புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .

This entry is part 3 of 18 in the series 27 டிசம்பர் 2015

muthulingam

ஸிந்துஜா

 

கவிஞரும் , விமரிசனக் கட்டுரையாளரும் , சிறுகதைக்காரரும் , மொழிபெயர்ப்பாளருமான   க. மோகனரங்கன்  தான் தேர்ந்தெடுத்த

அ . முத்துலிங்கத்தின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு, அவரே மிகச் சிறந்த முன்னுரையும்  தந்திருக்கிறார் . . முத்துலிங்கத்தின் எவரையும்  மயக்கும் எழுத்தில் மோகனரங்கன்  மயங்கி இருப்பது ஆச்சரியத்தைத் தரவில்லை . வாழ்வில் எதிர்ப்பட்ட  பல்வேறு நிலப் பரப்புகளில், கதை சொல்லி தான் கண்ட, கேட்ட, உய்த்துணர்ந்த  விவரணைகளை , கலாச்சார முரண்பாடுகளை  புதிய அழகுடன் , விளக்க முடியாத கவர்ச்சியுடன்,ஒரு விதப் பெருமிதத்துடன் கதைகளாக மாற்றி வாசக அனுபவத்தை உயர்நிலைக்குக் கொண்டு செல்வதை மோகனரங்கன் தன்  முன்னுரையில் படம் பிடித்திருக்கிறார் .’ தன் சிறகு  நுனியில் ஒட்டியிருக்கும் மகரந்தத் துகளின் மூலம் பெருங்காட்டையே சுமந்தலையும் வண்ணத்துப் பூச்சி ‘ யாக அவர் முத்துலிங்கத்தைப் பார்ப்பது ரசிக்கக் கூடிய தரிசனமாக இருக்கிறது . கால வரிசை , பொருட்செறிவு , வடிவ அழகு என்று திட்டமிடலுக்குப் பிறகு தெரிவு செய்யப் பட்ட இக் கதைத்தொகுப்பை  வினோதமான வாழ்வியல் சித்திரங்களினால் ஆனதொரு அழகிய கம்பளமாக மோகனரங்கனோடு சேர்ந்து நாமும் காண்கிறோம் .

 

இம்முன்னுரையில் , இரு விஷயங்களைப் பற்றிச் சில வரிகள் :

 

“கதையின் அடிப்படை    இயல்புகளில் தலையாயது வாசிப்பவனை வசியம்  செய்வது .  இதனை இவரளவு கடைப் பிடிப்பவர்கள் வேறு

எவருமில்லை ” என்கிறார் மோகனரங்கன் .  சந்தேகமாகத்தான் இருக்கிறது  ! வாசிப்பவனை வசியம் செய்தவர்களின் வரிசையில்  , தி. ஜானகிராமனுக்கும், கு. ப.ரா. வுக்கும் , சுந்தர ராமசாமிக்கும் , சுஜாதாவுக்கும் ,  இந்திரா பார்த்தசாரதிக்கும் , ஜெயமோகனுக்கும் இடம்

இல்லையா ? ஸாரி !

 

இன்னொரு இடத்தில் மோகனரங்கன்  முத்துலிங்கம்  வெகுஜன எழுத்தாளருக்குரிய புகழைப் பெற்றிருப்பதாகக் கூறுகிறார். சிறுபத்திரிகைக் களத்தில் வெகுஜனப் புகழா ? உழக்கில் கணக்குப் பார்த்தால், சிறுபத்திரிகை வாசகக் கூட்டம் என்று ஒரு நாலு அல்லது ஐந்து ஆயிரம் பேர் இருப்பார்களா ? (சிறுபத்திரிகை சந்தா விவரம் இதை நூற்றில் கணக்குப் பார்க்கவே பிரயத்தனப் படும் ) இந்த ஆயிரங்களில், நாம் எவ்வளவு கோஷ்டி வைத்திருக்கிறோம் ? திருநெல்வேலிக்கு ஒன்று, தஞ்சாவூருக்கு ஒன்று , இடது சாரி , வலது சாரி இடவல சாரி  , மாய எழுத்து , தலித் , பெண் எழுத்தாளர் , பிராமணர்,  பி . அல்லாதார் , புலம் பெயர்ந்தோர் …இது ஒரு முடியாத லிஸ்ட் .முடிந்தது என்று நினைக்கும் போது  இன்னொன்று உள்ளே புகுந்து விடும் . இந்த சிதறுண்ட எண்ணிக்கையில் வெகுஜனப் புகழ் எங்கே இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

 

முத்துலிங்கத்தின்  கதைகள் ஏற்றுக் கொண்டுள்ள கருக்கள் , சாதாரண மனிதர்களின் அசாதாரணமான நிலைப்பாடுகளை அலசிப் பார்க்கின்றன .”   மொசு மொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் ”  கதையில் ,வரும் பாத்திமாவுக்கு, போதைப் பழக்கம் மிஞ்சி விட்ட கணவனால் வாழ்க்கையை நடத்துவதே பெரும் பிரச்சினையாக இருக்கிறது . நாளாக ஆக, அவன் நோய் அவனைத் தின்னத் தொடங்குகிறது .ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம் பெண்களுக்கு ஆடுகளை இலவசமாகக் கொடுகிறது . அவள் அவர்களிடம் போய்க் கேட்கையில், அத்தகைய உதவி, கணவர் இறந்து விட்ட பெண்களுக்கு மட்டும்தான் என்று சொல்லி விடுகிறார்கள் .பாத்திமா   திரும்ப ,  வாழும் வாழ்க்கைக்குத்  திரும்புகிறாள் . ஒரு நாள் இரவு ,அவள் கணவனிடம் இருந்து வினோத ஒலிகள் வருகின்றன . முழி பிதுங்கி வெள்ளையாகத் தெரிய ,பச்சைத் திரவம், கடவாயில் வழிகிறது. அந்த இடத்தில் துர்நாற்றம் . அவள் தனது மகனை எழுப்புகிறாள் .அவன் மருத்துவரிடம் போகத் தயாராக நிற்கிறான் . பாத்திமாவின் முகத்தில் மாறுதல் தெரிகிறது. அவள் நகராமல் அங்கேயே நிற்கிறாள் . ..அதற்குப் பின், அவளிடம் ஆறு ஆடுகள் இருக்கின்றன !

 

முத்துலிங்கம் எதையும் ‘பட்’ டென்று போட்டு உடைக்கும் ஜாதி அல்லர்.  வைத்த குறி தப்பாமல் அவர் எதைச் சொல்ல விரும்புகிறாரோ, அதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார். ‘ வம்ச விருத்தி ‘ இதற்கு மிகச் சிறந்த உதாரணம் . அஸ்காரியின் வம்சத்தில் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரே ஒரு ஆண்  வாரிசுதான் . அஸ்காரிக்கு  அவரது இரு மனைவிகளிடமிருந்து கிட்டிய ஆறும்  பெண் குழந்தைகளே .. ஆண்  குழந்தை வேண்டும்  என்கிற வேண்டுதலுடன் ஹஜ் யாத்திரை போய் வந்த பிறகு அவருக்கு ஆண்  குழந்தை பிறந்து வளர்கிறது .  அவனுக்குப் பனிரெண்டு வயதாகும் போ து அஸ்காரி அவனை மலை ஆடு வேட்டைக்கு அழைத்துச் செல்கிறார் . அவர் இருக்கும் கிராமத்தில் ஒரு  சடங்கு – ஒரு சிறுவன் முதல் முறையாகக் காட்டுக்குப்  போய் ஒரு மிருகத்தையோ , பறவையையோ வேட்டையாடி வரும் போதுதான் , உண்மையான ஆண்மகன் ஆவான் . அஸ்காரி தன்  மகனின் முதல் வேட்டையில் அவன் ஒரு மலை ஆட்டை வேட்டை ஆட வேண்டும் என்று வெறியில்  இருக்கிறார். ஏனெனில் அவருடைய வாழ்நாளில் , அவர் அறுபது , எழுபது முறை வேட்டைக்குச் சென்றிருந்தும்  இரண்டு  முறைதான் அவரால் மலை ஆட்டை கொல்ல  முடிந்திருக்கிறது . அஸ்காரியின் மகன் அவனது முதல் வேட்டையிலேயே  ஒரு மலை ஆட்டைக் கொன்று விடுகிறான் . அவன் அல்லாவின் கருணையினால் முழு ஆண்  மகனாகி விட்டான் என்று அப்பாவும் மகனும் குதூகலம் அடைகின்றனர் ..  இந்த உலகின் பரப்பிலே,  பாகிஸ்தானின் வடமலைப் பகுதிகளில் மட்டுமே இந்த மலை ஆடுகள் உலவி வந்தன .அவற்றின் உலக எண்ணிக்கை நேற்று வரை 84 ஆக இருந்தது .இன்று அது 83 ஆக சுருங்கி விட்டது !

