புள்ளின்வாய்கீண்டான்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

வளவ. துரையன்

புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக்

கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய்

பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார்

வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று

புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய்

குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே

பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால்

கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய்.

இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள்.

கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில்  ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள்.

மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்;

”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ

வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென்

காகுத்தநம்பீவருக’              என்றுதானேஅழைக்கிறாள்.

ஆயர்சிறுமிகள்  தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில்,

“சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்”  என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள்.

பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள்

“இரக்கமேன்ஒன்றும்இலாதாய்

இலங்கைஅழித்தபிரானே’  என்றுதானேமுறையிடுகிறார்கள்.

எனவேநாம்இருவரையும்இணைத்துப்பாடுவோம்எனஎண்ணுகிறார்கள். அதனால்தங்கள்குலதெய்வமானகண்ணனைமுதலில் ‘புள்ளின்வாய்கீண்டான்’ என்கிறார்கள். இங்குகொக்குவடிவில்வந்தஅசுரனின்கதைபேசப்படுகிறது.

கம்சனால்ஏவப்பட்டபகன்எனும்அசுரன்கொக்கின்வடிவம்எடுத்துக்கண்ணனைவிழுங்கவந்தான். கண்ணன்அதன்வாயைக்கிழித்துஅவனைமாய்த்தான்.  பெரியாழ்வாரும்இதை,

‘பள்ளத்தில்மேயும்பறவையுருக் கொண்டு

கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு

புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’

என்று அருளிச் செய்வார்.

பொதுக்கோ என்பதால் நம் இசைவு கொண்டும் இசைவு இன்றியும்  விரோதிகளைப் போக்கல் அவன் பணி என்பது விளக்கப் படுகிறது. பகாசுரன் மட்டுமன்று மூலத்தில் அவனைச் சொன்னதால் அவனைப் போன்று பலரும் உண்டு என்பது பயங்கரம் அண்ணங்காச்சரியார் ஸ்வாமிகளின் வியாக்கியானம்.

அடுத்து இராவணன் ’பொல்லா அரக்கன்’ என்று குறிப்பிடப்படுகிறான். வீடணன் போன்று நல்ல அரக்கர்களுமிருப்பதால் அவன் பொல்லாஅரக்கன் என்று கூறப்படுகிறான். சூர்ப்பனகை கூட ’விபீஷணனை தர்ம வழிப்படி நடப்பவன்; ராக்ஷஸச் செயல்கள் அற்றவன்’ என்று கூறுவாள்.

அனுமன் இலங்கையில் வீடணன் இல்லத்தைக் கண்டபோது அவனைப் பார்த்து,

”உற்று நின்று அவன் உணர்வைத் தன்னுணர்வால் உணர்ந்தான்.

குற்றம் இல்லாது ஓர் குணத்தின்ன் இவன் எனக் கொண்டான்”

என்று உணர்ந்ததாகக் கம்பர் பாடுவார்.

இராவணன் என்ன செய்தான்?  உயிரையும் உடலையும் பிரிப்பது போலவும், தாயையும் தகப்பனையும் பிரிப்பது போலவும் பெருமானையும் பிராட்டியையும் பிரித்தான்.

அவனைக் குறிப்பிடும்போது,

‘சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையில் கடுவிசை அரக்கன்”   என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்வார்.

நம்மாழ்வாரும் திருக்குறுந்தாண்டகம் 15—இல் ‘முன் பொலா இராவணன் தன் முது மதில் இலங்கை’ என்பார்.

”வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும்

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்

தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும்

உடைய மிக பராக்கிரமசாலியான இராவணனை மிகச் சாதாரணமாக இராமன் கிள்ளிக் களைந்தான்” என்கிறார்கள். நந்தவனத்தில் நல்ல மலர்க்கு நோய் வந்தால் அந்த மலரை நகத்தால் கிள்ளுவதுபோல் இராமன் கிள்ளிப் போட்டானாம். தங்கள் கணவர்களின் பிரதாபங்களை  வீரப் பத்தினிகள் மிகச் சாதாரணமாகச் சொல்வதற்கு இது எடுத்துக் காட்டு.

கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கியதைச் சாதாரணமாக,

’கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய்’ என்பார் பரகாலநாயகி. மேலும் கிள்ளி என்று கூறப்படுவதால் நகத்தால் கிள்ளின நரசிம்ம அவதாரமா எனத் தோன்றும். ஆனால் அசுரன் என்று சொல்லியிருந்தால் இரணியனைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அரக்கன் என்று கூறப்படுவதால் இராவணனே ஆவான்.

”அப்படிக் கிள்ளிப் போட்ட இராமனின் பெருமையையும், புகழையும், வீரத்தையும் கீர்த்திமையும் பாடிக் கொண்டு அனைவரும்நோன்பு நோற்கச்   சென்று விட்டனர். அவர்களுக்கு பாட்டே பிரயோஜனமாகும். அவர்களுக்கு பாட்டே, திருநாம சங்கீர்த்தனமே தாரக மந்திரமாகும்.

”தானுகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடி………….பூங்கோவலூர் தொழுதும்போது நெஞ்சே” என்பார் திருமங்கை மன்னன்.

”வெகுதூரம் நடந்து, பசியினால் வாடிய மனத்தை உடையவர்களுக்கு, புண்டரீகாக்ஷனுடைய திருநாம ஸங்கீர்த்தனமாகிய அம்ருதம் கட்டுச் சோறாகிறது. என்று கருட புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

பெண்ணே! சிறு பிள்ளகள் கூட எழுந்து போய்விட்டார்கள். நீ சென்று எழுப்ப வேண்டிய பிள்ளகளும் போனபின் நீயும் கிடப்பதேனோ;

’எங்கே போனார்கள்’ என்று கேட்க ’நோன்பு நோற்கும் இடமான பாவைக்களம் போய்விட்டனர்’ என்று பதில் சொல்கிறார்கள். நெற்களம் என்று சொல்வதைப் போல் பாவைக்களம் என்று கூறுகிறார்கள்.

உள்ளே இருப்பவளோ,

”அவர்கள் எல்லாரும் அறியாச் சிறு பிள்ளைகள். பொழுது இன்னும் விடியவில்லை என்பதை அறியாதவர்கள். நீங்கள் சுக்கிரன் உதயமானதும் வாருங்கள் “ என்கிறாள்.

வெளியே இருப்பவர்கள் ”சுக்கிரன் உதித்து விட்டது வியாழன் அஸ்தமனமாகி விட்டது.” என்று பதில் சொல்கிறார்கள். அதாவது குருவாரம் போய் சுக்கிர வாரம் வந்தது. வியாழன் முடிந்து வெள்ளி ஆரம்பித்து விட்டதால் ஆண்டாள் திருப்பாவை விரதம் ஆரம்பித்த நாளும் வெள்ளிக்கிழமையாக இருக்க வேண்டும் என்று ஆசாரியார்கள் விளக்குகிறார்கள்

திருப்பாவை  வானவியலை மேலும் சோதிட இயலை இவ்விடத்தில் காட்டுகிறது.

சுக்கிரன் உதயமும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் நடந்தால், சுக்கிரன் தங்கும் ராசிக்கு 7ஆம் ராசி மேஷம், ரிஷபம், மிதுனம் ஏதாவது ஒன்றில் வியாழன் இருக்க வேண்டும். மார்கழியில் சூரியன் தனுர் ராசியில் இருக்கும். சூரியனிடத்திலிருந்து சுக்கிரன் 48 டிகிரி தூரத்திற்கு மேல் செல்ல மாட்டார். எனவே சுக்கிரன் துலாம், விருச்சிக, தனுசு ராசிக்குள் இருத்தல் வேண்டும்.

இவற்றை நன்கு ஆராய்ந்த மு,இராகவையங்கார் இது ஆண்டாளின் கால ஆராய்ச்சிக்கு உதவுகிறது என்கிறார்.

