புத்தகங்கள்

நீலச்சேலை வானில்
சிவப்பு முந்தானை
காணப்படாமலேயே
கரைந்துவிட்டது

விமானப் புகைவில்
காணப்படாமலேயே
கலைந்துவிட்டது

அழகான அந்தப் பூ
ரசிக்கப்படாமலேயே
உதிர்ந்துவிட்டது

கன்னியாகவே
அவள் வாழ்க்கை
கழிந்துவிட்டது

அழகான கோலம்
காணப்படாமலேயே
சிதைந்துவிட்டது

சேலத்து மல்கோவா
ருசிக்கப்படாமலேயே
அழுகிவிட்டது

பொத்திப் பொத்தி வைத்த
விக்டோரியா ரூபாய்
தொலைந்துவிட்டது

பொம்மை அழுகிறது
விளையாட குழந்தை
இல்லையாம்

‘கலையாமல் கரையாமல்
உதிராமல் தொலையாமல்
அழுகாமல் அழாமல்
காத்திருக்கிறேன்
ஒருநாள் புரட்டப்படுவேன்’

நம்பிக்கையுடன் புத்தகம்

அமீதாம்மாள்

Series Navigationதுரித உணவுஇயற்கையை நேசி