 

முத்துலிங்கத்தின் வாழ்க்கை அனுபவ  உலகம்  பிரமிக்க வைக்கிறது . அவரது கதைகளில் இவ்வனுபவவுலகத்தின் சாரம் பிழியப்பட்டு வைக்கப் படுகிறது . பல்வேறு நாடுகளைப்  பற்றி ,அந் நாட்டினரைப் பற்றி , அவர்களின்  பழக்க வழக்கங்கள் பற்றி , வாழ்வாதார உணர்வுகளைப் பற்றி ,மிக விஸ்தாரமாகவும் , சுவாரஸ்யமாகவும் இக் கதைகளில் விவரணைகள் காணக் கிடைக்கின்றன. ஆனால் இவற்றுக்கு அப்பால் இக் கதைகளின் அடி நாதமாக , மனிதனின் மேன்மையும்  , மனிதத்துவமும்  பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. மோகனசுந்தரம் முன்னுரையில் குறிப்பிடுவது போல் ” தன்னை வைத்துப் பிறரை அளவிடுமிந்த அங்குலப் புழுத்தன்மையானது , முத்துலிங்கத்தின் கதைகளில் எங்கும் தென்படுவதில்லை .”

 

தலைப்பிலிருந்தே  கண்களைக் கண்ணீரால் கட்டிவிட்டு , மேலே படிக்கவிடாமல் மனிதாபிமான மசியைத் தீற்றி வலம் வரும் சோகக் கதைக் காரர்கள், இத் தொகுப்பில் உள்ள ” நாளை ” என்ற கதையைப் படிக்க வேண்டும். அண்ணனும் , தம்பியுமாக இரு சிறுவர்கள் , பெரியவனுக்கு பதினொன்று, சிறியவனுக்கு ஆறு வயது, . ராணுவம் அவர்கள் இருக்கும் இடத்துக்கு வருகிறது என்ற பீதியில் எல்லோரும் அவரவர் இருப்பிடத்தை விட்டு ஓடுகிறார்கள் .அவர்கள் ஜனக் கூட்டத்தில் பெரிய அளவில்  எத்துண்ட இரண்டு சிறிய இலைகள் போல தத்தளிக்கிறார்கள்  அண்ணனும் , தம்பியும் , உணவைத் தேடிச் செல்கிறார்கள் . அக் குழந்தைகளை விட சற்று மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்னொரு குழந்தையைப் பார்த்து தம்பியின் ஏக்கமும் ,செத்துப் போன பெற்றோர்களின் நினைவு  பெரியவனுக்கு வரும் போது அவனுக்கு , சின்னவனின் மேல் இருக்கும் தாங்க முடியாத பாசமும்  எந்த வித ஒப்பனையும் அற்ற சின்னஞ் சிறு சொற்களில் ஒரு கவிதையைப் போல் வெளிப்படுத்தியிருக்கிறார் கதை ஆசிரியர்

உண்மையில் இக் கதைச் சுருக்கம் முத்துலிங்கத்துக்குச் செய்யும் அநியாயம் ! வாசகர்கள்  இந்தக் கதையைப் படிக்க வேண்டும் .