சுக்கிரன் உதயமும் வியாழன் அஸ்தமனமும் ஒரே நேரத்தில் நடந்ததாக வான நூல் வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

அவையாவன :

கி. பி 600—இல் ஒரு நாள்—-நவ-27

கி. பி 731—இல் ஒரு நாள்—–டிச-18

கி. பி 885—இல் ஒரு நாள் —-டிச—25

கி. பி 886—இல் ஒரு நாள்—-டிச—14

இவற்றையெல்லாம் ஆராய்ந்த ஆய்வாளர்கள் ஆண்டாளின் காலம்

கி.பி 731 எனும் முடிவுக்கு வந்துள்ளனர். ஆனால்  கால மாற்றத்தால் இப்போது வெள்ளி 45 டிகிரி தென்கிழக்கில் தெரிகிறது.

உள்ளே கிடப்பவள்,

“நீங்கள் கண்ட நட்சத்திரங்கள் எல்லாம் வெள்ளியும் வியாழனும் என்பீர்கள். ஏனென்றால் எந்த மலையைப் பார்த்தாலும் நெடுமாலே வாவென்று கூவும் தன்மை கொண்டவர்கள் நீங்கள். பொழுது விடிந்த்தற்கு வேறு ஏதேனும் அடையாளம் உண்டா?” என்று கேட்கிறாள்.

உடனே இவர்கள்,

‘புள்ளும் சிலம்பின காண்’ என்கிறார்கள். அதாவது

”பறவையெல்லாம் விழித்து விட்டன. அவை கூவிக்கொண்டும் இருக்கின்றன. இது பொழுது விடிந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.  எனவே நீ எழுந்து வா” என அழைக்கிறார்கள்.

ஏற்கனவே ஆறாம் பாசுரத்தில் ’புள்ளும் சிலம்பின காண்’  என்றும் ஏழாம் பாசுரத்தில் ‘கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து பேசியது’ என்றும் சொன்ன ஆண்டாள்  இப்போது சொன்னதையே திரும்பச் சொல்வது போலத் தோன்றும்.

ஆனால் ’அப்போது சொன்னது கூட்டுக்குள் இருந்து கொண்டு கூவினதைச் சொன்னதுவாம். இப்போது சொல்வது கூட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லும்போது கூவுவதைச் சொன்னதுவாம்.’

”கூர்ந்து கவனித்தால் அங்கு முதலில் சாமான்யமான பறவைகளைச் சொன்னாள். இங்கே சில முக்கியமான பட்சிகளைச் சொன்னாள். அதாவது இப்போது குயில், கருடன், ஹம்சம் போன்றவைகளைக் கூறுகிறாள்” என்பது முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரின் வியாக்கியானம் ஆகும்.

”அறிவற்ற பறவைகளின் சத்தத்தைக் கொண்டோ காலத்தை நிர்ணயிப்பது?” என்று அவள் உள்ளே பேசாமல் கிடந்தாள்.

’நாங்கள் உன்னை எழுப்புவதற்காகச் சொல்வதை எல்லாம் கேட்டு நீ பதில் சொல்லிக் கொண்டு கிடக்கிறாய். உன் கண்ணழகால் கொண்ட கர்வமோ?” என எண்ணிப் ’போதரிக் கண்ணினாய்’  என்றழக்கிறார்கள்.

போது என்பது பூவையும், அரி என்பது மானையும் குறிப்பதால் அவள் கண் பூவையும் மான் கண்ணனையும் ஒத்தது போன்றும் உள்ளது என்பது பொருள்.

அரி என்றால் வண்டு எனும் பொருளும் உண்டு, பூவின் மீது வண்டிருந்தாற் போல கண்களை உடையவள் என்பதும் பொருள்.

அரி என்றால் பகை என்பது பொருள்; பூவிற்குப் பகையாக அழகை உடைய கண்களை உடையவள் என்பதும் பொருள்.

நீ கண்ணழகு உள்ளவள்தான். அவன் கண்ணழகெல்லாம் உன் கண்ணழகில் தோற்றுவிடும்தான். உபாஸ்ய தேவதையான உன்னைத் தேடி உபாஸகனான அவன்தான் வர வேண்டும் என்பது சரி; இந்த கண்ணழகு எனும் வலையால் கண்ணனைப் பிடித்து எங்களுக்கு அளிப்பாய் என நினைத்தோம். ஆனால் உன் கண்ணழகே எங்களுக்கு வருத்தம் உண்டாக்குகிறதே! சூரியன் உதிக்குமுன்னே நம் உள்ளமும் உடலும் குளிர நீராட வேண்டாமோ?” என்று அவளிடம் வேண்டுகிறார்கள்.

பகவானைப் பிரிந்த பரதாழ்வன் போல உட்புகுந்து நீராட வேண்டும் என்பது இங்கே வியாக்கியானம். நீராடல் என்பது இவ்விடத்தில் கண்ணனுடைய குணங்களை அனுபவித்தலாம்

மேலும் பேசுகிறார்கள்.

“இப்படி வீணாகப் படுக்கையிலே கிடக்கலாமா? கண்ணன்  வந்தால் அவனுடன் சேர்ந்து பள்ளிகிடக்க வேண்டிய நீ தனியாகப் பள்ளி கொள்வதா?  கண்ட இடமெங்கும் நெல் விளைந்து கிடக்க உதிரி நெல் பொறுக்கலாமா?

நீ அழகுப் பதுமை போன்றவள்; இந்த நாள் ஒரு நல்ல நாள்; நம்மையும் கன்ணனையும் ஊராரே இசைந்து சேர்க்க எண்ணுகின்ற நாள்; இது போன்ற நாள் பிறகு கிடைக்காது. அவனோடு கலந்த உன் உடலைக் காண ஆசை வைத்துள்ள எங்களிடம் அதைக் கள்ளமாய் மறைக்காமல் வந்து கூடுவாயாக. எழுந்து வா”

இப்பாசுரத்தின் மறைபொருள் அர்த்தங்களாக ஒரு சிலவற்றைக் கூறுவார்கள்;

புள்ளின் வாய்——-அகங்காரம்

பொல்லா அரக்கன்—–மமகாரம்

பிள்ளைகள்——பாகவதர்கள்

குடைந்து நீராடுவது—–பாகவதருடன் கலந்து பகவத் அனுபவம்

பெறுவது

பாடி——–கல்யாண குணங்கள் பாடி

பாவைக் களம்——அனுபவிக்கும் இடம்

வெள்ளி—–பரிசுத்த ஞானம்

வியாழன்——அஞ்ஞானம்

இப்பாசுரம் தொண்டரப்பொடியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்.

பாவாய் என்றால் பரம ஏகாந்தி என்பது பொருள். ஆழ்வார் பெருமக்களில் இவர் அரங்கநாதனைத் தவிர வேறு எம்பெருமானைப் பாடாத பரம ஏகாந்தி ஆவார்.

நன்னாளால் என்பது மார்கழித் திங்கள் மதி நிறந்த நன்னாளைக் குறிக்கும் இவர் மார்கழியில் தோன்றினார்

கள்ளம் தவிர்த்து என்பது எம்பெருமான் இவருக்காக பொன்வட்டில் கள்ளமாய் எடுத்து வந்ததைக் குறிக்கும். மேலும் இவர் பாசுரத்தில் ‘சூதனாகிக் கள்வனாகி என்றும் ’கள்ளமே காதல் செய்து’ என்பதை அருளிச் செய்தார்.

புள்ளும்சிலம்பின என்பதும் இவருக்குப் பொருத்தமே. பறவைகள் குடியுள்ள சோலையே இவர் பூப்பறிக்குமிடமாகும்.

பள்ளிக் கிடத்தியோ என்று இவரும் பள்ளிகொண்ட பெருமாளுக்கு திருப்பள்ளிஎழுச்சி பாடினார்’

எனவே இப்பாசுரம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரை எழுப்புகிறது எனலாம்

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *