவர் எழுதிவிட்டார். இந்நாட்களில் நான் மொழிபெயர்ப்புகள் சார்ந்து கவனப்பட ஆரம்பித்திருந்தேன். அதற்குமுன்பே ம.ந.ரா. சாகித்ய அகாதெமிக்காக சில மொழிபெயர்ப்புகள் செய்திருந்தார். நான் மொழிபெயர்க்க வைத்திருந்த சில ஆங்கிலப் படைப்புகளை அவரிடம் தந்து மொழிபெயர்க்கப் பணியளித்தேன்.
அன்தன் செகாவின் ‘ஸ்டெப்பி’ நாவல். மகா புல்வெளி, என ம.ந.ரா. செய்தார். பச்சைப் பசேல் புல்வெளிப் பயணம் அந்தக் கதை. பச்சைப்பசேல் அட்டை. உள் அட்டை ஒட்டும் தாளும் பச்சைப் பசேல். தவிர கதையையே பச்சைப் பசேல் மையில் அச்சிட்டு வெளியிட்டோம்.
கல்லூரிக் காலகட்டத்தில் நான் எழுத வந்தபோது ஆங்கிலத்தில் நான் வாசித்து மகிழ்ந்த சில படைப்புகளை மொழிபெயர்க்க என நினைவில் கொண்டிருந்தேன். அவற்றில் ரெண்டாவது சாமர்செட் மாமின் ‘கேக்ஸ் அன்ட் ஏல்’. நான் ‘முன்னணியின் பின்னணிகள்’ என செய்தேன். முதலாவது ‘அப் ஃப்ரம் ஸ்லேவரி’. புக்கர் டி. வாஷிங்டன் எழுதியது. ம.ந.ரா. அதை அழகாக ‘அடிமையின் மீட்சி’ என செய்தார்.
மொழிபெயர்ப்புகளில் ம.ந.ரா. காட்டும் சிரத்தையும் அக்கறையும் நான் எப்போதுமே வியக்கிற ஒன்று. கதை நிகழும் இடங்களைக் குறித்துக்கொண்டு முடிந்தால் ஒரு மேப், வரைபடமும் வரைந்து தந்துவிடுவார் ம.ந.ரா. தெரிந்த விவரங்களைத் தவறாமல் அடிக்குறிப்புகளாகத் தருவார். தெரியாத விவரங்களைத் தேடித் துருவி விசாரித்து கண்டடைந்து அடிக்குறிப்புகளாகச் சேர்ப்பார். ‘அடிமையின் மீட்சி’ மொழிபெயர்ப்பைக் கையில் வாங்கியதுமே மனம் விம்மியது. இது தமிழ்கூறும் நல்லுலகில் நன் மதிப்புரைகள் பெறும், என நான் யூகித்தேன். நூலின்அருமை கருதி, குமுதம் போன்ற பெரும் சுற்று இதழ்களே இதைக் கண்டுகொண்டன. மதிப்புரைகள் வழங்கின. இந்த மொழிபெயர்ப்புக்காக ம.ந.ரா. ‘நல்லி-திசை எட்டும்’ சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது பெற்றபோது, நான் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது. இந்தப் பரிசு அவரது தேக ஆரோக்கியத்தில் எப்பெறும் ஊட்டம் அளித்திருக்கும், என்பதை நாம் யூகிப்பதும் கடினம் அல்ல.
தற்போது சாமர்செட் மாமின் ‘Rain’ அவர் மொழிபெயர்ப்பில் வெளியானது. நமக்கெல்லாம் மழை விருப்பமானது. நாம் வெப்பப் பிரதேசத்தில் வாழ்கிறவர்கள். ஆனால் மேற்கத்தியர்களுக்கு மழை ஓர் இம்சை. ‘Rain rain go away, Little tommy wants to play’ என்று அவர்கள் பாலர் பாடலே எழுதுகிறார்கள். சாமர்செட் மாம் ‘மழை’ என்பதை இகழ்ச்சிக் குறிப்பாகவே பயன்படுத்துகிறார் என முன்குறிப்புடன் ம.ந.ரா. அதை ‘மழை’ என்று அல்ல – ‘மழைதாரை’ என மொழியாக்கம் செய்தார்.
‘மாற்றான் தோட்டம்’ அவர் மொழிபெயர்த்த உலகப் புகழ்பெற்ற சிறுகதைகள் தொகுதி. தாஸ்தயேவ்ஸ்கி, வில்லியம் ட்ரவர், சல்மான் ருஷ்டி, சீமாமந்தா, டி.ஹெச். லாரன்ஸ் ஆகியோர் கதைகளை உள்ளடக்கியது, அடுத்து வெளியானது.
தற்போது அயன் ரான்டின் ‘கீதம்’ மற்றும், ஜான் ஸ்டீன்பெக்கின் ‘முத்து’ ஆகியவை அவர் மொழிபெயர்த்து முடித்து அச்சுக்குக் காத்திருக்கின்றன.
இலக்கியமே மூச்சாக வாழும் ம.ந.ரா.வுக்கு இவ்வாண்டின் ‘புதுப் புனல்’ விருது வழங்கப்படுகிற தருணம் இது. அவரது இரு கரங்களையும் பற்றிக் குலுக்கி, பல்லாண்டு வாழ்க, என வாழ்த்துச் சொல்லி மகிழ்கிறேன். ம.ந.ரா.வின் கதைகளின் தனித்தன்மை பற்றி நான் எடுத்துக்காட்டிய சில துளிகளே அடையாளப்படுத்தி விடும். அவரது ‘கதை உலகில் ஒரு மேதை’ கதையைச் சொல்லி இந்த உரையை நிறைவு செய்யலாமாய் இருக்கிறது.
இளம் வயதிலேயே அபார நினைவாற்றலுடன் ஒரு இளைஞன். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும், அவரது புத்தகங்களை, அவர் எழுதிய கதைகளை யெல்லாம் சட்டெனச் சொல்கிற திறன் படைத்தவன் அவன். எந்தக் கதையின் பேர் சொன்னாலும், உடனே அந்த எழுத்தாளரைச் சொல்கிறான் அவன். தன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கிற ஒரு பிரபலம் ஆகாத எழுத்தாளரின் ஒரு கதையைச் சொல்லி, இது யார் எழுதியது என்று கேட்டு வம்பு செய்ய நினைக்கும் ஓருவர். அந்தக் கதையைக் கேட்டதுமே அவன், ”இது ஒரு புகழ்பெற்ற ஆங்கிலக் கதை. இதை இன்னார் எழுதினார்” என்று சொல்லி விடுகிறான்.
அப்போதுதான் கேள்வி கேட்ட நபருக்கு, தன் பக்கத்து வீட்டு எழுத்தாளர் ஒரு ஆங்கிலக் கதையைக் காப்பி அடித்து கதை எழுதியது தெரிகிறது, என்பதாகக் கதை முடிகிறது.
நானும் ம.ந.ரா.வும் காப்பி அடிப்பது இல்லை. மொழிபெயர்த்து விடுகிறோம்.
>>>
storysankar@gmail.com

·

Series Navigationவிக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘பழமொழிகளில் ‘வழி’