 

முத்துலிங்கத்தின் கதைகளின் மிக முக்கியமான , மேலோங்கிய அம்சம், அவரைப் படிக்கும் வாசகனின் இதழில் பெரும்பாலான சமயங்களில்  தங்கியிருக்கும் புன்னகை .  போகிற போக்கில் எழுதுவது போல , அப்படி ஒரு பிரமிப்புத் தரும் இயல்பான தொனியில், பல

கதைகளிலும் , நகைச்சுவை விரவிக் கிடக்கின்றது :

 

” தோல்வி வெற்றிக்கு முதல்படி என்ற முதுமொழியில் எனக்கு இருந்த பற்றுக் காரணமாக இந்த வேலை தொடர்ந்தது . ஒரு விளையாட்டரங்கம் கட்டப் போதுமான படிகள் என்னிடமிருந்தன  . (ராகு  காலம் )

 

” நடக்கும் போதும் கொடி போலவே அசைவாள் .இவளுக்காகத் தேரை விட்டுப் போவதற்கு பல பாரி மன்னர்கள் என் வகுப்பிலேயே படித்துக் கொண்டு இருந்தார்கள் .( தாத்தா விட்டுப் போன தட்டச்சு மெசின் )

 

”  மூடர்களுக்கெல்லாம் மூடன்  கம்சன்தான் என்பது என் கணிப்பு . அல்லாவிடில் தன்  தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு எமனாவான் என்று தெரிந்திருந்தும் தேவகியையும் , வாசுதேவரையும் ஒரே சிறை அறையில் பூட்டி  வைத்திருப்பானா ?  ( பூமாதேவி )

 

முத்துலிங்கத்தின்  பல கதைகளில் செக்ஸ் பற்றிக் காணப்படும் வர்ணனைகள் திணிக்கப்பட்ட எழுத்தாகக் காணப்படாமல், சம்பவக் கோவைகளின் அழுத்தத்திற்காக பயன்படுத்தப் பட்டிருப்பது பாராட்டுக்குரியது . மனித வாழ்க்கையில்  ஓர்  இன்றியமையாத அம்சமான உடலின்பம் பற்றியோ, உடல் உறுப்புக்கள் பற்றியோ எழுதுவது தாக்குதலுக்கு உட்படுவது தமிழில் பரிதாபகரமான நிலை. முத்துலிங்கத்தின் சில வார்த்தைப் பிரயோகங்கள் :

 

” பொய்கள் தங்களுக்கு விதித்த எல்லைகளை அடைந்து விட்டன… .எல்லா உண்மைகளையும் சொல்லி  விட்டான் . ஒரு பகல் காலத்து மின்னலைப் போல் அவள் கட்டிலில் இருந்து துள்ளிக் குதித்தாள் .குளியல் மேல் அங்கியை நின்ற இடத்திலேயே கழற்றி குவியலாக விட்டாள் .அவளுடைய வழுவழுவென்ற நீண்ட கால்கள் அற்புதமான ஒரு கறுப்பு முக்கோணத்தில் சந்தித்துக் கொண்டதை அவன் பார்த்தான். அப்போது வெளியே சீறிய தன்  மூச்சுக் காற்றுக்களை கட்டுப் படுத்துவதற்கு அவனுக்கு இரண்டு சுவாசப்பைகளும் போதவில்லை . (போரில் தோற்றுப் போன குதிரை வீரன் )

 

“அவளுடைய அலங்காரம் அன்று முற்றிலும் மாறியிருந்தது.ஆழமான கழுத்துடன் , இறுக்கமான மஞ்சள் பிளவுஸில் வந்திருந்தாள் . வேப்பம் பழ சைஸ் செயற்கை முத்துக்களால் செய்த மாலை ஒன்று அவள் ஸ்தனங்களுக்கிடையில் சிக்கிக் கிடந்தது . இதைப் போடுவதற்கு அவள் மிகுந்த சிரமப் பட்டிருக்க வேண்டும். இதைக் கழற்றும் போது  இன்னும் சிரமமிருக்கிறது . ஒன்றிரண்டு முத்துக்கள் அறுந்து விழுவதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தன . ( கருப்பு அணில் )

 

“ம்வாங்கி வெளிவாசலில் அப்படியே குந்திப் போய் இருந்தார் .எமிலியும் , மகனும் திரும்பிய போது கூட அப்படியேதான் இருந்தார் . எமிலி தன்  மகனைத் தொப்பென்று கீழே போட்டு விட்டு வேகமாக அவரிடம் வந்தாள் . சம வயதுடைய இரண்டு பப்பாளிப் பழங்கள் போல அவள் மார்புகள் குலுங்கின . ( எதிரி )

 

இச் சந்தர்ப்பத்தில் சில வருடங்களுக்கு முன், ஒரு தீவிர இலக்கிய இதழில் ( பெயர் வேண்டுமா ? காலச்சுவடு ) சுஜாதாவின் மறைவை ஒட்டி எழுதப்பட்ட இரங்கல் கட்டுரையில், ” பெண்களைப் பற்றியும்  , பெண்களின்  மார்பகங்களைப்பற்றியுமான  தனது முதிரா இளைஞர் மனத்து வெளிப்பாடுகளை எழுதியது சுஜாதாவுக்கு பெருமை சேர்ப்பதாக  இல்லை ” என்று எழுதப்பட்டிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது . அவர் முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்திருந்தால், என்ன மாதிரியான மனம் முத்துலிங்கத்துக்கு என்று சொல்லி

யிருப்பார் ?

 

நாற்பத்தைந்து கதைகள் அடங்கிய இத்தொகுப்பை , காலச்சுவடு பதிப்பகம் சிறந்த  முறையில் கொண்டு வந்திருக்கிறது. இத் தொகுப்பில் நான் சிறந்த கதைகள் என்று நினைப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன் :

 

1.குதம்பேயின் தந்தம் , 2. ‘ஒரு சாதம்’ , 3. வம்சவிருத்தி , 4.வடக்கு வீதி , 5.பூமாதேவி ,6. யதேச்சை , 7.ஒட்டகம் , 8.கொழுத்தாடு பிடிப்பேன் , 9.அடுத்த புதன் கிழமை  உன்னுடைய முறை , 10. மொசுமொசு வென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் , 11.தாத்தா விட்டுப் போன தட்டச்சு மெசின் , 12.போரில் தோற்றுப் போன குதிரை வீரன் , 13.பூமத்தியரேகை , 14.எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை , 15.மகாராஜாவின் ரயில் வண்டி , 16.நாளை , 17. தொடக்கம் , 18. ஆயுள் , 19.விருந்தாளி , 20. அம்மாவின் பாவாடை , 21. கறுப்பு அணில் , 22. எதிரி , 23.ஐந்தாவது கதிரை , 24, தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் , 25. ராகு காலம் , 26. தாழ்ப்பாள்களின் அவசியம் , 27.புவியீர்ப்புக் கட்டணம் , 28.வேட்டை நாய் , 29.புகைக்கண்ணர்களின் தேசம் /

30.சுவருடன் பேசும் மனிதர் , 31. பராமரிப்பாளர் , 32. அமெரிக்காக்காரி , 33. குதிரைக்காரன் , 34.மெய்க்காப்பாளன் , 35.ஐந்து கால் மனிதன் , 36.புளிக்கவைத்த அப்பம் , 37. எங்கள் வீட்டு நீதிவான் , 38.தீர்வு , 39. எல்லாம் வெல்லும் , 40. மூளையால் யோசி , 41. சூனியக்காரியின் தங்கச்சி , 42. நிலம் என்னும் நல்லாள் , 43. ரயில் பெண் , 44. ஓணானுக்குப் பிறந்தவன் , 45. எலி மூஞ்சி .

 

————————————————————————————————————–

 

நூல் : கொழுத்தாடு பிடிப்பேன்

ஆசிரியர் : அ . முத்துலிங்கம்

விலை : ரூபாய் 390.00

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் ,

669, கே. பி. ரோடு ,

நாகர்கோயில் – 629 001.

 

Series Navigationஎனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 313-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *